இரு வழிகள் இரு இலக்குகள்

இரு வழிகள் இரு இலக்குகள்

„இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்'.| (மத்தேயு 7:13-14) என்று இறைமகன் இயேசு கிறிஸ்து அருளியுள்ளார்.
„நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான்| (யோவான் 10:9). „நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;, என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் (பரமதகப்பனிடத்தில்) வரான்' (யோவான் 14:6).


இவ்வசனங்களில் சொல்லப்பட்டுள்ள உண்மைகளைக் காண்போம். விண்ணுலக மோட்சவீட்டுக்குச் செல்ல கிறிஸ்துவே வாசலாகவும் வழியாகவும் உள்ளார். இவ்வாசல் வழியே நுழைந்து, குறுகிய பாதையில் செல்கிறவர்கள் பேரின்பவீட்டை அடைவார்கள். கிறிஸ்துவாகிய இவ்வழியினாலன்றி பிற  வழிகளில் விண்ணுலகம் செல்லமுடியாது. இயேசு கிறிஸ்துவே உலகின் பாவ இரட்சகர். அதற்காக அவர் சிலுவையாகிய கொலைக் கருவியில் பலியாக மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்துள்ளார். இங்கு தரப்பட்டுள்ள வரைபடத்தில் இச்சத்தியங்கள் விளக்கப்பட்டுள்ளன.


குறுகிய வழி: கிறிஸ்துவே இந்தக்குறுகிய வழி. குறுகிய வாசலைக் கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் அலைகின்றனர். பாவம் நீங்கி முக்தி அடைய இயலாமல் மருளுகின்றனர். நண்பரே, இயேசுவே வாசல்:  அந்த வாசல் வழியால்     நுழையுங்கள். நாம் நமது பாவத்தின் அகோரத்தை மெய்யாக உணர்ந்து, கிறிஸ்து நமக்காக இரத்தம் சிந்தி மரித்துள்ளார் என்பதை நம்புங்கள். இவ்வுண்மையை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, அவரிடம் வாருங்கள். உங்களை அவரிடம்  ஒப்படையுங்கள். இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னித்து சுத்திகரிப்பார். மெய்ச்சமாதானமும் இன்பமும் அடைவீர்கள்.
விசாலமான வழி: மனிதன் பின்பற்றக்கூடிய பல தத்துவ ஞானங்கள், மார்க்கங்கள், நற்கிரியைகள் பலவும் உள்ளன. அவை சிந்தையில் நிறைவைத் தருவதாயினும், உள்ளத்தில் சமாதானத்தையும் அமைதியையும் தருவதில்லை. சலிப்பையும் ஏக்கத்தையுமே தருகின்றன.


இவ்வரைபடத்தில் இரண்டு உயரமான மனிதர்கள் தங்கள் முதுகில் பெரிய பாவ  மூட்டையைச் சுமந்துகொண்டு, விசாலமான பாதையில் நடந்து செல்கிறார்கள். இவர்கள் தங்களுடைய பற்பல பிரச்சனைகளைச் சுமந்துகொண்டு, பயத்துடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருகின்றனர்.
இதில் ஒரு மனிதன் தனக்குமுன் இருக்கும் மரணமாகிய பெரிய தூணைக் கவனிக்காமல், தலைகுனிந்து செல்கிறான். அவன் அந்த மரணத்தை வெகு விரைவில் சந்திக்க நேரிடும். அவ்வழியின் முடிவோ அழிவு!

இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய நல் வாழ்க்கையின் மூலமாகப் புண்ணியத்தைச் சம்பாதித்து விட்டதாகக் கருதி ஏமாறுகின்றனர். பாவமன்னிப்படையாதவர்கள் பிசாசுக்கும் அவனுடைய தூதுவர்களுக்கும் கடவுள் ஏற்படுத்திய இடமாகிய நரகத்தை நோக்கிச் செல்கின்றனர் (மத்தேயு 25:41). கடவுளின் பார்வையில் நல்லவன் ஒருவனும் இல்லை. நாம் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டிய பாவிகளாகவே உள்ளோம்.


மீண்டும் இந்தப் படத்தை உற்று நோக்குங்கள். இங்கே இரண்டாவது உயரமான மனிதன் இரட்சிப்பை அடையும்படி அந்தக் குறுகிய வாசலைக் கண்டு, கிறிஸ்துவானவர் சிலுவையில் நிறைவேற்றியிருக்கும் புண்ணிய கிரியையை விசுவாசித்து, அந்தக் குறுகிய வாசல் வழியாக நுழைகிறான். அந்த வாசலுக்குள்ளாக நுழைந்தவர்களுடைய முதுகில் பாரம் இல்லையென்பதைக் கவனியுங்கள். „வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்| என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார்' (மத்தேயு11:28).


தம்மிடம் வந்து முக்தி அடையும்படி, வீடுபேறு பெறும்படி, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அனைவரையும் வருந்தி அழைக்கிறார். முதலில் சொல்லப்பட்ட வசனத்தை மீண்டும் படியுங்கள்:  „இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயி ருக்கிறது. அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.' (மத்தேயு 7:13-14).


விசாலமான பாதையில் திரளான மக்கள் செல்கின்றனர். அவர்கள் உயிருள்ள மெய்யான கடவுளிடம் - இயேசு கிறிஸ்துவிடம் வருவதற்கு மனமற்று, ஆன்மீகக் காரியங்களில் அக்கறையற்று, தங்கள் சுய அறிவைச் சார்ந்து, இவ்வுலகச் சிற்றின்பங்களில் உழன்று கொண்டிருக்கின்றனர். ஜீவனுக்குப் போகிற வாசலைக் கண்டுபிடிப்பவர்கள் சிலர்.

கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுடன் இருப்பது என்பது ஒரு மதத்தை சார்வது அல்ல. இது மதமாற்றமல்ல, மனமாற்றமே ஆகும். சிலுவையில் அவர் சிந்திய குருதியின்  மூலம் பாவமன்னிப்பைப் பெற்றவனே மெய்யின்பம் அனுபவிப்பான். இது ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட முறையில் எடுக்கவேண்டிய தீர்மானமாகும். „ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால்,   தேவனுடைய அரசைக்காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்' என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார் (யோவான் 3:3). நீங்களும் இன்று இந்த அனுபவத்திற்குள் வாருங்கள் என்று அன்புடன்  அழைக்கிறோம்.