9
1 அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார். 2 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்க வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனை பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 3 அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவனை அவமதித்து பேசுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். 4 இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? 5 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது? 6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனை பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார். 7 உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான். 8 மககள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள். 9 இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், வரிவசூல் மையத்தில் அமர்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்பற்றிவா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான். 10 பின்பு அவர் வீட்டிலே உணவு பந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீடரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். 11 பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உணவு அருந்துகிறதென்னவென்று கேட்டார்கள். 12 இயேசு அதைக் கேட்டு: வியாதியஸ்தர்களுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. 13 பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். 14 அப்பொழுது, யோவானுடைய சீடர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேக முறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர் உபவாசியாமல் இருக்கிறதென்னவென்று கேட்டார்கள். 15 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். 16 ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடே இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு ஆடையை அதிகமாய்க் கிழிக்கும், கீறலும் அதிகமாகும். 17 புது திராட்சரசத்தைப் பழய தோல்பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல்பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல்பைகளும் கெட்டுப்போகும்; புது ரசத்தைப் புது தோல்பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார். 18 அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுது தான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். 19 இயேசு எழுந்து, தம்முடைய சீடரோடுகூட அவன் பின்னே போனார். 20 அப்பொழுது, பன்னிரண்டு வருடமாய் இரத்தப் போக்குள்ள ஒரு பெண்: 21 நான் அவருடைய ஆடையையாகிலும் தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள். 22 இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை விடுவித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த பெண் சுகமானாள். 23 இயேசுவானவர் அந்த தலைவனுடைய வீட்டிலே வந்து, குழல் ஊதுகிறவர்களையும், சத்தமிடுகிற மக்களையும் கண்டு: 24 விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து ஏளனம் செய்தார்கள். 25 மக்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே நுழைந்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். 26 இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமாயிற்று. 27 இயேசு அவ்விடம் விட்டுப்போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். 28 அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை பார்த்து: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். 29 அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். 30 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். 31 அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழை பிரசித்தம் செய்தார்கள். 32 அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். 33 பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள். 34 பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். 35 பின்பு, இயேசு எல்லா பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார். 36 அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் குழப்பம் அடைந்தவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, 37 தம்முடைய சீடர்களை பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; 38 ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.