26
1 இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தம்முடைய சீடரை பார்த்து: 2 இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனித குமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார். 3 அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மக்களின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரண்மனையிலே கூடிவந்து, 4 இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்து கொலை செய்யும்படி ஆலோசனை செய்தார்கள். 5 ஆகிலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்ய கூடாது என்றார்கள். 6 இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில், 7 ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியை கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். 8 அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? 9 இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். 10 இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்த பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயளைச் செய்திருக்கிறாள். 11 தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். 12 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாயிருக்கிறது. 13 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 14 அப்பொழுது, பன்னிரண்டு பேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: 15 நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள். 16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். 17 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் செய்ய விருப்பமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். 18 அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை நெருக்கமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீடரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். 19 இயேசு கற்பித்தபடி சீடர்கள் போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். 20 மாலை நேரமானபோது, பன்னிரெண்டு பேரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். 21 அவர்கள் உணவு அருந்துகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 22 அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். 23 அவர் மறுமொழியாக: என்னோடேகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். 24 மனித குமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனிதனால் மனித குமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ; அந்த மனிதன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். 25 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை பார்த்து: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார். 26 அவர்கள் உணவு அருந்துகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். 27 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி , அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம் அருந்துங்கள்; 28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது ஒப்பந்தத்துக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. 29 இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை புதிதானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் இரசத்தை அருந்தும் நாள்வரைக்கும் இந்த இரசத்தை அருந்துவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 30 அவர்கள் நன்றி ப்பாட்டைப்பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். 31 அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இரவிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். 32 ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். 33 பேதுரு அவருக்கு மறுமொழியாக: உமது நிமித்தம் எல்லாரும் பின் வாங்கினாலும், நான் ஒருக்காலும் பின் வாங்கமாட்டேன் என்றான். 34 இயேசு அவனை பார்த்து: இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 35 அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீடர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள். 36 அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீடர்களை பார்த்து: நான் அங்கே போய் ஜெபம் செய்யுமளவும் நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள் என்று சொல்லி; 37 பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் அழைத்து கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். 38 அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி, 39 சிறிது விலகி போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் செய்தார். 40 பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரை செய்கிறதைக் கண்டு, பேதுருவை பார்த்து: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். 42 அவர் மறுபடியும் இரண்டாம் முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம் செய்தாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் செய்தார். 43 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரை செய்கிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. 44 அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாம் முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம் செய்தார். 45 பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து: இனி நித்திரை செய்து இளைப்பாறுங்கள்; இதோ, மனித குமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம் வந்தது. 46 என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். 47 அவர் இப்படிப் பேசுகையில், பன்னிரண்டு பேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதானஆசாரியரும் மக்களின் மூப்பரும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக் கொண்டுவந்தார்கள். 48 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். 49 உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். 50 இயேசு அவனை பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவை, பிடித்தார்கள். 51 அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காது அறுந்துபோக வெட்டினான். 52 அப்பொழுது, இயேசு அவனை பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள். 53 நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? 54 அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய் நடைபெற வேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். 55 அந்த வேளையிலே இயேசு மக்களை பார்த்து: திருடனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே அமர்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்து கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. 56 ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார். அப்பொழுது, சீடர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். 57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள். 58 பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாலிகளோடே உட்கார்ந்தான். 59 பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்; 60 ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து: 61 தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள். 62 அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான். 63 இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். 64 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனித குமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் அமர்ந்திருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே. 66 உங்களுக்கு எப்படி தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள். 67 அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: 68 கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். 69 அந்த நேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் அமர்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள். 70 அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான். 71 அவன், வாசல் மண்டபத்திற்கு போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள். 72 அவனோ: அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து, மறுபடியும் மறுதலித்தான். 73 சிறிது நேரத்துக்குப் பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள். 74 அப்பொழுது அவன்: அந்த மனிதனை தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று. 75 அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.