அத்தியாயம்–20
தமது அதிகாரத்தைப்பற்றி இயேசுவின் பதில்
1 அந்நாட்களில், அவர் தேவாலயத்திலே மக்களுக்கு உபதேசித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் கூடிவந்து: 2 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். 3 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள். 4 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார். 5 அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைசெய்து: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை நம்பவில்லை என்று கேட்பார். 6 மனிதரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், மக்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி: 7 அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று மறுமொழி சொன்னார்கள். 8 அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார்.
திராட்சைத்தோட்டத்தின் உவமை
9 பின்பு அவர் மக்களுக்கு சொல்லத்தொடங்கின உவமையாவது: ஒரு மனிதன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாகவிட்டு, நீண்ட நாட்களாக வெளிதேசத்திற்குப் போயிருந்தான். 10 அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பங்கைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு வேலைக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிவிட்டார்கள். 11 பின்பு அவன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிவிட்டார்கள். 12 அவன் மூன்றாம்முறையும் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி துரத்திவிட்டார்கள். 13 அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான மகனை அனுப்பினால், அவனையாகிலும் பார்த்து பயப்படுவார்கள் என்று நினைத்து, அவனை அனுப்பினான். 14 தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரத்தை நம்முடையதாக்கும்படிக்கு இவனைக் கொன்று போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, 15 அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் வெளியே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்? 16 அவன் வந்து அந்தத் தோட்டக்காரரை அழித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள். 17 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் பொருள் என்ன? 18 அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை அழித்துப்போடும் என்றார்.
வரிசெலுத்துவது பற்றிய உவமை
19 பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உதாரணத்தைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் மக்களுக்குப் பயந்திருந்தார்கள். 20 அவர்கள் நேரம் பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றம் கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய் நடிக்கிற ஒற்றர்களை அவரிடத்தில் அனுப்பினார்கள். 21 அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், பாரபட்சமில்லாமல் தேவனுடைய வழிமுறைகளை உண்மையாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம். 22 இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமா இல்லையா, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். 23 அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? 24 ஒரு நாணயத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற உருவமும் எழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள். 25 அதற்கு அவர்: அப்படியானால், இராயனுக்குரியதை இராயனுக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். 26 அவர்கள் அவரை மக்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன பதிலைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.
உயிர்த்தெழுதலும் திருமணமும்
27 உ. உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து: 28 போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து சந்ததியில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியைத் திருமணம் செய்து, தன் சகோதரனுக்குச் சந்ததியுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. 29 சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து சந்ததியில்லாமல் இறந்துபோனான். 30 பின்பு இரண்டாம் சகோதரன் அவளைத் திருமணம் செய்து அவனும் சந்ததியில்லாமல் இறந்துபோனான். 31 மூன்றாம் சகோதரனும் அவளை திருமணம் செய்தான். அப்படியே ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்து சந்ததியில்லாமல் இறந்துபோனார்கள். 32 எல்லாருக்கும் பின்பு அந்த பெண்ணும் இறந்துபோனாள். 33 இவ்விதமாய் ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள். 34 இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். 35 மாறாத நிலையையும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. 36 அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் மக்களானபடியால் தேவதூதருக்கு நிகரானவர்களுமாய், தேவனுடைய மக்களுமாயிருப்பார்கள். 37 அல்லாமலும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாக்கியத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். 38 அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குள் பிழைத்திருக்கிறார்களே என்றார். 39 அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள். 40 அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றும் கேட்கத் துணியவில்லை. 41 அவர் அவர்களைப் பார்த்து: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்? 42 நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதப்படியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று, 43 கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புத்தகத்தில் சொல்லுகிறானே. 44 தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
வேதபாரகரின் வெளிவேஷம்
45 பின்பு மக்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: 46 நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களைப் பெறவும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, 47 விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம் செய்கிற வேத பாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக தண்டனையை அடைவார்கள் என்றார்.