Acts of the Apostles
அப்போஸ்தலர்
1
1 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்டபின்பு, 2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் ஊழியம் செய்யவும் போதிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன். 3 அவர் சிலுவையில் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி , தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். 4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். 5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விபட்ட பிதாவின் வாக்குதத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். 6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். 7 அதற்கு அவர்:பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் உறுதியாய் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. 8 பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். 9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், வானத்துக்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. 10 அவர் போகிற போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: 11 கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். 12 அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். 13 அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். 14 அங்கே இவர்களெல்லாரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். 15 அந்நாட்களிலே, சீடர்கள் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பேதுரு எழுந்து நின்று: 16 சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயிருந்தது. 17 அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாயிருந்தான். 18 தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்து போயிற்று. 19 இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது அதினாலே அந்த நிலம் அவர்களுடைய, மொழியிலே இரத்த நிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது. 20 சங்கீதபுத்தகத்திலே அவனுடைய குடியிருக்கும் வீடு அழிக்ககடவது ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது. 21 ஆதலால், யோவான் ஞானஸ்நானம்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும், 22 அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனே கூட இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக் குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான். 23 அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டு பேரையும் நிறுத்தி: 24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக, 25 இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; 26 பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.