14
1 இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெப ஆலயத்தில் உள்ளே பிரவேசித்து யூதரிலும் கிரேக்கரிலும் திரளான மக்கள் நம்பத் தக்கதாகப் பிரசங்கித்தார்கள். 2 நம்பிக்கை இல்லாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் யூதரல்லாதவர்களுடைய மனதை தூண்டிவிட்டு , பகையுண்டாக்கினார்கள். 3 அவர்கள் அங்கே அநேகநாள் வாழ்ந்து கர்த்தரை முன்னிட்டுத் தைரியம் உள்ளவர்களாய்ப் போதகம் பண்ணினார்கள்; அவர் தமது சத்தியமுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அதிசயங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி தயவு பண்ணினார் . 4 பட்டணத்து மக்கள் பிரிந்து, சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள். 5 இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும்என்று,யூதரரல்லாதவர்களும், யூதரும் அவர்கள் அதிகாரிகளும் தர்க்கம்பண்ணுகையில், 6 இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப் புறங்களுக்கு ஓடிப்போய்; 7 அங்கே இயேசுவின் நற்செய்தியை பிரசங்கம் பண்ணினார்கள். 8 லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் முடவனாயிருந்து , ஒருபோதும் நடவாமல், கால்கள் செயலற்றவனாய் உட்கார்ந்து, 9 பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப் பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்குஉண்டென்று கண்டு , 10 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். 11 பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி, 12 பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள். 13 அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான ஆலய மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்த மக்களோடு கூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். 14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் துணிகளைக் கிழித்துக் கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்: 15 மனிதர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போலப் பாடுள்ள மனிதர்கள் தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரையும் அவைகளிலுள்ளயாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்க்கு திரும்ப வேண்டும் என்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். 16 கடந்த காலங்களில் அவர் எல்லா மக்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், 17 அவர் நன்மை செய்து வந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக் குறித்துச் சாட்சி விளங்கப் பண்ணாதிருந்ததில்லை என்றார்கள். 18 இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு மக்கள் பலியிடாதபடிக்கு அவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்தது . 19 பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து மக்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக் கொண்டு போனார்கள். 20 சீடர்கள் அவனைச் சூழ்ந்து நிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்க்குள்ளே போனான் . மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப் போனான். 21 அந்தப் பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியை பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினப் பின்பு , லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து, 22 சீடருடைய மனதைத் தைரியப்படுத்தி,நம்பிக்கையிலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்று சொன்னார்கள். 23 அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் நம்பிக்கை வைத்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள். 24 பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து, 25 பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள். 26 அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின செயல்களுக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப் பட்டு, புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள். 27 அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக் கொண்டு செய்தவைகளையும், அவர் யூதரல்லாதவர்க்கும் விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து, 28 அங்கே சீடருடனேகூட அநேக நாள் தங்கியிருந்தார்கள் .