2
1 சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த பேச்சுத் திறமையோடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. 2 இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். 3 அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். 4 உங்கள் விசுவாசம் மனிதருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, 5 என் பேச்சும் என் பிரசங்கமும் மனித ஞானத்திற்குரிய இனிய வசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப் படுத்தப்பட்டதாயிருந்தது. 6 அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலக பேரறிஞர்களுடைய ஞானத்தையுமல்ல, 7 உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவ ஞானத்தையே பேசுகிறோம். 8 அதை இந்த உலகத்து பேரறிஞர்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. 9 எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; 10 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார். 11 மனிதனிலுள்ள ஆவியேயன்றி மனிதரில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக் குரியவைகளை அறியமாட்டான். 12 நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு கொடுக்கப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். 13 அவைகளை நாங்கள் மனித ஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். 14 ஜென்ம சுபாவமான மனிதனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றப் பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப் படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். 15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். 16 கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய எண்ணத்தை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் எண்ணம் உண்டாயிருக்கிறது.