15
1 அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். 2 நான் உங்களுக்குப் பிரசங்கித்த பிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் பயனற்றதாயிருக்குமே. 3 நான் பெற்றதும் உங்களுக்கு முக்கியமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, 4 அடக்கம் செய்யப்பட்டு, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, 5 கேபாவுக்கும், பின்பு பன்னிரெண்டு பேருக்கும் தரிசனமானார். 6 அதன்பின்பு அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே நேரத்தில் காட்சியளித்தார்; அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் மரணமடைந்தார்கள். 7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலர் எல்லாருக்கும் காட்சியளித்தார். 8 எல்லாருக்கும் பின்பு, அகாலப் பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். 9 நான் அப்போஸ்தலர் எல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப் படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலன் என்று பேர் பெறுவதற்கும் தகுதியற்றவன். 10 ஆகிலும் நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை வீணாயிருக்கவில்லை; அவர்கள் எல்லாரிலும் நான் அதிகமாய் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவ கிருபையே அப்படிச் செய்தது. 11 ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்து வருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்து இருக்கிறீர்கள். 12 கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப் பட்டிருக்க, மரித்தோரின் உயிர்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? 13 மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. 14 கிறிஸ்து எழுந்திருக்கவில்லை என்றால், எங்கள் பிரசங்கமும் வீண், உங்கள் விசுவாசமும் வீண். 15 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினார் என்று நாங்கள் தேவனைக் குறித்துச் சாட்சி சொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. 16 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. 17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். 18 கிறிஸ்துவுக்குள் மரணமடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே. 19 இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை உள்ளவர்களாய் இருந்தால், எல்லா மனிதரைப் பார்க்கிலும் பரிதபிக்கப் படத்தக்கவர்களாய் இருப்போம். 20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, மரணமடைந்தவர்களில் முதல் கனியானார். 21 மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. 22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப் படுவார்கள். 23 அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப் படுவான், முதல் கனியானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப் படுவார்கள். 24 அதன் பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் எல்லா துரைத்தனத்தையும் எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் அழித்து, தேவனும் பிதாவுமாய் இருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். 25 எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும் வரைக்கும், அவர் ஆளுகை செய்ய வேண்டியது. 26 அழிக்கப்படும் கடைசி விரோதி மரணம். 27 எல்லாவற்றையும் அவருடைய காலுக்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்கு கீழ்ப்படுத்தப் பட்டதென்று சொல்லியிருக்கும் போது, எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப் படவில்லை என்பது வெளியரங்கமாய் இருக்கிறது. 28 அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் போது, தேவனே அனைத்திலும் அனைத்துமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்கு அனைத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். 29 மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்? 30 நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்? 31 நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக் குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக் கொண்டு உண்மையாய் சொல்லுகிறேன். 32 நான் எபேசுவிலே கொடிய மிருகங்களுடனே போராடினேனென்று மனிதர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்கு பலன் என்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், உண்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே? 33 மோசம் போகாதிருங்கள்; ஆகாத உரையாடல்கள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். 34 நீங்கள் பாவம் செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக் கொண்டு, தெளிந்தவர்களாய் இருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவு இல்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன். 35 ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், 36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. 37 நீ விதைக்கிற போது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். 38 அதற்கு தேவன் தமது விருப்பத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். 39 எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல; மனிதருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மீன்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே. 40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; 41 சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. 42 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; 43 மதிப்பற்றதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். 44 சாதாரண சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; சாதாரண சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. 45 அந்தப்படியே முந்தின மனிதனாகிய ஆதாம் ஜீவ ஆத்துமாவானான் என்று எழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். 46 ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, சாதாரண சரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. 47 முந்தின மனிதன் பூமியிலிருந்து உண்டான மண்ணானவன்; இரண்டாம் மனிதன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். 48 மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. 49 மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறது போல, வானவருடைய சாயலையும் அணிந்து கொள்ளுவோம். 50 சகோதரரே, நான் சொல்லுகிறது என்னவென்றால், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிப்பதில்லை. 51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் மரணமடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும் போது, ஒரு நிமிடத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபம் ஆக்கப்படுவோம். 52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துக் கொள்ளவேண்டும். 54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துக் கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். 55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? 56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். 57 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு நன்றி. 58 ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் செய்கிற முயற்சி வீணாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய செயலிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.