Ephesians
எபேசியர்
1
1 தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாக இருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: 2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக. 3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய எல்லா ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். 4 அவருக்கு முன்பாக நாம் எல்லோரும் பரிசுத்தம் உள்ளவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருப்பதற்கு, உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே கிறிஸ்துவுக்குள் அவர் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, 5 பிரியமானவருக்குள் அவர் நமக்கு அருளிய அவருடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, 6 அவருடைய தயவுள்ள விருப்பத்தின்படியே, இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவருக்குச் சொந்த பிள்ளைகளாகும்படி நம்மை முன்குறித்திருக்கிறார். 7 தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. 8 அவர், அந்தக் கிருபையை எல்லா ஞானத்திலும் புத்தியிலும் எங்களுக்குள் பெருகப்பண்ணினார். 9 காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் ஒழுங்கின்படிபரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய எல்லாம் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று , 10 தமக்குள்ளே தீர்மானித்திருந்த அவருடைய திட்டத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். 11 மேலும் கிறிஸ்துவின்மேல் முன்பு நம்பிக்கையாக இருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக இருப்பதற்காக, 12 அவருடைய விருப்பத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம். 13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் நற்செய்தியாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். 14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் உத்தரவாதமாய் இருக்கிறார். 15 எனவே, கர்த்தராகிய இயேசுவின்மேல் உள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர் மேலும் உள்ள உங்கள் அன்பையும் குறித்து நான் கேள்விப்பட்டு, 16 இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, 17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டும் என்றும், 18 அவர் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை என்னவென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் என்னவென்றும்; 19 தாம் கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடம் காண்பிக்கும் அவருடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் என்னவென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். 20 எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்துக்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, 21 அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபக்கத்தில் உட்காரும்படி செய்து, 22 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, 23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.