1 Thessalonians
1 தெசலோனிக்கேயர்
தேசலோனிக்கேயரின் விசுவாசத்திற்காக நன்றி சொல்லுதல்
1
1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 2 தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் செயல்களையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, 3 நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து, 4 எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து வேண்டுதல் செய்து, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். 5 எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்களுக்காக எப்படிப்பட்டவர்களாய் இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. 6 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் மகிழ்ச்சியோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, 7 இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் மாதிரிகளானீர்கள். 8 எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்ல வேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று. 9 ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் எங்களுக்கு கிடைத்த வரவேற்பு இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் சிலை வழிபாடுகளைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், 10 அவர் மரித்தோரிலிருந்து எழுந்தவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.