6
1 தேவனுடைய நாமமும் உபதேசமும் அவமதிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிற வேலைக்காரர்கள் யாவரும் தங்களுடைய எஜமான்களை எல்லாக்கனத்திற்கும் தகுதியுள்ளவர்கள் என்று நினைத்துக் கொள்ளவேண்டும். 2 விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராக இருப்பதினால் அவர்களை அசட்டைபண்ணாமல், நல்லவேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிற அவர்கள் விசுவாசிகளும், பிரியமுள்ளவர்களுமாக இருப்பதினால் அவர்களுக்கு அதிகமாக ஊழியம் செய்யுங்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு. 3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், மாறுபாடான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், 4 அவன் பெருமை உள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கம் செய்கிற, வாக்குவாதம் பண்ணுகிற நோய்கொண்டவனுமாக இருக்கிறான்; அவைகளினாலே பொறாமையும், சண்டையும், அவதூறுகளும், பொல்லாத சந்தேகங்களும் உண்டாகி, 5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழில் என்று நினைக்கிறவர்களுமாக இருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகியிரு. 6 போதும் என்கிற மனதோடு கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். 8 உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும். 9 செல்வந்தர்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள். 10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொள்ளுகிறார்கள். 11 நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடைந்துகொள். 12 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாக இருக்கிறாய். 13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்வரைக்கும், நீ இந்தக் கட்டளையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கடைபிடிக்கும்படி, 14 எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்பாக நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். 15 இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்திய அதிகாரம் உடையவரும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், 16 அவர் ஒருவரே, மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனுஷரில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். 17 இந்த உலகத்தில் ஐசுவரியம் உள்ளவர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், 18 நன்மைசெய்யவும், நல்லகிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், தங்களிடம் உள்ளதை பகிர்ந்து கொடுக்கிறவர்களாகவும் இருக்கவும், 19 நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு. 20 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய் சொல்லப்படுகிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இரு. 21 சிலர் இவைகளை அறிவித்ததினால், அவர்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.