James
யாக்கோபு
1
1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது: 2 என் சகோதரரே, நீங்கள் பலவகையான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும் போது, 3 உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக நினைத்துக் கொள்ளுங்கள்.பொறுமையைக் குறித்து
4 நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, பொறுமையானது பூரணமாகட்டும். 5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கும் போது, அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். 6 ஆனாலும் அவன் கொஞ்சம் கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்க வேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். 7 அப்படிப்பட்ட மனிதன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாமல் இருப்பானாக. 8 இருமனம் உள்ளவன் தன் வழிகளில் எல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான். 9 ஏழ்மை நிலையில் உள்ள சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக் குறித்து மேன்மை பாராட்டட்டும். 10 ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக் குறித்து மேன்மை பாராட்டட்டும்; ஏனென்றால் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான். 11 சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவம் அழிந்து போகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான். 12 சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான்; அவன் உத்தமன் என்று தெரிந்த பின்பு கர்த்தர், தம்மை நேசிக்கிறவர்களுக்கு வாக்குறுதியாகச் சொல்லப்பட்ட ஜீவகிரீடத்தைப் பெறுவான். 13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று, சொல்லாமல் இருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவர் அல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரும் அல்ல. 14 அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். 15 பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும் போது, மரணத்தைப் பெற்றெடுக்கும். 16 என் பிரியமான சகோதரரே, மோசம் போகவேண்டாம். 17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி, ஒளியாய் இருக்கிற பிதாவினிடத்தில் இருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை. 18 அவர் விருப்பம் கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே பெற்றெடுத்தார்.
வசனத்தின்படி செய்தல்
19 ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபிக்கிறதற்குத் தாமதமாகவும் இருக்க வேண்டும்; 20 மனிதருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கச் செய்யாது. 21 ஆகையால், நீங்கள் எல்லாவித பாவங்களையும் கொடிய தீயகுணத்தையும் அகற்றிவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்படதாயும், உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமை உள்ளதாகவும், இருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். 22 அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள். 23 ஏனெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் முகசாயலை பார்க்கிற மனிதனுக்கு ஒப்பாயிருப்பான்; 24 அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். 25 சுதந்தரப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாய் இராமல், அதற்கேற்ற செய்கையை செய்கிறவனாக இருந்து, தன் செய்கையில் பாக்கியவானாக இருப்பான். 26 உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றி, தன்னை தேவபக்தி உள்ளவனென்று நினைத்தால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். 27 திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளவதே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக குற்றமில்லாத சுத்தமான பக்தியாய் இருக்கிறது.