5
1 இயேசுவானவர் கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறக்க செய்தவர் இடத்தில் அன்பு கூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப் பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான். 2 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோம் என்று அறிந்து கொள்ளுகிறோம். 3 நாம் தேவனுடைய கட்டளைகளைக் கடைபிடிப்பதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கட்டளைகள் பாரமானவைகளும் அல்ல. 4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை வெற்றி பெறச் செய்யும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை வெற்றி பெறச்செய்யும் வெற்றி. 5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனே அல்லாமல் உலகத்தை வெல்லுகிறவன் யார்? 6 இயேசு கிறிஸ்துவாகிய இவரே தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; தண்ணீரினாலே மாத்திரமல்ல, தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியம் ஆகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். 7 (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம் மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; 8 பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, தண்ணீர், இரத்தம் என்பவைகளே, இம் மூன்றும் ஒருமைப் பட்டிருக்கிறது. 9 நாம் மனிதனுடைய சாட்சியை ஏற்றுக் கொண்டால், அதைப் பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாய் இருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. 10 தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே பெற்றிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். 11 தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். 12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 13 உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவ குமாரனுடைய பெயரின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவ குமாரனுடைய பெயரின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 14 நாம் எதையாகிலும் அவருடைய விருப்பத்தினபடி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறார் என்பதே அவரைப் பற்றி நாம் அறிந்திருக்கிற நம்பிக்கை. 15 நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக் கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம். 16 மரணத்துக்கு உரியதாக இல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் ஜெபம் செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு உரியதாக இல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு உரியதான பாவமும் உண்டு, அதைக் குறித்து ஜெபம் செய்ய நான் சொல்வதில்லை. 17 அநீதி எல்லாம் பாவம் தான்; என்றாலும் மரணத்துக்கு உரியதல்லாத பாவமும் முண்டு. 18 தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பிசாசு அவனைத் தொடான். 19 நாம் தேவனால் உண்டாய் இருக்கிறோம் என்றும், உலக முழுவதும் சாத்தானுக்குள் இருக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம். 20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்து கொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் ஞானத்தை கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியம் உள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார். 21 பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக் கொள்வீர்களாக . ஆமென்.