18
1 அவ்வேளையிலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். 2 இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: 3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 4 ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். 5 இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் பெயரினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். 6 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லை கட்டி, கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். 7 இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனிதனால் இடறல்வருகிறதோ, அவனுக்கு ஐயோ! 8 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதை பார்க்கிலும், முடவனாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் நுழைவதது உனக்கு நலமாயிருக்கும். 9 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதை பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் நித்திய ஜீவனுக்குள் நுழைவது உனக்கு நலமாயிருக்கும். 10 இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 11 மனித குமாரன் இழந்து போனதை இரட்சிக்க வந்தார். 12 உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்ப் போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் காணாமற்ப் போனதை தேடாமலிருப்பானோ? 13 அவன் அதைக் கண்டுபிடித்தால்,காணாமல் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளை குறித்து மகிழ்சியாய் இருக்கிறதை பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய் மகிழ்சியாயிருப்பன் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 14 இவ்விதமாக, இந்தச் சிறியவரில் ஒருவனாகிலும், அழிந்துபோவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் பிரியமல்ல . 15 உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக் கொண்டாய். 16 அவன் செவிகொடாமல் போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ. 17 அவர்களுக்கும் அவன் செவிகொடாமல் போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவி கொடாதிருப்பானானால், அவன் உனக்கு மாற்று மார்க்கத்தான் போலவும் ஆயக்காரனை போலவும் இருப்பானாக. 18 உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 19 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டி கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் இவ்வுலகத்திலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 20 ஏனென்றால், இரண்டு பேராவது மூன்று பேராவது என் பெயராலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். 21 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றம் செய்துவந்தால், நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான். 22 அதற்கு இயேசு: ஏழுமுறை மாத்திரம் அல்ல, ஏழெழுபதுமுறை மட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். 23 எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. 24 அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் வெள்ளிக்காசு கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். 25 கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். 26 அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். 27 அந்த வேலைக்கார னுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலை செய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். 28 அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப் போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் பார்த்து, அவனைப் பிடித்து,கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். 29 அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். 30 அவனோ சம்மதியாமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத் தீர்க்கும் வரைக்கும் அவனைக் காவலில் வைத்தான். 31 நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். 32 அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். 33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, 34 அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்கும் வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். 35 நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.