19
1 இயேசு இந்த வசனங்களைச் சொல்லி முடித்தபின்பு, அவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார். 2 திரளான மக்ககள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களை குணாமாக்கினார். 3 அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்க வேண்டுமென்று அவரிடத்தில் வந்து: கணவனானவன் தன் மனைவியை எந்த காரணத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். 4 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், 5 இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இனைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? 6 இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். 7 அதற்கு அவர்கள்: அப்படியானால், விவாகரத்து கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். 8 அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை. 9 ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை திருமணம் செய்தால், அவன் விபசாரம் செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 10 அவருடைய சீடர்கள் அவரை பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம் செய்கிறது நல்லதல்ல என்றார்கள். 11 அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 12 தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாய் ஆக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாய் ஆக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார். 13 அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கைகளை வைத்து ஜெபம் செய்யும் படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள். 14 இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைசெய்யாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, 15 அவர்கள்மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போனார். 16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை பார்த்து: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். 17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். 18 அவன் அவரை பார்த்து: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; 19 உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்பு காட்டுவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு காட்டுவாயாக என்பவைகளையே என்றார். 20 அந்த வாலிபன் அவரை பார்த்து: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். 21 அதற்கு இயேசு: நீ தேவனுக்கு முழுமையுள்ளவனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். 22 அந்த வாலிபன் மிகுந்த செல்வம் உள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கம் அடைந்தவனாய்ப் போய்விட்டான். 23 அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களை பார்த்து: செல்வந்தன் பரலோக ராஜ்யத்தில் நுழைவது எளிதல்லவென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24 மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் நுழைவதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 25 அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள். 26 இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதரால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார். 27 அப்பொழுது, பேதுரு அவரை பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான். 28 அதற்கு இயேசு: மறுபிறப்பின் காலத்திலே மனித குமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் அமர்ந்திருப்பீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 29 என் பெயரினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; 30 ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.