20
1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். 2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளி பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான். 3 மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: 4 நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். 5 மறுபடியும், ஆறாம், ஒன்பதாம் மணி அளவிலும் அவன் போய் அப்படியே செய்தான். 6 பதினோராம் மணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரை பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். 7 அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களை பார்த்து: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். 8 மாலை வேளையில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் நிர்வாகியை பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முந்தி வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான். 9 அப்பொழுது பதினோராம் மணியளவில் சேர்க்கபட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளி பணம் வாங்கினார்கள். 10 முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளி பணம் வாங்கினார்கள். 11 வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை பார்த்து: 12 பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணி நேரம் மாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள். 13 அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக:நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா? 14 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போல பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம் . 15 என்னுடையதை என் விருப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாரள மனமுடையனாய் இருக்கிறபடியால், நீ பொறாமை கொள்ளலாமா என்றான். 16 இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்க பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ள பட்டவர்களோ சிலர் என்றார். 17 இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடரையும் தனியே அழைத்து: 18 இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனித குமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண தண்டனைக்குள்ளாகத் தீர்த்து, 19 அவரைப் பரியாசம் செய்யவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். 20 அப்பொழுது, செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றாள். 21 அவர் அவளை பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பக்கத்திலும், ஒருவன் உமது இடது பக்கத்திலும் அமர்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்றாள். 22 இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தைதை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். 23 அவர் அவர்களை பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பக்கத்திலும் என் இடது பக்கத்திலும் அமர்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் வேலையல்ல என்றார். 24 மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள். 25 அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 26 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு பணிவிடை செய்கிறவனாய் இருக்கக்கடவன். 27 உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு பணிவிடை செய்கிறவனாய் இருக்கக்கடவன். 28 அப்படியே, மனித குமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். 29 அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டு போகையில், திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள். 30 அப்பொழுது வழியருகே அமர்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். 31 அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள். 32 இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார். 33 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்க வேண்டும் என்றார்கள். 34 இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.