அத்தியாயம் 2
கானா ஊரில் நடந்த திருமணம்
1 மூன்றாம் நாளில் கலிலேயாவில் உள்ள கானா ஊரில் ஒரு திருமணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கே இருந்தார்கள். 2 இயேசுவும் அவருடைய சீடரும் அந்த திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3 திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரைப் பார்த்து: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4 அதற்கு இயேசு: பெண்ணே, எனக்கும் உனக்கும் என்ன, என் நேரம் இன்னும் வரவில்லை என்றார். 5 அவருடைய தாய் வேலைக்காரரைப் பார்த்து: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் வழக்கத்தின்படியே, ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் பிடிக்கத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 7 இயேசு வேலைக்காரரைப் பார்த்து: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிரப்பினார்கள். 8 அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது எடுத்து, பந்தி மேற்பார்வைக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். 9 அந்த திராட்சரசம் எங்கேயிருந்து வந்தது என்று தண்ணீரை நிரப்பின வேலைக்காரருக்கு மாத்திரம் தெரியும் பந்தி மேற்பார்வைகாரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாக மாறின தண்ணீரை ருசி பார்த்தபோது, மணமகனை அழைத்து: 10 எந்த மனிதனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, மக்கள் திருப்தியடைந்த பின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். 11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரில் செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். 12 அதன் பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீடரும் கப்பர்நகூமுக்குப் போய், அங்கே சில நாள் தங்கினார்கள். 13 பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாய் இருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய்,
தேவாலயத்தை சுத்தப்படுத்துதல்
14 தேவாலயத்திலே ஆடுகள், மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், பணம்மாற்றுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் பார்த்து, 15 கயிற்றினால் ஒரு சவுக்கை உண்டாக்கி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும், தேவாலயத்துக்கு வெளியே துரத்திவிட்டு, பணம் மாற்றுக்காரருடைய பணங்களைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, 16 புறா விற்கிறவர்களைப் பார்த்து: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். 17 அப்பொழுது: உம்முடைய வீட்டைக் குறித்து உண்டான பக்தியின் தீவீரம் என்னை சுடேற்றியது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள். 18 அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.
கிறிஸ்து தம்பாடுகளைக் குறித்து முன்னறிவித்தல்
19 இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை கட்டி எழுப்புவேன் என்றார். 20 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருடங்கள் ஆனதே, நீர் இதை மூன்று நாட்களுக்குள்ளே கட்டி எழுப்புவீரோ என்றார்கள். 21 அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக் குறித்துச் சொன்னார். 22 அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்து எழுந்த பின்பு அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். 23 பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமில் இருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் பார்த்து, அவருடைய பெயரில் விசுவாசம் வைத்தார்கள். 24 அப்படியிருந்தும், இயேசு எல்லோரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பவில்லை. 25 மனிதர் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனிதரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்க அவசியமாய் இருக்கவில்லை.