அத்தியாயம் 12
மரியாள் கிறிஸ்துவுக்கு பாத அபிஷேகம்
1 பஸ்கா பண்டிகை வருவதற்கு ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். 2 அங்கே அவருக்கு இரவு விருந்து கொடுத்தார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனே பந்தியிருந்தவர்களில் ஒருவனாக இருந்தான். 3 அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் நல்ல வாசனையினால் நிறைந்திருந்தது. 4 அப்பொழுது அவருடைய சீடரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: 5 இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிப் பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனது என்ன என்றான். 6 அவன் ஏழைகளைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனாக இருந்ததினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனாக இருந்ததினாலும் இப்படிச் சொன்னான். 7 அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் செய்யும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். 8 ஏழைகள் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கமாட்டேன் என்றார். 9 அப்பொழுது யூதரில் திரளான மக்கள் அவர் அங்கே இருக்கிறதை அறிந்து, இயேசுவைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின லாசருவைப் பார்க்கும்படியாகவும் வந்தார்கள். 10 லாசருவினால் யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்ததினால், 11 பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலை செய்ய ஆலோசனை செய்தார்கள்.
கிறிஸ்து எருசலேமுக்குள் நுழைதல்
12 அடுத்தநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று பண்டிகைக்கு வந்த திரளான மக்கள் கேள்விப்பட்டு, 13 குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டு போகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய பெயரினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். 14 அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபடி, 15 இயேசு ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்து அதின்மேல் ஏறிப்போனார். 16 இவைகளை அவருடைய சீடர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்தப் பின்பு, இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள். 17 அன்றியும் அவருடன் இருந்த மக்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினார் என்று சாட்சி கொடுத்தார்கள். 18 அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று மக்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள். 19 அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் பார்த்து: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்றது என்றார்கள்.
20 பண்டிகையில் ஆராதனை செய்ய வந்தவர்களில் சிலர் கிரேக்கர்கள். 21 அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக் கொண்டார்கள். 22 பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள். 23 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. 24 உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயானால் மிகுந்த பலனைக் கொடுக்கும். 25 தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்து போவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். 26 ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றட்டும், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். 27 இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையிலிருந்து என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்தச் சூழ்நிலைக்குள் வந்தேன்.
வானத்திலிருந்து உண்டான சத்தம்
28 பிதாவே, உமது பெயரை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டானது. 29 அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட மக்கள்: இடி முழக்கம் உண்டானது என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். 30 இயேசு அவர்களைப் பார்த்து: இந்தச் சத்தம் என்னால் உண்டாகாமல் உங்களாலே உண்டானது. 31 இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான். 32 நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டு இருக்கும்போது, எல்லோரையும் என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன் என்றார். 33 இயேசு இன்னவிதமான மரணமாக மரிக்கப்போகிறார் என்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார். 34 மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். 35 அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடம் இருக்கும்; இருளில் நீங்கள் சிக்கிக்கொள்ளாதபடி ஒளி உங்களோடு இருக்கும் போது நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் எங்கே என்று தெரியாமல் இருக்கிறான். 36 ஒளி உங்களோடு இருக்கும் போது நீங்கள் ஒளியின் பிள்ளைகளாவதற்கு, ஒளியிடம் விசுவாசமாக இருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.
யூதர்களின் அவிசுவாசம்
37 அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. 38 கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடையக் கரம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. 39 ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால் ஏசாயா பின்னும்: 40 அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான். 41 ஏசாயா அவருடைய மகிமையைப் பார்த்து, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். 42 ஆனாலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடம் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்தைவிட்டு வெளியேற்றப்படாமல் இருக்க, பரிசேயர்களுக்காக அதை அறிக்கைச் செய்யாமலும் இருந்தார்கள். 43 அவர்கள் தேவனால் வருகிற மகிமையைவிட மனிதர்களால் வருகிற மகிமையை அதிகமாக விரும்பினார்கள்.
விசுவாசத்தின் அறிக்கை
44 அப்பொழுது இயேசு சத்தமாக: என்மேல் விசுவாசமாக இருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடம் விசுவாசமாக இருக்கிறான். 45 என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பினவரைப் பார்க்கிறான். 46 என்னிடம் விசுவாசமாக இருக்கிறவனெவனும் இருளில் இல்லாதபடி, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். 47 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசிக்காமல் போனால், அவனை நான் நியாயம் தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயம் தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன். 48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயம் தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயம் தீர்க்கும். 49 நான் சுயமாகப் பேசவில்லை, நான் பேசவேண்டியது என்ன என்றும் உபதேசிக்கவேண்டியது என்ன என்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். 50 அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.