5
1 அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் சொத்துக்களை விற்றார்கள். 2 தன் மனைவி சம்மதத்தோடு அவன் விற்றபணத்திலே ஒரு பகுதி மறைத்துவைத்து, ஒருபகுதியை கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். 3 பேதுரு அவனை நோக்கி: அனனியாவே,சொத்தை விற்றதில் ஒரு பகுதியை மறைத்து வைத்து,பரிசுத்த ஆவியானவர் இடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? 4 அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்ற பின்பும் அதின் பணம் உன்னிடத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனிதனிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். 5 அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே, விழுந்து மரித்துபோனான் . இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. 6 வாலிபர்கள் எழுந்து, அவனைத் துணியில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம் பண்ணினார்கள். 7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். 8 பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள். 9 பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் கணவனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான். 10 உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து மரித்துபோனாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய கணவன் அருகில் அடக்கம்பண்ணினார்கள். 11 சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று. 12 அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் மக்களுக்குள்ளே செய்யப்பட்டது. சபையாரெல்லாரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் கூடி இருந்தார்கள். 13 மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் மக்கள் அவர்களை மேன்மைப்படுத்திப் பேசினார்கள் 14 அநேக ஆண்களும், பெண்களும் விசுவாசமுள்ளவர்களாகி கர்த்தரிடத்தில் அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். 15 சுகவீனமானவர்களை படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். 16 சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் சுகவீனமானவர்களையும் அசுத்த ஆவிகளால் துன்புறுத்தபட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். 17 அப்பொழுது பிரதானஆசாரியனும் அவனுடனேகூட இருந்த பிரிவினர் அனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, 18 அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். 19 கர்த்தருடைய தூதன் இரவிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து: 20 நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவனுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள் என்றான். 21 அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்து போதகம்பண்ணினார்கள்.பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தாரையும் இஸ்ரவேல் கோத்திரத்தின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களை அழைத்து வரும்படி சிறைச்சாலை வேலைக்காரர்களை அனுப்பினார்கள். 22 வேலைக்கார்கள் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து: 23 சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவல்காரர் வெளியே கதவுகளுக்கு முன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள். 24 இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற படைத்தலைவனும் பிரதானமான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்து பயத்தோடிருந்தார்கள். 25 அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனிதர்கள் தேவாலயத்திலே நின்று மக்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான். 26 உடனே படைத்தலைவன் வேலைக்காரர்களோடு கூடப்போய், மக்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், துன்புறுத்தாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான். 27 அப்படி அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதானஆசாரியன் அவர்களை நோக்கி: 28 நீங்கள் இயேசுவின் பெயரைக்குறித்துப் போதகம்பண்ணகூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனிதனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். 29 அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனிதவர்களுக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது. 30 நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி, 31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார். 32 இந்தச் செய்திகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு கொடுத்த பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள். 33 அதை அவர்கள் கேட்டபொழுது,எரிச்சலடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள். 34 அப்பொழுது அனைத்து மக்களாலும் கனம்பெற்ற நியாயபண்டிதர் கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைக் கொஞ்சநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி, 35 சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 36 ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மரித்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறிப்போனார்கள். 37 அவனுக்குப் பின்பு, மக்கள் கணக்கெடுக்கும் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக மக்களை இழுத்தான்; அவனும் மரித்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறிப்போனார்கள். 38 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனிதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தச் செயல்களும் மனிதர்களால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோகும்; 39 தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போரிடாதவர்களாய் இருக்கும் படிக்கு பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். 40 அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் பெயரைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். 41 அவருடைய பெயருக்காக தாங்கள் அவமானமடைவதற்கு ஒருவராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், 42 தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல்உபதேசம்பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள்.