4
1 இப்படியாக, எந்த மனிதனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்றும், தேவனுடைய இரகசியங்களின் மேற்பார்வைக் காரரென்றும் நினைத்துக் கொள்ளக்கடவன். 2 மேலும், மேற்பார்வைக்காரன் உண்மையுள்ளவன் என்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம். 3 ஆயினும் நான் உங்களாலேயாவது மனிதருடைய தீர்ப்பு நாளின் விசாரணையின் நாளிலேயாவது தீர்ப்பைப் பெறுவது எனக்கு மிகவும் சாதாரண காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச் சொல்லுகிறதில்லை. 4 என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே. 5 ஆதலால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்கு முன்னே எதுவொன்றைக் குறித்தும் தீர்ப்புச் சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்து இருக்கிறவைகளை அவர் வெளிப்படையாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். 6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு அதிகமாக நினைக்க வேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனின் நிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் வைராக்கியம் கொள்ளாதிருக்கவும், நான் உங்கள் நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் ஆதாரமாக வைத்து, இவைகளை எழுதினேன். 7 அன்றியும் உன்னை சிறப்பானவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாய் இருக்கிறவைகளில் நீ பெற்றுக் கொள்ளாதது எது? நீ பெற்றுக் கொண்டவனானால் பெற்றுக் கொள்ளாதவன் போல் ஏன் மேன்மை பாராட்டுகிறாய்? 8 இப்பொழுது திருப்தி அடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாய் இருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்கள் ஆனால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே. 9 எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள் போல கடைசியானவர்களாய்க் காணப்பட செய்தார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனிதருக்கும் வேடிக்கையானோம். 10 நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் மேன்மையானவர்கள், நாங்கள் மேன்மையற்றவர்கள். 11 இந்நேரம் வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், கொடூரமாக தாக்கப்பட்வர்களும், தங்க இடம் இல்லாதவர்களுமாய் இருக்கிறோம். 12 எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; சபிக்கப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம். 13 தூஷிக்கப்பட்டு, வேண்டிக் கொள்ளுகிறோம்; இந்நாள் வரைக்கும் உலகத்தின் குப்பையைப் போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப் போலவுமானோம். 14 உங்களை வெட்கப்படுத்தும் படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 15 கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் ஆசிரியர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன். 16 ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்கள் என்னைப்போல ஆகுங்களென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். 17 இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் செய்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். 18 நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள். 19 ஆகிலும் கர்த்தருக்கு விருப்பமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்பு அடைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன். 20 தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது. 21 உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?