5
1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று வெளிப்படையாய் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக் கொண்டிருக்கிறானே; அது அறியாமை உள்ளவர்களுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. 2 இப்படிப்பட்ட காரியம் செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். 3 நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக் குறித்து நான் கூட இருக்கிறதுபோல, 4 நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில், 5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தீர்ப்புச் செய்கிறேன். 6 நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? 7 ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாய் இருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவை வெளியே தூக்கிப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. 8 ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல,பரிசுத்தம் உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை அனுசரிக்கக்கடவோம். 9 விபசாரக்காரரோடே கலந்திருக்கக் கூடாதென்று கடிதத்தில் உங்களுக்கு எழுதினேன். 10 ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிர ஆராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக் கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப் போகவேண்டியதாயிருக்குமே. 11 நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக் காரனாயாவது, பொருளாசைக் காரனாயாவது, விக்கிர ஆராதனைக் காரனாயாவது, தூசிக்கிரவனாயாவது, குடிவெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப் பட்டவனுடனேகூட உண்ணவும் கூடாது. 12 வெளியே இருக்கிறவர்களைக் குறித்துத் தீர்ப்புச் செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக் குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? 13 வெளியே இருக்கிறவர்களைக் குறித்து தேவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.