7
1 நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக் குறித்து நான் எழுதுகிறது என்னவென்றால், பெண்ணைத் தொடாமலிருக்கிறது மனிதனுக்கு நல்லது. 2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாய் இருக்கவேண்டும். 3 கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் கணவனுக்குச் செய்யக்கடவள். 4 மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. 5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்து இருக்கவேண்டுமென்று ஒத்துக் கொண்டால் அன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் இணைந்து வாழுங்கள். 6 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், ஆலோசனையாகச் சொல்லுகிறேன். 7 எல்லா மனிதரும் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது. 8 திருமணம் இல்லாதவர்களையும், விதவை பெண்களையும் குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். 9 ஆகிலும் அவர்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாதிருந்தால் திருமணம் செய்து கொள்ளக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் திருமணம் செய்கிறது நலம். 10 திருமணம் செய்து கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் கணவனை விட்டுப்பிரிந்து போகக்கூடாது. 11 பிரிந்துபோனால் அவள் திருமணம் இல்லாதிருக்கக்கடவள், அல்லது கணவனோடே சமாதானம் ஆகக்கடவள்; கணவனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. 12 மற்றவர்களைக் குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி விசுவாசம் இல்லாதவளாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளி விடாதிருக்கக்கடவன். 13 அப்படியே ஒரு பெண்னுடைய கணவன் விசுவாசம் இல்லாமலிருந்தும், அவளுடனே இணைந்து வாழ அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளி விடாதிருக்கக்கடவள். 14 ஏன் என்றால்,விசுவாசம் குறைவான கணவன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; விசுவாசம் குறைவான மனைவியும் தன் கணவனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன. 15 ஆகிலும்,விசுவாசம் குறைவுள்ளவர்கள் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்கள் அல்ல. சமாதானமாய் இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். 16 மனைவியானவளே, நீ உன் கணவனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? 17 தேவன் அவனவனுக்குப் பங்களித்தது எப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம் செய்கிறேன். 18 ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் இல்லாதவனாயிருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனம் இல்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக. 19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே நோக்கம். 20 அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன். 21 அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ விடுதலையாக முடியுமானால் அதை நலமென்று கடைபிடித்துக்கொள். 22 கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுதந்தரவாளியாய் இருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுதந்திரவாளி கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான். 23 நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்; மனிதருக்கு அடிமைகள் ஆகாதிருங்கள். 24 சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன். 25 அன்றியும் கன்னிகைகளைக் குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மை உள்ளவனாய் இருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று, என் கருத்தைத் தெரியப்படுத்துகிறேன். 26 அதென்னவென்றால், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் திருமணம் இல்லாமலிருக்கிறது மனிதனுக்கு நலமாயிருக்குமென்று நினைக்கிறேன். 27 நீ மனைவியோடே இணைக்கப் பட்டிருந்தால், பிரிந்துபோக வகை தேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால். மனைவியைத் தேடாதே. 28 நீ திருமணம் செய்தாலும் பாவமல்ல; கன்னிகை திருமணம் செய்தாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே துன்பப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டும் என்றிருக்கிறேன். 29 மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறது என்னவென்றால், இனிவரும் காலம் குறைவாயிருக்கிற படியால், மனைவிகள் உள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள் போலவும், 30 அழுகிறவர்கள் அழாதவர்கள் போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள் போலவும், வாங்குகிறவர்கள் வாங்காதவர்கள் போலவும், 31 இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்கவேண்டும்; இந்த உலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே. 32 நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க விரும்புகிறேன். திருமணமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 33 திருமணம் செய்தவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாய் இருக்கலாமென்று, உலகத்திற்கு உரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 34 அதுபோல, மனைவியானவளுக்கும், இளம் பெண்னுக்கும் வித்தியாசமுண்டு. திருமணம் இல்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்கு உரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; திருமணம் செய்தவள் தன் கணவனுக்கு எப்படிப் பிரியமாய் இருக்கலாமென்று, உலகத்திற்கு உரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். 35 இதை நான் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் அகப்படுத்த வேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாய் இருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரை சார்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றும், உங்கள் சொந்த ஆதாயத்துக்காகவே சொல்லுகிறேன். 36 ஆகிலும் ஒருவன் தன் மகளின் இளம் பருவம் கடந்து போனதினாலே, அவள் திருமணம் செய்யாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் திருமணம் செய்வது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, திருமணம் செய்யட்டும். 37 ஆயினும் அதற்கு அவசியத்தை பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சொந்த விருப்பத்தின்படி செய்ய அதிகாரம் உள்ளவனாயுமிருந்து, தன் மகளின் இளம் பருவத்தைக் காக்க வேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவு செய்கிறவன் நன்மை செய்கிறான். 38 இப்படியிருக்க, அவளை திருமணம் செய்து கொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான். 39 மனைவியானவள் தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரை திருமண உடன்பாட்டினால் இணைக்கப்பட்டிருக்கிறாள்; தன் கணவன் மரித்தபின்பு தனக்கு விருப்பமானவனாயும் கர்த்தருக்கு உட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் திருமணம் செய்துகொள்ள விடுதலையாயிருக்கிறாள். 40 ஆகிலும் என்னுடைய கருத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று நினைக்கிறேன்.