9
1 நான் அப்போஸ்தலன் அல்லவா? நான் சுதந்தாரவாளி அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் செயல்களாய் இருக்கிறீர்களல்லவா? 2 நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாய் இராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாய் இருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு அடையாளமாய் இருக்கிறீர்களே. 3 என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மறு மொழியாவது: 4 உண்ணவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா? 5 மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியை அழைத்துக் கொண்டு அலைய எங்களுக்கும் அதிகாரமில்லையா? 6 அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும் மாத்திரந்தானா அதிகாரமில்லை? 7 எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, இராணுவத்திலே சேவை செய்வான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியை சாப்பிடாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் குடியாதிருப்பான்? 8 இவைகளை மனிதர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா? 9 போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ? 10 நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது. 11 நாங்கள் உங்களுக்கு ஞான நன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா? 12 மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம். 13 ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தேவாலயத்திற்கு உரியவைகளில் சாப்பிடுகிறார்கள் என்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்தில் உள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா? 14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாக வேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். 15 அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மை பாராட்டுதளினால் ஒருவன் மனவேதனையாக்குகிறதைப் பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும். 16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப் பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியா;மல் இருந்தால், எனக்கு ஐயோ. 17 நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகம் இல்லாதவனாய்ச் செய்தாலும்,மேற்பார்வையாளர் பதவி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே. 18 ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தை பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன். 19 நான் ஒருவருக்கும் அடிமைப் படாதவனாயிருந்தும், நான் அதிக மக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். 20 யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு, யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். 21 நியாயப்பிரமாணம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணம் இல்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருக்கிறேன். 22 பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். 23 சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். 24 பந்தயப் பாதையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே வெற்றியை பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். 25 பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாய் இருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். 26 ஆதலால் நான் குறிக்கோள் இல்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் செய்யமாட்டேன். 27 மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்கிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி அடக்குகிறேன்.