10
1 இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்று இருக்கிறேனென்றால்; நம்முடைய தகப்பன்மார்கள் எல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும், சமுத்திரத்தின் வழியாய் நடந்து வந்தார்கள். 2 எல்லாரும்மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள். 3 எல்லாரும் ஒரே ஞான ஆகாரத்தைப் சாப்பிட்டார்கள். 4 எல்லாரும் ஒரே ஞான பானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக் கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. 5 அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானவர்களிடத்தில் தேவன் பிரியமாய் இருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். 6 அவர்கள் பேராசை கொண்டதுபோல நாமும் தீங்கானவைகள் மீது பேராசை கொள்ளாதபடிக்கு, இவைகள் நமக்கு அடையாளமாய் இருக்கிறது. 7 மக்கள் அமர்ந்து உண்ணவும், குடிக்கவும், வேசித்தன எண்ணத்தோடு விளையாடவும் எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரக ஆராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். 8 அவர்களில் சிலர் வேசித்தனம் செய்து, ஒரேநாளில் இருபத்து மூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம் செய்யாதிருப்போமாக. 9 அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் சோதித்துப் பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் சோதித்து பாராதிருப்போமாக. 10 அவர்களில் சிலர் முறுமுறுத்து, மரண தூதனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள். 11 இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. 12 இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கக்கடவன். 13 மனிதருக்கு நேரிடுகிற சோதனையே அல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப் படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார். 14 ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரக ஆராதனைக்கு விலகி ஓடுங்கள். 15 உங்களைப் புத்திமான்களென்று நினைத்துப் பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள். 16 நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கிமாய் இருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாய் இருக்கிறதல்லவா? 17 அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்கு பெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாய் இருக்கிறோம். 18 மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாய் இருக்கிறார்களல்லவா? 19 இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? 20 பிற மார்க்கத்தார்கள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்கள் என்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. 21 நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் செய்யக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய உணவு பந்திக்கும் பேய்களுடைய உணவு பந்திக்கும் பங்குள்ளவர்களாய் இருக்கக்கூடாதே. 22 நாம் கர்த்தருக்கு எரிச்சலை தூண்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? 23 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. 24 ஒவ்வொருவனும் தன் சொந்த ஆதாயத்தை தேடாமல், மற்றவர்களுடைய ஆதாயத்தை தேடக்கடவன். 25 கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கி சாப்பிடுங்கள்; மனச்சாட்சியின் நிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்க வேண்டியதில்லை. 26 பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. 27 அன்றியும் விசுவாசம் இல்லாதவர்களில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும் போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியின் நிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் சாப்பிடுங்கள். 28 ஆனாலும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப் பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவன் நிமித்தமும் மனச்சாட்சியின் நிமித்தமும் சாப்பிடாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. 29 உன்னுடைய மனச்சாட்சியைக் குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுதந்திரம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் நினைக்க வேண்டுவதென்ன? 30 மேலும் நான் அதை நன்றியுடனே அநுபவித்தால், நன்றி செலுத்தி அநுபவிக்கிற பொருளைக் குறித்து நான் தூற்றப்படுவானேன்? 31 ஆகையால் நீங்கள் , சாப்பிட்டாலும் குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். 32 நான் என் சொந்த ஆதாயத்தைத் தேடாமல், அநேகருடைய ஆதாயத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப் படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறது போல; 33 நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் தடுமாற்றம் அற்றவர்களாயிருங்கள்.