11
1 நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாய் இருங்கள். 2 சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக் கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன். 3 ஒவ்வொரு கணவனுக்கும் கிறிஸ்து தலையாய் இருக்கிறாரென்றும், மனைவிக்கு கணவன் தலையாயிருக்கிறார் என்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாய் இருக்கிறாரென்றும், நீங்கள் அறிய வேண்டுமென்று விரும்புகிறேன். 4 ஜெபம் செய்கிற போதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்த கணவனும் தன் தலையை அவமதிக்கிறான். 5 ஜெபம் செய்கிற போதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக் கொள்ளாதிருக்கிற எந்த பெண்ணும் தன் தலையை அவமானப் படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. 6 பெண்ணானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலை முடியையும் கத்தரித்துப் போடக்கடவள்; தலை முடி கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் பெண்களுக்கு வெட்கமானால் முக்காடிட்டுக் கொண்டிருக்கக்கடவள். 7 கணவனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாய் இருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; மனைவியானவள் கணவனுடைய மகிமையாய் இருக்கிறாள். 8 ஆண் பெண்ணிலிருந்து தோன்றினவனல்ல,பெண்ணே ஆணிலிருந்து தோன்றினவள். 9 ஆண் பெண்ணுக்காகச் சிருஷ்டிக்கப் பட்டவனல்ல, பெண்ணே ஆணுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள். 10 ஆகையால் தூதர்களினிமித்தம் பெண்ணானவள் தலையின்மேல் முக்காடிட்டுக் கொள்ளவேண்டும். 11 ஆகிலும் கர்த்தருக்குள் பெண்ணில்லாமல் ஆணுமில்லை, ஆணுமில்லாமல் பெண்ணுமில்லை. 12 பெண்ணானவள் ஆணிலிருந்து தோன்றுகிறது போல, ஆணும் பெண்ணால் தோன்றுகிறான்; அணைத்தும் தேவனால் உண்டாயிருக்கிறது. 13 பெண்ணானவள் தேவனை பார்த்து: ஜெபம் செய்கையில், தன் தலையை மூடிக்கொள்ளாமல் இருக்கிறது அழகாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே தீர்மானித்துக் கொள்ளுங்கள். 14 ஆண் முடியை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு அவமானமாய் இருக்கிறதென்றும், 15 பெண் தன் முடியை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாய் இருக்கிறதென்றும் சுபாவமே. உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலை முடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. 16 ஆகிலும் ஒருவன் வாக்குவாதம் செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன். 17 உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்கு ஏதுவாயிராமல், தீமைக்கு ஏதுவாயிருக்கிறதே. 18 முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும் போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன். 19 உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு சமய வேறுபாடுகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்க வேண்டியதே. 20 நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த ஆகாரத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான். 21 இப்படிச் செய்கிறது கர்த்தருடைய பந்தியை உட்கொள்ளுதலல்லவே. 22 சாப்பிடுகிறதற்கும், குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அலட்சியம் செய்து, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன். 23 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, 24 நன்றி செலுத்தி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் சாப்பிடுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 25 ஆகாரம் சாப்பிட்ட பின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாய் இருக்கிறது; நீங்கள் இதைப் பானம் செய்யும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 26 ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் செய்யும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 27 இப்படியிருக்க, எவன் தகுதியின்றி கர்த்தருடைய அப்பத்தைப் சாப்பிட்டு, அவருடைய பாத்திரத்தில் பானம் செய்கிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். 28 எந்த மனிதனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தை சாப்பிட்டு, இந்தப் பாத்திரத்தில் பானம் செய்யக்கடவன். 29 என்னத்தினாலெனில் தகுதியின்றி உணவு உண்பவனும், பானமும் செய்கிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி உணவும் பானம் அருந்தவும் செய்கிறான். 30 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாய் இருக்கிறார்கள்; அநேகர் மரணமும் அடைந்திருக்கிறார்கள். 31 நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். 32 நாம் நியாயந்தீர்க்கப்படும் போது உலகத்தோடே ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கப் படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். 33 ஆகையால், என் சகோதரரே, நீங்கள் உணவு உண்ண கூடிவரும் போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். 34 நீங்கள் ஆக்கினைக்கு ஏதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம் செய்வேன்.