12
1 அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. 2 நீங்கள் தேவனை அறியாதவர்களாய் இருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. 3 ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவை சபிக்கப்பட்டவன் என்று சொல்லமாட்டான் என்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 4 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. 5 ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. 6 கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. 7 அவனவனுக்கு அருளப்பட்ட ஆவியின் அருள் அனேகருடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. 8 எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், 9 வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், 10 வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல மொழிகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு மொழிகளை வியாக்கியானம் செய்தலும் அளிக்கப்படுகிறது. 11 இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது விருப்பத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். 12 எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் உறுப்புகளெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவே இருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். 13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் செய்யப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகம் தீர்க்கப்பட்டோம். 14 சரீரமும் ஒரே உறுப்பாயிராமல் அநேக ருறுப்புகளாயிருக்கிறது. 15 காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாயிராதோ? 16 காதானது நான் கண்ணாய் இராதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாயிராதோ? 17 சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே? 18 தேவன் தமது விருப்பத்தின்படி, உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். 19 அவையெல்லாம் ஒரே உறுப்பாயிருந்தால், சரீரம் எங்கே? 20 உறுப்புக்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே. 21 கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை பார்த்து: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது. 22 சரீர உறுப்புக்களில் பலவீனம் உள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாய் இருக்கிறது. 23 மேலும், சரீர உறுப்புக்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் அழகு இல்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்; 24 நம்மில் அழகு உள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை. 25 சரீரத்திலே வேறுபாடுண்டாயிராமல், உறுப்புக்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாய் இருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். 26 ஆதலால் ஓர் உறுப்பு பாடுபட்டால் எல்லா உறுப்புகளும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா உறுப்புகளும் கூடச் சந்தோஷப்படும். 27 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே உறுப்புகளாயுமிருக்கிறீர்கள். 28 தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித மொழிகளையும் ஏற்படுத்தினார். 29 எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? 30 எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நிய மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் செய்கிறார்களா? 31 இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.