அத்தியாயம்–5
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
1 சகோதரரே, இவைகள் நடக்கும் நாட்களையும் நேரங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. 2 இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். 3 சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு திடீரென அவர்கள் மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை. 4 சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக் கொள்ளத்தக்கதாக, நீங்கள் இருளில் இருக்கிறவர்களல்லவே. 5 நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் பிள்ளைகளல்லவே. 6 ஆகவே, மற்றவர்கள் தூங்குகிறது போல நாமும் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக் கடவோம். 7 தூங்குகிறவர்கள் இரவிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இரவிலே வெறிகொள்ளுவார்கள். 8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம், அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்து கொண்டிருக்கக்கடவோம். 9 தேவன் நம்மைத் தண்டிப்பதற்காக நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். 10 நாம் விழித்திருப்பவர்கள் ஆனாலும், மரித்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருப்பதற்காக அவர் நமக்காக மரித்தாரே. 11 ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
இறுதி அறிவுரைகள்
12 அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே முயற்சி செய்து, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, 13 அவர்களுடைய செயல்களின் அடிப்படையில் அவர்களை மிகவும் அன்பாய் நினைத்துக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள். 14 மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்ன வென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள். 15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள். 16 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். 17 இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள். 18 எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாயிருக்கிறது. 19 ஆவியை அவித்துப் போடாதிருங்கள். 20 தீர்க்கதரிசனங்களை சாதாரணமாய் எண்ணாதிருங்கள். 21 எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். 22 தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
முடிவுரை
23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 24 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். 25 சகோதரரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். 26 சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள். 27 இந்தக் கடிதம் பரிசுத்தமான சகோதரர் எல்லோருக்கும் வாசிக்கச் செய்ய வேண்டுமென்று கர்த்தர் பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன். 28 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.