அத்தியாயம்–4
தேவனுக்குப் பிரியமாக வாழ்வது
1 அன்றியும், சகோதரரே, நீங்கள் இந்தவிதமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய் முன்னேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம். 2 கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த வழிமுறைகளை அறிந்திருக்கிறீர்களே. 3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் முறைகேடான பாலியல் வழிமுறைகளுக்கு விலகியிருந்து, 4 தேவனை அறியாத மக்களைப்போல மோக இச்சைக்குட்படாமல், 5 உங்களில் அவனவன் தன்தன் உடலைப் பரிசுத்தமாகவும் மரியாதையாகாவும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: 6 இந்தக் காரியத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை ஏமாற்றாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட காரியங்கள் எல்லாவற்றையும் குறித்துக் கர்த்தர் நீதியை நிலை நாட்டுகிறவராயிருக்கிறார். 7 தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். 8 ஆகையால் புறக்கணிக்கிறவன் மனிதரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான். 9 சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருப்பதற்கு தேவனால் போதிக்கப் பட்டவர்களாயிருக்கிறீர்களே. 10 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்; 11 வெளியே இருக்கிறவர்கள் நடுவில் ஒழுக்கமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, 12 நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்தியபடியே, அமைதலுள்ளவர்களாய் இருக்க விரும்பவும், உங்கள் சொந்த வேலைகளைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
கர்த்தருடைய வருகை
13 அன்றியும், சகோதரரே, மரித்துப் போனவர்களுக்காக நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போல துக்கித்து, அறியாமையிலிருக்க எனக்கு மனதில்லை. 14 இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே; அப்படியே இயேசுவுக்குள் மரித்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். 15 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் மரித்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. 16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 17 பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 18 ஆகவே, இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.