3
1 கண்காணிக்கப்படுவதை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. 2 எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், சரியாக போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும். 3 அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசை இல்லாதவனுமாக இருந்து, 4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவனும், தன் குழந்தைகளை எல்லா நல்லொழுக்கமும் உள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாக இருக்கவேண்டும். 5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்தத்தெரியாமல் இருந்தால், தேவனுடைய ஆலயத்தை எப்படி விசாரிப்பான்? 6 அவன் பெருமை அடைந்து, சாத்தானைப்போல தண்டனையிலே விழாதபடிக்கு, புது சீடனாக இருக்கக்கூடாது. 7 அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, ஆலயத்திற்கு வெளியே உள்ள மக்களால் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும். 8 அப்படியே, உதவிக்காரரும் இருநாக்கு உள்ளவர்களாகவும், மதுபானத்திற்கு அடிமையானவர்களாகவும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவர்களாகவும் இல்லாமல், நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாகவும், 9 விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாகவும் இருக்கவேண்டும். 10 மேலும், இவர்கள் முதலில் சோதிக்கப்படவேண்டும்; குற்றம் சாட்டப்படவில்லையென்றால் உதவிக்காரராக ஊழியம் செய்யலாம். 11 அப்படியே பெண்களும் நல்ல ஒழுக்கமுள்ளவர்களும், அவதூறுப் பண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். 12 மேலும், உதவிக்காரர்கள் ஒரே மனைவியையுடைய கணவனும், தங்கள் குழந்தைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாக இருக்கவேண்டும். 13 இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள். 14 இதை எழுதும்போது, நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாக வருவேன் என்று நம்பியிருக்கிறேன். 15 தாமதிப்பேன் என்றால், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய முறையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாய் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாக இருக்கிறது. 16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் சரீரத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், யூதரல்லாதவர்களிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே எடுத்துக் கொள்ளப்பட்டார்.