4
1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். 2 பிசாசுக்குரியவன், மனசாட்சியில்லாத பொய்யருடைய பேச்சில் மயங்கி , 3 திருமணம் செய்யக்கூடாது என்றும், விசுவாசிகளும், சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும் அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள். 4 தேவன் படைத்தவைகள் எல்லாம் நல்லதாக இருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஒன்றும் தள்ளப்படவேண்டியது இல்லை. 5 அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும். 6 இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய். 7 சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாக இருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்குரியவைகளை முயற்சிபண்ணு. 8 சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தம் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. 9 இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது. 10 இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். 11 இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு. 12 உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு. 13 நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் உறுதியாக இரு. 14 ஆலய மூப்பர்கள் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக் குறித்து அசதியாக இருக்கவேண்டாம். 15 உன்னுடைய முன்னேற்றம் எல்லோருக்கும் புரியும்படி இவைகளையே நீ சிந்தித்து, இவைகளில் நிலைத்து இரு. 16 உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.