அத்தியாயம்–3
மூர்க்கத்தனத்தைக் கண்டித்தல்
1 என் சகோதரரே, அதிக தண்டனையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராய் ஆகாதிருங்கள். 2 நாம் எல்லாரும் அநேக காரியங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணமனிதனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக் கொள்ளக்கூடியவனுமாய் இருக்கிறான். 3 பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம். 4 கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாக இருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும். 5 அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! 6 நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! 7 எல்லாவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீர்வாழும் உயிரினங்கள் ஆகிய இவைகள் மனிதரால் அடக்கப்படும், அடக்கப்பட்டதும் உண்டு. 8 நாவை அடக்க ஒரு மனிதனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும், மரணத்துக்கு ஏதுவான விஷம் நிறைந்ததுமாய் இருக்கிறது. 9 அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனிதரை அதினாலேயே சபிக்கிறோம். 10 துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படி இருக்க கூடாது. 11 ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? 12 என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான தண்ணீரைக் கொடுக்கமாட்டாது.
ஞானத்திற்குரிய சாந்தம்
13 உங்களில் ஞானியும் விவேகியுமாய் இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் செயல்களை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். 14 உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்ட வேண்டாம்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய் சொல்லாமல் இருங்கள். 15 இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாய் இராமல், உலக சம்பந்தமானதும், பரம்பரைக் குணத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கு அடுத்ததுமாய் இருக்கிறது. 16 வைராக்கியமும், விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் எல்லா தீயச் செய்கைகளுமுண்டு. 17 பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும், அன்புமிக்கதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பாரபட்சமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. 18 நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.