அத்தியாயம்–4
பெருமையை எதிர்த்து விவாதம்
1 உங்களுக்குள்ளே வாக்குவாதங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களிலே போர்செய்கிற ஆசைகளினாலல்லவா? 2 நீங்கள் ஆசைப்பட்டும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலை செய்தும், பொறாமை உள்ளவர்களாய் இருந்தும், அடையக்கூடாமல் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும், போர்களும் செய்தும், நீங்கள் விண்ணப்பம் செய்யாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குச் வாய்க்கிறதில்லை. 3 நீங்கள் விண்ணப்பம் செய்தும், உங்கள் ஆசைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டும் என்று தகாதவிதமாய் விண்ணப்பம் செய்கிறதினால், பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். 4 விபசாரரே, விபசாரிகளே, உலக நட்பு தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்கு நட்புள்ளவானாக இருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். 5 நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாய் இருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? 6 அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமை உள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. 7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். 8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். 9 நீங்கள் துயரப்பட்டு புலம்பி அழுங்கள்; உங்கள் சிரிப்பு புலம்பலாகவும், உங்கள் சந்தோஷம் துயரமாகட்டும். 10 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். 11 சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்தினால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாய் இராமல், அதற்கு நியாயாதிபதியாய் இருப்பாய். 12 நியாயப்பிரமாணத்தை கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? 13 மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருடம் தங்கி, வியாபாரம் செய்து, பணம் சம்பாதிப்போம் என்கிறவர்களே, கேளுங்கள். 14 நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம் தோன்றிப் பின்பு காணாமற்போகிற புகையைப்போல் இருக்கிறதே. 15 ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்ல வேண்டும். 16 இப்பொழுது உங்கள் பிடிவாதங்களில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைப்பாராட்டல் யாவும் தற்பெருமையாய் இருக்கிறது. 17 ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாக இருந்தும், அதைச் செய்யாமல் போனால், அது அவனுக்குப் பாவமாக இருக்கும்.