அத்தியாயம்–5
செல்வந்தர்களின் நிர்ப்பந்தங்கள்
1 செல்வந்தர்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்கள் நிமித்தம் அலறி அழுங்கள். 2 உங்கள் செல்வம் அழிந்து, உங்கள் ஆடைகள் அந்து பூச்சிகளால் வீணாகப் போனது. 3 உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் சரீரத்தைத் உண்ணும். கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள். 4 இதோ, உங்கள் வயல்களை அறுவடை செய்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுவடை செய்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது. 5 பூமியிலே நீங்கள் இன்ப பெருவாழ்வு வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறது போல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள். 6 நீதிமானை நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்த்துக் கொலை செய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை.
பெருந்துன்பத்தின் கீழ் பொறுமை
7 இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடைய வேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். 8 நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்கள் இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாய் இருக்கிறது. 9 சகோதரரே, நீங்கள் நியாயம் தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் குறைசொல்லாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். 10 என் சகோதரரே, கர்த்தருடைய பெயரினாலே சொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும், நீடிய பொறுமைக்கும் ஆதாரமாக வைத்துக்கொள்ளுங்கள். 11 இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களை பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் பார்த்திருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும், இரக்கமும் உள்ளவராயிருக்கிறாரே. 12 குறிப்பாக, என் சகோதரரே, வானத்தின் பேரிலாவது, பூமியின் பேரிலாவது, வேறெதன் மீதும் சத்தியம் செய்யாதிருங்கள்; நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லதென்றும் சொல்லுங்கள்.
துன்பத்தில் ஜெபம்
13 உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் செய்ய வேண்டும்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடவேண்டும். 14 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைக்க வேண்டும்; அவர்கள் கர்த்தருடைய பெயரினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் செய்ய வேண்டும். 15 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை குணமாக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். 16 நீங்கள் குணமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்யுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாய் இருக்கிறது. 17 எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனிதனாயிருந்தும், மழை பெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம் செய்தான், அப்பொழுது மூன்று வருடமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. 18 மறுபடியும் ஜெபம் செய்தான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் கனியை தந்தது. 19 சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும் போது, மற்றொருவன் அவனைத் திரும்ப வழிநடத்தினால், 20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, அநேக பாவங்களை மூடுவானென்று அறிவீர்கள்.