1 John
1 யோவான்
1
1 ஆரம்ப முதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் ஏறெடுத்துப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாக இருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். 2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதை குறித்துச் சாட்சி கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். 3 நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது. 4 உங்கள் சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம். 5 தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற முக்கியமான செய்தியாய் இருக்கிறது. 6 நாம் அவரோடே ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாய் இருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாய் இருப்போம். 7 அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாய் இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 8 நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மை நாமே ஏமாற்றி கொள்ளுகிறவர்களாய் இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது. 9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 10 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாய் இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.