2
1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவம் செய்தால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராய் இருக்கிறார். 2 நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபையின் பலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, முழு உலகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். 3 அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடிக்கிறவர்களாய் இருப்போமானால், அவரை அறிந்திருக்கிறோம் என்பதை அதினால் அறிவோம். 4 அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யனாய் இருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 5 அவருடைய வசனத்தைக் கடைபிடிக்கிறவனிடத்தில் தேவ அன்பு உண்மையாகவே பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். 6 அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும். 7 சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கட்டளையை அல்ல, ஆரம்ப முதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கட்டளையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கட்டளை நீங்கள் ஆரம்ப முதல் கேட்டிருக்கிற வசனம் தானே. 8 மேலும், நான் புதிய கட்டளையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் உண்மையாய் இருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப் போகிறது, உண்மையான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது. 9 ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இது வரைக்கும் இருளிலே இருக்கிறான். 10 தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலை பெற்றிருக்கிறான்; அவனிடத்தில் தடுமாற்றம் ஒன்றுமில்லை. 11 தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.12 பிள்ளைகளே அவருடைய பெயரின் நிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். 13 பிதாக்களே, ஆரம்ப முதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, சாத்தானை நீங்கள் வெற்றி பெற்றதினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். 14 பிதாக்களே, ஆரம்ப முதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாய் இருக்கிறதினாலும், தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் சாத்தனை வெற்றி பெற்றதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 15 உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 16 ஏனெனில், சரீரத்தின் ஆசையும், கண்களின் ஆசையும், வாழ்க்கையின் பெருமைமாகிய உலகத்தில் உள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள். 17 உலகமும் அதின் ஆசையும் ஒழிந்துபோம்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 18 பிள்ளைகளே, இது கடைசிக் காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். 19 அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாய் இருக்கவில்லை; நம்முடையவர்களாய் இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்கள் இல்லை என்று வெளிபடுத்துவதற்காகவே பிரிந்து போனார்கள். 20 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்று எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள். 21 சத்தியத்தை நீங்கள் அறியாததினால் அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யும் உண்டாகாது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 22 இயேசுவைக் கிறிஸ்துவல்ல என்று மறுதலிக்கிறவனே அல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 23 குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையும் உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாய் இருக்கிறான். 24 ஆகையால் ஆரம்ப முதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கட்டும்; ஆரம்ப முதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 25 நித்திய ஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குறுதி. 26 உங்களை ஏமாற்றுகிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்க வேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் எல்லாவற்றயும் குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாய் இருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 28 இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும் போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் நம்பிக்கை உள்ளவர்களாய் இருப்பதற்காக அவரில் நிலைத்திருங்கள். 29 அவர் நீதியுள்ளவராய் இருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவன் எவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.