3
1 நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று உணர்ந்து பாருங்கள்; உலகம் அவரை அறியாத படியினாலே நம்மையும் அறியவில்லை. 2 பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம், இனி எவ்விதமாய் இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும் போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைத் காண்பதினால், அவருடைய சாயலாய் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். 3 அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவன் எவனும், அவர் சுத்தமுள்ளவராய் இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான். 4 பாவம் செய்கிற எவனும் நியாயப் பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப் பிரமாணத்தை மீறுகிறதே பாவம். 5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை. 6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை; பாவம் செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. 7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் ஏமாற்றப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராய் இருக்கிறது போலத் தானும் நீதியுள்ளவனாய் இருக்கிறான். 8 பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆரம்ப முதல் பாவம் செய்கிறான், பிசாசினுடைய செயல்களை அழிப்பதற்காக தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். 9 தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டன், ஏனெனில் அவருடைய விதை அவனுக்குள் நிலைத்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்ய மாட்டான். 10 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் யாரென்றும், பிசாசின் பிள்ளைகள் யாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. 11 நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டும் என்பதே நீங்கள் ஆரம்ப முதல் கேள்விப்பட்ட முக்கிய செய்தியாக இருக்கிறது. 12 சாத்தானால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போல் இருக்க வேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலை செய்தான்? தன் செய்கைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய செய்கைகள் நீதி உள்ளவைகளுமாய் இருந்ததின் நிமித்தம்தானே. 13 என் சகோதர்களே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள். 14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தை விட்டு விலகி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைபெற்றிருக்கிறான். 15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைப்பாதகனாய் இருக்கிறான்; மனித கொலைப்பாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்து இருக்காது என்று அறிவீர்கள். 16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாய் இருக்கிறோம். 17 ஒருவன் இவ்வுலக செல்வம் உடையவனாய் இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று பார்த்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலை பெறுகிறது எப்படி? 18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, செயல்களினாலும் உண்மையினாலும் அன்புகூருவோம். 19 இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்கு உரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப் படுத்திக்கொள்ளலாம். 20 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். 21 பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் நம்பிக்கை கொண்டிருந்து, 22 அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடிக்க அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் கேட்டுக்கொள்ளுகிறது எதுவோ அதை அவராலே பெற்றுக் கொள்ளுகிறோம். 23 நாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாய் இருக்க வேண்டுமென்பதே அவருடைய கட்டளையாய் இருக்கிறது. 24 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.