- கிரயத்தைக் கணக்கிடுதல்
கர்த்தராகிய இயேசு மக்களிடம் இனிமையாகப்பேசி அவர்களை விசுவாசிக்கச் செய்ய முயலவில்லை.
எல்லாருக்கும் பிரியமான ஒரு செய்தியைப் பிரசங்கித்துப் பெருங்கூட்டத்தார் தன்னைப் பின்பற்றும்படிக்கு கவரவில்லை.
உண்மையில் பெரிய கூட்டம் கூட்டமாக மக்கள் அவரிடம் வந்தபோதெல்லாம் சீஷத்துவத்தின் மிகக் கடுமையான விதிகளை அவர்களுக்குச் சொல்லி அவர்களை ஆராய்ந்து பார்ப்பார்.
இத்தகைய சமயங்கள் ஒன்றில் தம்மைப் பின்பற்றுவோர் முதலாவது கிரயத்தைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும் என்று எச்சரித்தார்.
உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும் இந்த மனுஷன் கட்டத் தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற் போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவர் உட்கார்ந்து செல்லுஞ் செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ? அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன் பதினாயிரம் சேவகரைக் கொண்டு எதிர்த்துக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனை பண்ணாமலிருப்பானோ? கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும் போதே, ஸ்தானாதிபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே (லூக்கா. 14:28-32) என்று கூறினார்.
இங்கே கிறிஸ்தவ வாழ்க்கை கட்டடம் கட்டுதலைப் போலும் இருக்கிறதென்றார். நீங்கள் ஒரு கோபுரத்தைக் கட்டத் தொடங்கினால் இதைக் கட்டி முடிப்பதற்குத் தேவையான தொகை இருக்கிறதாவென்று முன்னதாகவே பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கட்டத் தொடங்குவது வெறும் அறிவீனம் என்றார். தொடங்கி முடிக்க முடியாமற்போனால் அந்த அரைகுறைப் கட்டம் உங்கள் விவேகக் குறைவின் நினைவுச் சின்னமாக விளங்கும்.
எவ்வளவு உண்மை. பெரிய சுவிசேஷ கூட்டங்களில் அனலான உணர்ச்சிவயப்பட்டுக் கிறிஸ்துவைப் பின்பற்றத் தீர்மானிப்பது ஒன்றே. ஆனால் தன்னைத் தான் வெறுத்து, சிலுவையை நாடோறும் எடுத்துக்கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்றுவது முற்றிலும் வேறொன்று. கிறிஸ்தவனாவதற்கு கிரயம் ஒன்றும் இல்லாவிட்டாலும், தியாகம், பிரிந்து நிற்றல், கிறிஸ்துவினிமித்தம் பாடுபடுதல் ஆகிய இவற்றாலான பாதையில் நடந்து உறுதியான விசுவாசியாயிருப்பதற்குக் கிரயம் அதிகமாகும். கிறிஸ்தவ ஓட்டத்தை நன்றாகத் தொடங்குவது ஒன்று. ஆனால் நாடோறும், இன்பத்திலும் துன்பத்திலும், நல்ல நாள்களிலும் கெட்ட நாள்களிலும் தொடர்ந்து ஓடி முடிப்பது முற்றிலும் வேறொன்று.
குற்றம் கண்டுபிடிக்கும் உலகம் கவனித்துக்கொண்டே இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கை முழுமதிப்புடையதாக இருக்கலாம் அல்லது எவ்வித மதிப்பும் இல்லாததாக இருக்கலாம் என்று ஏதோ ஓர் உள்ளுணர்வால் உலகம் அறிந்திருக்கிறது. முற்றிலும் தன்னைக் கிறிஸ்துவுக்குக் காணிக்கையாக்கியுள்ள ஒரு கிறிஸ்தவனை உலகம் காணும்போது அது அவனை அவமதிக்கலாம். எள்ளி நகையாடலாம். ஆனாலும் கிறிஸ்துவுக்குத் துணிந்து தன்னை முற்றிலும் சமர்ப்பித்துள்ள மனிதனைத் தன் உள்ளத்தில் அது நன்கு மதிக்கிறது. அரை குறை மனமுள்ள ஒரு கிறிஸ்தவனைக் காணும்போது உலகம் அவனை இகழ்கிறது. இந்த மனிதன் கட்டத்தொடங்கினான், ஆனால் முடிக்க முடியவில்லை. இவன் குணப்பட்டபோது பெரிய அமர்க்களம் பண்ணினான். ஆனால் இப்போதோ நம்மைப் போலத்தான் இருக்கிறான். இவன் தொடங்கும்போது வேகம் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது முன்னேற்றத்தைக் காணோம் என்பார்களே.
நீங்கள் கிரயத்தைக் கணக்கிடுவது நல்லது என்று இரட்சகர் கூறினார். அவருடைய இரண்டாவது உதாரணம் போர் தொடுக்க எண்ணிய ஒரு மன்னனைப்பற்றியது. தன்னிடம் உள்ள பதினாயிரம் வீரரைக் கொண்டு அதைப் போல் இரண்டு மடங்கு ஆள்கள் கொண்ட பகைவனின் சேனையை வெல்ல முடியுமா என்று முன்னமேயே ஆராய்வது அறிவுடமை அல்லவா? போரைத் தொடங்கிய பின்பு தன் நிலைமைபற்றிச் சிந்திப்பது எத்தகைய அறிவின்மை! அவன் செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான். வெண்ணிறக் கொடியை பறக்க விடவேண்டும். தாழ்ந்து பணிந்து சமாதான நிபந்தனைகளைச் சாந்தமாக கேட்கவேண்டும்.
கிறிஸ்தவ வாழ்க்கையைப் போருக்கு ஓப்பிட்டுப் பேசுதல் மிகைப்பட பேசுவதல்ல. உலகம், மாம்சம், பிசாசு என்ற கொடிய பகைவர்கள் உள்ளனர். சோர்வுகளும் இரத்தம் சிந்துதலும் பாடுகளும் உண்டு. எப்பொழுது விடியுமோ என்று ஆவல் மிகக் கொண்டு கண்விழித்தக் காத்துக்கொண்டிருக்கிற களைப்பு நிறைந்த மணிநேரங்கள் பல உண்டு. கண்ணீரும், கடும் உழைப்பும் கொடிய சோதனைகளும் உண்டு. அன்றாட சாவு உண்டு.
கிறிஸ்துவைப் பின்பற்றப் புறப்படும் அனைவரும் கெத்சேமனே, கபத்தா, கொல்கதா ஆகியவற்றை நினைவூட்டிக்கொள்ள வேண்டும். பின்பு கிரயத்தைக் கணக்கிட வேண்டும். ஒன்று கிறிஸ்துவுக்குத் தன்னை முழுவதும் காணிக்கை ஆக்குவதாக இருக்கவேண்டும். இல்லையேல் அவமானத்தையும் இகழ்ச்சியையும் விளைவிக்கும் உண்மையற்ற ஒப்புக்கொடுத்தலாக இருக்கும்.
கர்த்தராகிய இயேசு இந்த இரண்டு உதாரணங்களையும் காட்டி, அவசரமாக உணர்ச்சி வசப்பட்டு தமக்குச் சீஷராகாதபடிக்குத் தாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தோரை எச்சரித்தார். அவரைப் பின்பற்றுவோருக்கு உபத்திரவம் உண்டு, பாடுகள் உண்டு, துன்பங்கள் உண்டு, அவர்கள் கிரயத்தைக் கணக்கிட வேண்டும்!
கிரயம் என்ன? அடுத்த வசனம் விடையளிக்கிறது. அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்து விடாவிட்டால் அவன் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான் (லூக்கா.14:33).
ஓரு முழு மனிதனும் அவனுக்குள் யாவுமே கிரயம் – எல்லாம். இரட்சகருக்கும் கிரயம் இதுவாகத்தான் இருந்தது. அவரைப் பின்பற்றுவோருக்கு இதைவிடக் குறைவாக இருக்கமுடியாது. விபரிக்க முடியாத விதத்தில் செல்வந்தராக இருந்த அவர் தம் விருப்பப்படியே ஏழையாக ஆனாரென்றால் அவருடைய சீஷர்கள் ஏதோ ஒரு குறைந்த கிரயம் செலுத்திப் பொன்முடியைப்பெற்றுவிட முடியாது? கர்த்தராகிய இயேசு கீழ்க்கண்ட தொகுப்புரையைக் கூறித் தம்முடைய பேச்சை முடித்தார்.
உப்பு நல்லது தான், உப்பு சாரமற்றுப் போனால் எதினால் சாரமாக்கப்படும்? (லூக்கா.14:34).
இன்று நமக்குக் கிடைப்பதுபோல வேதாகமக் காலத்து மக்களுக்குச் சுத்தமான உப்பு கிடைக்கவில்லைப் போலத் தோன்றுகிறது. அவர்கள் உப்பில் மணல் போன்ற பல அழுக்குகள் கலந்திருந்தன. எப்படியோ உப்பு அதன் சாரத்தை இழந்துவிடக் கூடியதாயிருந்தது. மீந்திருந்தது சுவையற்றதாகவும் மதிப்பற்றதாகவுமிருந்தது. நிலத்திற்கு உரமாகக் கூட அது பயன்படுத்தப்பட முடியவில்லை. சில சமயங்களில் நடைபாதை அமைக்க அது பயன்பட்டது. எனவே அது வெளியே கொட்டப்படுவதற்கும் மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
இந்த எடுத்துக்காட்டின் போதனை தெளிவாயிருக்கிறது. ஒரே ஒரு முக்கிய நோக்கத்திற்காகவே கிறிஸ்தவன் இருக்கிறான். முற்றிலுமாக தேவனுக்கென்று ஊற்றப்பட்டவாழ்க்கையால் அவரை மகிமைப்படுத்துவதே அப்பெரும் நோக்கம். பூமியிலே செல்வம் சேர்த்து வைப்பதாலும், தன் வசதிகளையும் இன்பத்தையும் நிறைவாக்க விழைவதாலும், உலகத்தில் புகழ்பெற முயல்வதாலும், மதிப்பற்ற உலகத்தில் தன் வாழ்க்கையையும் திறமைகளையும் விற்றுவிடுவதாலும் கிறிஸ்தவன் தன் சாரத்தை இழந்துவிடலாம்.
ஓரு விசுவாசி தான் உயிரோடிருப்பதின் முக்கிய இலட்சியத்தை அடையத் தவறினால் அவன் எல்லாவற்றையும் இழந்தவனாயிருக்கிறான். அவன் உபயோகமுள்ளவனுமல்ல, சாரமற்ற உப்புப்போல மாந்தரின் இகழ்ச்சியுரையாலும், ஏளனத்தாலும் மிதிக்கப்படுவதே அவன் முடிவு.
கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். பேச்சின் முடிவுதுதான். நமது கர்த்தர் கண்டிப்பாகப் பேசிய சில சமயங்களில் இச்சொற்களையும் சேர்த்துக் கூறினார். எல்லாரும் அவர் சொன்னவற்றை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதே அவர் அறிந்து பேசியதுபோலக் காணப்படுகிறது. பல விதத்தில் பொருள் கூறி, வெட்டிப் பிளக்கும் தம் நிபந்தனைகளின் கூர்மையை மழுக்கிவிடச் சிலர் முற்படுவர் என்பது அவருக்குத் தெரியும்.
அதே சமயத்தில் திறந்த உள்ளங்கள் இருக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். அவருடைய உரிமைகளை நன்கு மதித்து அவைகளுக்கு வணங்கி நிற்கிற வாலிபரும் முதியோரும் இருப்பர் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
எனவே வாசலைத் திறந்து வைத்தார். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன். கிரயத்தைக் கணக்கிட்டுப் பார்த்த பின்பும்,
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
தனித்தே நிற்பினும் அவர் பின்னே செல்வேன்
உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே
பின் நோக்கேன் நான் பின் நோக்கேன் நான்.
என்று கூறுவோரே கேட்கிறவர்கள்.











