- நம் இலக்கு யாது?
நான் கேள்வியுற்ற கதை ஒன்றுண்டு. ஓர் ஏழை அம்மாவுக்கு உதவும்படி, அவள் மிகுந்த வறிய நிலையிலிருந்தாள் என்பதை உணர்ந்திருந்து ஒரு குருவானவர், அவள் மனைக்குச் சென்றார். தன் கையில் பணத்தை வைத்துக் கொண்டு அவள் வீட்டுக் கதவைத் தட்டினார். ஆனால் அவளோ கதவைத் திறந்து ஏனென்று கேட்கவில்லை. அவள் வீட்டிலில்லைப் போலும் என்று எண்ணியவராய் அப்போதகர் தம் வழியே சென்றார். சிறிது நேரங்கழித்து ஆலயத்தில் அப்பெண்மணியைச் சந்தித்த போதகர், தாம் அவள் தேவையை அறிந்து வந்ததை அவளிடம் குறிப்பிட்டார். நான் உன் வீட்டுக்கு வந்து பலமுறை கதவைத் தட்டினேன் நீ வீட்டில் இருக்கவில்லையோ? பதிலே இல்லையே என்றார். நீங்கள் எந்த வேளையில் வந்தீர்கள் ஐயா நடுப்பகலாயிருக்கும். அடடா தட்டியவர் நீங்களா? எனக்குக் கேட்டது. நான் பதிலளிக்காததற்காக என்னைத் தயவாக மன்னியுங்கள். வீட்டுக்காரர் தான் வாடகையை வசூலிக்க வந்திருக்கிறாரோவென்று கருதி வாளாவிருந்தேன் என்றார். பல ஏழைப் பெண்களுக்கு இதன் பொருள் என்னவென்பது தெரியும். நான் கேட்கப்பட வேண்டுமென்பது எனது இப்போதைய ஆவல். வாடகையை வசூலிக்க நான் வரவில்லை. உண்மையில், உங்களிடமிருந்து எதையும் பெறவேண்டுமென்பது இந்நூலின் நோக்கமன்று. கிருபைக்கு இலக்கானோர் யாவருக்கும் இரட்சிப்பு உரியதென்றும், அது இலவசமாய் ஏதும் தராமல், கிரயமின்றிப் பெறக்கூடியதென்றும், கூறுவதே இதன் குறிக்கோள்.
அநேக சமயங்களில், அவையோரின் கவனத்தை வசப்படுத்தப் பிரசங்கிகளான நாங்கள் முயற்சிக்கும் போது, சொற்பொழிவைச் செவிமடுப்போர் எண்ணுவதாவது என் கடமை என்னவென்பது இப்போது எனக்குச் சொல்லப்படப் போகிறது. தேவனுக்குச் சேரவேண்டியதை வாங்கிக் கொள்ள வந்திருக்கும் மனிதன் அழைப்பு விடுகிறான். கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமேயில்லை என்பது நிச்சயம். அவன் அழைக்கையில் நான் வீட்டிலிருக்க மாட்டேன். இல்லை, உங்களிடம் எதையோ பெற்றுக்கொள்ள இந்நூல் வராமல் உங்களுக்கு ஏதோ ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறது. நியாயப்பிரமாணம், கடமை, ஆக்கினை இவைகளைக் குறித்து நான் பேச வராமல், அன்பு, நன்மை, மன்னிப்பு, இரக்கம், நித்தியஜீவன் இவற்றைப் பேசவே, நான் வந்திருக்கின்றேன். ஆகையால், நீங்கள் வீட்டில் இல்லாதவர்களைப் போல் நடிக்காதீர்கள். காதுகளிருந்தும் கோளாதவர்களாகவோ, அலட்சிய மனத்துடனோ இருந்து விடாதீர்கள். தேவ நாமத்தின் பேரிலோ அல்லது மனிதனின் பேரிலோ நான் உங்களிடம் எதையுமே கேட்கவில்லை. எங்கள் கரங்களினின்று ஏதோ ஒரு தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. ஆனால் Nதுவனுடைய நாமத்தில் நான் உங்களுக்கு ஓர் இலவச வெகுமதியைத் தர வந்திருக்கிறேன். அதை நீங்கள் பெற்றுக் கொள்வதால், இன்றும், என்றென்றும் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். என் மன்றாட்டுக்கள் அனுமதிக்கப்படும்படி கதவைத் திறவுங்கள். வழக்காடுவோம் வாருங்கள் உங்களுக்கு உடனடியாக மகிழ்வு ஏற்படவும், அது நீடித்து நிலைத்திருக்கவும் ஆண்டவர் தாமே அதைக்குறித்த ஒரு மகாநாட்டுக்கு உங்களை அழைக்கிறார். உங்களை அவர் நேசிப்பதால் உங்களுக்கு இதை அவர் செய்கிறார். உங்கள் கதவைத் தட்டும் ஆண்டவராகிய இயேசுவை அனுமதிக்கத் தவறாதீர்கள். ஏனெனில் உங்களைப் போன்றோருக்காக ஆணியால் கடாவப்பட்ட கரத்தால் அவர் கதவைத் தட்டுகிறார். உங்களுடைய நலன் ஒன்றே அவருடைய பிரதான குறிக்கோளாயிருப்பதால், அவருக்கு செவி சாய்த்து அவரிடம் வாருங்கள். கவனமாயக் கேட்டு உங்கள் உள்ளத்தில் அந்நல்மொழியைப் பதியவிடுங்கள். பரலோகத்தின் ஆரம்பமான புதிய ஜீவனுக்குள் நீங்கள் பிரவேசிக்கும் வேளை ஒருக்கால் வந்திருக்கக் கூடும். கேட்பதன் வாயிலாக விசுவாசம் வரும். வாசிப்பதும் கூட ஒரு கேள்வி ஞானம்தான். இந்நூலை வாசித்துக் கொண்டிருக்கையில் ஒருவேளை உங்களில் விசுவாசம் தோன்றலாம். ஐயம் ஏன்? சகல கிருபைகளின் ஆசீர்வாதமான ஆவியானவரே அவ்விதமே ஆகக் கிருபை புரியுமேன்!








