(LDP – LIVING DISCIPLESHIP PRINCIPLES)
ஆசிரியர்: ஓ. ஜே. கிப்சன் (O. J. Gibson)
இந்த பாடத்திட்டத்திலிருந்து அதிகபட்ச பயனைப் பெறுவது எப்படி
உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள் பற்றிய உங்கள் படிப்பு, தனிப்பட்ட தயாரிப்பு மற்றும் வகுப்பு பங்கேற்புக்கான பின்வரும் வழிகாட்டுதல்களை நீங்கள் கவனித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வகுப்பிற்கு முன் தனிப்பட்ட தயாரிப்பு
உங்கள் வீட்டுப்பாடத்தை முடிக்க ஒவ்வொரு வாரமும் போதுமான நேரத்தை ஒதுக்குங்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் பின்வரும் படிகளை நீங்கள் எடுக்க வேண்டும்:
- தேவனிடம் ஜெபியுங்கள். அவருடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் அவரிடம் உதவி கேளுங்கள். உங்கள் ஜெபம் இதுவாக இருக்கட்டும்: “உமது வேதத்தில் உள்ள அதிசயங்களை நான் காணும்படி என் கண்களைத் திறந்தருளும்” (சங்.119:18).
- குறிப்புகளைப் படியுங்கள். முக்கியமான எண்ணங்களையும், உங்களுக்குப் புரியாத அல்லது கேள்விகள் உள்ள எதையும் அடிக்கோடிடுங்கள். முக்கிய வேத வசனங்களைக் கண்டறிந்து, அவற்றை ஒரு நவீன மொழிபெயர்ப்பிலிருந்து படியுங்கள்.
- ஆய்வுக் கையேடு கேள்விகளுக்கு பதிலளிக்கவும். குறிப்புகளைப் படித்த பிறகு, ஆய்வுக் கையேட்டின் அனைத்து வேலைகளையும் முடிக்கவும். ஒரு கேள்வியில் உங்களுக்கு சிரமம் இருந்தால், அடுத்த கேள்விக்குச் சென்று, பின்னர் சிக்கலான கேள்விக்குத் திரும்புங்கள்.
பொருளடக்கம்
அறிமுகம்: சீஷத்துவத்திற்கான அழைப்பு
2. இயேசு கிறிஸ்து: மெய்யான சீஷன்
3. இயேசு கிறிஸ்து: ஒரு நோக்கத்துடன் கூடிய மனிதர்
4. சீஷத்துவத்தில் முன்னுரிமைகள்
5. கிறிஸ்துவின் அடிமையாக சீஷர்
6. சீஷத்துவத்தில் கடவுளின் பள்ளி
7. தொலைந்து போன உலகத்திற்கான சீஷரின் பார்வை
8. திருச்சபைக்கான சீஷரின் பார்வை
9. சீஷத்துவத்தில் உழைத்தல்
10. சீஷத்துவத்தில் பெருக்கம்
11. சீஷத்துவத்தில் ஆன்மீகப் போர்
12. சீஷரின் தியாக வாழ்க்கை முறை
13. சீஷத்துவத்தில் குணாதிசய வளர்ச்சி
முடிவுரை: கலப்பையில் கை வைத்தல்
பின் இணைப்பு A: “ஒரு விசித்திரமான ஆனால் உண்மையான கதை”
முன்னுரை:
சீஷத்துவத்திற்கு அழைப்பு
“என்னை பின்பற்றுங்கள்” (எனக்குப் பின் சென்று வா). என கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அழைப்பு விடுகிறார் (யோ.1:43, லூக்.5:27) அவ்வழைப்பை கேட்டோர் தங்கள் வலைகளையும், படகுகளையும், வீடுகளையும் விட்டுவிட்டு உலகை அசைக்கும் படியான புனித பயணத்தில் நுழைந்த திரளான மக்கள் கர்த்தராகிய இயேசுவை முற்றுகையிட்டனர். ஆனால் அந்த திரளான எண்ணிக்கை அவரை கவரவில்லை. மதிப்புமிக்க அவருடைய நேரமெல்லாம், தம்மிடமாய் அழைக்கப்பட்ட சீடர்களான தனி நபர்களிடமே செலவிடப்பட்டது. “என்பின்னே வாருங்கள்” என்கிற தன்னிகரற்ற வார்த்தை தன்னிடமாய் அழைக்கிற மேன்மையான அழைப்பாயிருக்கிறது (மாற்.1:17,20) கர்த்தராகிய இயேசுவே மிகபெரும் காரணகராயிருக்கிறார். அவரே குறிக்கோள், கவர்ந்திழுப்பவரும் அவரே. அவருக்கு முன்பு நாம் மதிப்புடையதாக கருதும் அனைத்தும் ஒன்றுமில்லாதவையாக மாய்ந்து போகிறது. பிற்காலத்திலே வந்த கிறிஸ்தவம் அல்ல, கிறிஸ்து தாமே கவரக்கூடியவர்.
அவரின் சீடத்துவ அழைப்பு முதல் பன்னிருவருக்கும். பின்பு எழுபது பேருக்கும் கொடுக்கப்பட்டு (லூக்.10:1) பின்பு அவர்கள் உலக முழுதும் நற்செய்தியை பிரகடனப்படுத்த நியமிக்கப்பட்டனர். “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் …. ” (மத். 28:19-20) இதுவே பேராணை என அழைக்கப்படுகிறது. எல்லா விசுவாசிகளும், சீடராகவும் சீடராக்கவும் கட்டாயமாய் அழைக்கப்படுகின்றனரே தவிர, ஏதோ அர்ப்பணிப்புள்ள அல்லது, தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு குழுவினருக்கு மட்டுமே இவ்வழைப்பு பொருந்தக் கூடியதல்ல. இவ்வழைப்பு எல்லாருக்கும் விடும் அழைப்பு! சீடத்துவக் கோட்பாடு, சீடர்களை தேவனுக்கு உகந்தவர்களாக வாழவும், பின்பு சமூகத்திலும், வாழும் நாட்டிலும், உலகிலும், பெரும் விளைவை ஏற்படுத்தவும் தகுதிப்படுத்துகிறது. ஆண்களையும், பெண்களையும் தமது திட்டத்தின்படி சீடராக்கி உலகிலுள்ள எல்லா மனித இனத்திற்கு முன்பாக இரட்சகரை அறிய செய்வதே சீடத்துவத்தின் உன்னத நோக்கம்.
சீடத்துவத்தின் தன்மை
கர்த்தராகிய இயேசு “சீஷன்” என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு முன்பாகவே இச்சொல் வழக்கத்திலிருந்தது. ஒரு ஆசிரியரை பின்பற்றுகிற எவருக்கும் சீடன் என்ற பதம் பொருந்தும். கிரேக்கர்கள் சீஷன் என்ற பதத்தை ஆசிரியர் மாணவன் உறவுக்கு பயன்படுத்தினார்கள். மேலும் புகழ்பெற்ற தத்துவ ஞானிகளின் கொள்கைகளையும், அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றுகிறவர்களையும் இப்பதம் சுட்டிக்காட்டியது. ‘மெதடஸ்’ (கற்பவர்) என்கிற கிரேக்க பதம் ‘டிசப்புலஸ்’ (மாணவன்) என்று லத்தீன் மொழியில் வருகிறது. இதிலிருந்தே “டிசைப்புள்” (சீஷன்) என்கிற பதம் உருப்பெற்றது. “பின்பற்றுதல்” என்ற சொல்லோடு “சீஷன்” என்ற சொல் நான்கு சுவிசேஷங்களிலும் ஏராளமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. “பின்பற்று” என்கிற சொல் புதிய ஏற்பாட்டின் பிறபகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக “நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறது போல நீங்களும் என்னை பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” (1.கொரி.11:1, எபேசி.5 :1; 1.தெச.1:6) வேதபுத்தகத்தில் பின்பற்றுதிற அனேகர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. (a) யோவான் ஸ்நானகனுடைய சீஷர்கள் (மத். 9:14; லூக். 7:18; யோ.3:25) (b) பரிசேயர்களின் சீஷர்கள் (மத்.22:15-16; மாற்.2:18; லூக்.5:33) மேலும் (c) மோசேயின் சீஷர்கள் (யோ.9:28, பரிசேயர்கள் தங்களை இப்படி சொல்லிக் கொண்டார்கள்) இவ்வாறாக இச்சொல் இயேசுவை பின்பற்றுகிற அவரின் சீடர்களுக்கும் எவ்வித சந்தேகமின்றி பொருந்துகிறது. இவ் எல்லா சீடர்களும் ஒரே வகுப்பை சார்ந்தவர்களாக இல்லை. அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பைப் போல் இரகசிய சீடர்கள் இருந்தனர் (யோ.19:38). இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மிக கடினமென கூறி அவரைவிட்டுபிரிந்து சென்ற போலியான சீடர்களும் இருந்தார்கள் (யோ.6 :66). இச்சொல் அப்போஸ்தலர்கள் என அழைக்கப்பட்ட பன்னிருவருக்கும் சிறப்பான வகையில் பொருந்தும் (மத்.10:1-2, லூக்.6:13) பரிசுத்த வேதாகமம் “சீடன்” என்கிற சொல்லை மூன்று விதங்கள் பயன்படுத்துவதை சுட்டிக் காட்டுகிறது.
- விரிவாக (Broadly) கர்த்தராகிய இயேசுவை பின்பற்றுகிறோம் என கூறுகிற யாவரையும் அல்லது அவரிடத்தில் கற்றுக் கொள்ள வருகை தந்த அனைவரனயும் குறிக்கிறது (மத்.5:1-2) இவர்களில் சிலர் கர்த்தருக்கு தங்களை உண்மையாகவே ஒப்புக்கொடுக்காமல் வெறும் “முகாமில் பின்பற்றுகிறவர்களாக” இருக்கின்றார்கள்.
- பொதுவாக (Generally) “கிறிஸ்தவர்களுக்கு” இது பொருத்தமாக உள்ளது. அந்தியோகியாவில் சீடர்கள் கிறிஸ்துவர்களென்று முதலாவது அழைக்கப்பட்டனர் (அப்.11:26). இச்சொல் பிற இடங்களில் காணப்படுகிறது (அப்.6:1, 11:29, 21:16) இப்பதம் உண்மையான விசுவாசிகளையும் கிறிஸ்துவை பின்பற்றுகிறோமென கூறிக்கொள்கிறவர்களையும் உள்ளடக்குகிறது.
- நேராக (Narrowly) கர்த்தராகிய இரட்சகரால் கொடுக்கப்பட்ட உறுதியான தேவைகளை சந்திக்கிறவர்கள் இவ்வகையை சார்ந்தவர்களாவார்கள். இவர்களை கர்த்தர் “உண்மையான (மெய்யான) சீடர்களென” அழைக்கிறார் (யோ.8:31) இப்படிப்பட்டவர்கள்” என்னுடைய வசனத்தில் தொடர்ந்து நிலைத்து நிற்க வேண்டும் “இதன் பொருள் சுயம் சார்ந்த வாழ்வை மறுத்து, முழுமையாக அவரை பின்பற்றுவதாகும். இச்சீஷர் குழுவை இயேசு உண்மையுள்ளவர்கள் எனக் கண்டார். இக்கட்டுரையில் இவர்களைப் பற்றியே படிக்கிறோம். நேரான இவ்விளக்கத்திற்குரிய சீடர்கள் பின்வரும் கருத்துகளுக்கு உள்ளடங்குவார்கள்.
- a) “மாணவர் என்கிற தகுதியில் ஆசிரியருடைய போதனையை பின்பற்றுகிறவர்களாக மட்டுமல்லாமல் ஆசிரியரையே பற்றிக் கொண்டு மற்றவர்களால் இவர்கள் தங்கள் ஆசிரியரையே பின்பற்றுகிறவர்கள் என அறியப்படுவார்கள்” (யோ.8:31, 15:8) (W.E. Vine, Expository Dictionary)
- b) “ஆசிரியருடைய கருத்துக்கள் ஏற்றுக்கொள்கிறவராக மட்டுமல்லாமல், நடைமுறையில் ஆசிரியரையே பின்பற்றக் கூடியவர்கள்” (International standard Bible Encyclopedia)
- c) “ஒருவர் தன்னுடைய முழு ஆள்தத்துவத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய வசனத்திற்கு ஒப்புக்கொடுத்தவர் …. கிறிஸ்து தன்னில் ஆளுகை செய்ய முழுமையாய் ஒப்புக்கொடுத்தவரும் அவரின் விருப்பத்திற்கு எப்பொழுதும் இசைபவரும் …. தன் சுயத்திற்கென்று எவ்வுரிமையையும் வைத்துக் கொள்ளாதவர்” (Dwight Pentecost)
- d) “சீடன் என்கிற ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்துவின் சாயலுக்கு ஏற்ப வளர கூடியவனும், சுவிசேஷ ஊழியத்தில் பலன்கள் சம்பாதிப்பவனும். அப்பலன்கள் நிலை நிற்க பின்தொடர் ஊழியம் செய்கிறவன்” (Gary Kuhne, The Dynamics of personal follow-up) இதுவே செயல்படும் சீடனின் விளக்கம் என அழைக்கப்படுகிறது.
இவ்விளக்கம் கிறிஸ்தவனென்று அறியப்படுவதிலிருந்தும், ஒழுங்காக சபை கூட்டங்களில் பங்கு பெறுவதிலிருந்தும், ஊழியங்களில் ஈடுபடுவதையும் விட மேற்பட்டதும் அதிகமானதுமாகும். இவர்கள் இரட்சிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல் “மெய்யான சீடர்கள்” என்கிற பதத்திற்கு கர்த்தர் கொடுத்த விளக்கத்தை கைக்கொள்கிறவர்கள்.
சீடத்துவத்திற்கு எதிர்ப்பு
இத்தகையதான சீஷத்துவத்திற்கான அழைப்பு பிரபலமடையாது என்பதை அறிய சிறப்பு காரணம் எதுவும் அவசியமில்லை. திரளான மக்கள் இப்படிப்பட்ட சீஷத்துவத்திற்கு அழைக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் எவ்விதமான மறு உத்தரவும் கொடுக்கவில்லை (லூக்.14:25-26; யோ.6-ம் அதிகாரம்) கிறிஸ்துவின் ஜீவனுக்காய் சுயத்தை வெறுத்து, எல்லாவற்றையும் அவருக்காய் தியாகம் செய்வது ஜென்ம சுபாவமுள்ள மனிதனுக்கோ அல்லது மாமிசத்திற்குரியவனுக்கோ ஏற்புடைய ஒன்றாய் காணப்படுவதில்லை. அஜாக்கிரதையான நம்முடைய வாழ்க்கை முறை, செல்வபெருக்கம், சுய திருப்தி, சீஷத்துவத்தின் ஆவிக்கு எதிரிடையாக உள்ளது. ஸ்தாபன கிறிஸ்தவத்திற்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை, உண்மையில் இது அனேகருக்கு ஒரு தர்மசங்கடமாக இருக்கிறது. வெவ்வேறான காரணங்களால் சீஷத்துவதற்கு மறுப்புகள் எழும்புகிறது. அவைகள்
- சீடன் என்ற சொல் நிரும்பங்களில் காணப்படவில்லை. நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறப்படி “பின்பற்று” “பின்பற்றுகிறவர்” என்கிற சொற்கள் சீடன் என்கிற பொருள்படும்படியே பிறபுதிய ஏற்பாட்டு பகுதிகளில் (நிருபங்கள்) கூறப்பட்டுள்ளது. மேலும் சீஷத்துவத்திற்கு பவுல், தீமோத்தேயு மற்றும் பலர் உறுதியான மாதிரியாக உள்ளனர். இச்சொல் நிருபங்களில் வெறுமனே காணப்படாமல் இருப்பதால் கர்த்தராகிய கிறிஸ்து சீடர்களாக அழைத்த அழைப்பு தகுதியிழந்துவிடுமா? அப்படியெனில் எந்த வேத வசன அதிகாரத்தின்படி?
- பன்னிருவருக்கு மட்டுமே பொருந்தக்கூடியது, அல்லது அர்ப்பணிக்கப்பட்ட ஒருவருக்கே உரியது. பேராணை எல்லா ஜனத்திற்காகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தராகிய இயேசு சீடத்துவத்துத்தைக் குறித்து திரளான மக்களுடன் பேசினார். நம்முடைய ஒரே வேலை சீஷர்களை உருவாக்குதலாகும்.
- சீடத்துவம் பற்றி விவாதிக்கப்படுகிறது அல்லது புறக்கணிக்கப்படுகிறது. ஒருவர். ஒரு எழுத்தாளரின் கருத்தை மறுத்தாலோ அல்லது கர்த்தர் கூறியிருக்கிற சில சொற்களை குறித்து விவாதிப்பதாலோ சீஷத்துவம் என்பது கைவிடப்பட்ட ஒரு உபதேசம் என்றாகி விடாது. இது எல்லா விசவாசிகளாலும் புரிந்துக் கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
இச்சொல்லை குறைந்து மதிப்பிடல் சீஷத்துவத்தின் மிக பெரிய எதிரி ஆகும். ஏராளமான வட்டாரங்களில் அனேகரை கவர இவ்வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான நேரங்களில் வேத ஆராய்ச்சியிலும், புதிதாக மனம் மாறியவர்களை சந்திக்கும் தொடர் ஊழியங்களிலும் அல்லது சிறப்பு நிகழ்ச்சிகளிலும் சீஷத்துவத்தை பற்றி பேசுகிறோம். ஆனால் கிறிஸ்துவின் இச்சொல்லுக்கு நடைமுறையில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இஸ்ரவேலரின் மகிமை மங்கிபோக ஒரு காரணம் நசரேய விரதத்தில் ஏற்ப்பட்ட வீழ்ச்சி ஆகும். தேவனை பின்பற்றுகிற பிரித்தெடுக்கப்பட்ட கூட்டம் இது ஆகும். (எண்.6-ம் அதிகாரம்) பிரிந்தெடுக்கப்பட்ட இவர்கள் “கர்த்தருக்கு பரிசுத்தமானவர்கள்” அவருக்கு சொந்தமானவர்கள், மேலும் அவரின் ஊழியத்திற்கு சமர்ப்பணம் செய்தவர்கள். சாமுவேலின் காலத்திலிருந்து (1.சாமு.1:11) யோவான் ஸ்நானகன் வரையிலும் (லூக்.1:15) நசரேய விரதம் தேசத்தின் ஆவிக்குரிய மகிமைக்கு சாட்சியாக இருந்தது (புல.4:7; ஆமோ.2:11) மக்கள் தேவனைவிட்டு வழிவிலகி சென்றதால் இக்கருத்து மங்கி போனது. இதே போல் மெய்யான சீஷத்துவம் சபையிலிருந்த மங்கிப் போயிற்று. அப்போஸ்தலர் காலத்தின் வைராக்கியம் ஆவிக்குரிய மரணமாக பின் காலத்தில் மாறியது போல இதுவும் ஆயிற்று. ஆனால் இந்நாட்களில் குறிப்பாக கிறிஸ்துவுக்காக உலகை ஆதாயப்படுத்த வேண்டும் என்கிற வாலிபர்கள் மத்தியில் இது உயிர் பெற்றுக் கொண்டிருக்கிறது.
சீஷத்துவத்தின் தேவை :
கர்த்தராகிய இயேசுவை பற்றி பழைய ஏற்பாட்டில் தீர்க்கத்தரிசனமாகவும். புதிய ஏற்பாட்டில் நிறைவேறுதலாகவும் இப்படி சொல்லப்பட்டது “உம்முடைய வீட்டைக் குறித்து உண்டான பக்தி வைராக்கியம் என்னை பட்சித்தது” (சங்.69:9, யோ.2:17) தேவனுடைய ஆவியின் அக்கினி பிதாவுக்கு ஊழியம் செய்த வேளையில் அவருக்குள் பற்றி எரிந்தது. ஆண்டவர் யோவான் ஸ்நானகனைப் பற்றி “அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்” (யோ.5:35) தேவனுக்கு தங்களை ஒப்புக் கொடுத்த தீவிரத்தோடு அவருக்காக எரிந்து பிரகாசிக்கிறவர்களே, ஆவியானவரின் வல்லமையோடு உலகை அசைக்க முடியும். அப்படிப்பட்ட ஆவிக்குரிய சக்தி மற்றும் ஆசீர்வாதம் தேவனின் நிபந்தனைகள் அடிப்படையிலேயே பொங்கி எழும்.
பரிசுத்த வேதாகமம் நமக்கு ஆவிக்குரிய எதிரிகள் ஏராளம் உண்டென உறுதியாக கூறுகிறது. “ஏனெனில் மாம்சத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும். இப்பிரபஞ்சத்தின் அந்தகாரலோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்கு போராட்டம் உண்டு (எபேசி.6:12) இப்போராட்டத்தில் கர்த்தராகிய இயேசுவின் சீடர்களாக நாம் இல்லையெனி எப்படி ஜெயம் கொள்வோம்? “நல்ல போராட்டத்தை போராடும்படியும் (1 தீமோ.1:18) இயேசு கிறிஸ்துவின் நல்போர் சேவகராய்” (2. தீமோ.2:3-4) இருக்கும்படியும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். சேனை தலைவரை பின்பற்றாமல் நாம் எப்படி இவைகளை செய்ய முடியும்? அர்ப்பணிப்பு இல்லாதவர்களுக்கு ஆவிக்குரிய யுத்தம் வெற்றியுள்ளதாய் அமையுமா? கர்த்தராகிய இயேசு கடினமான நிந்தனைகளை சீடத்துவத்துக்கு கூறும்பொழுது வெற்றி வாகை சூடுதலையும் அறிந்திருந்தார். 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பாக அவர் கொடுத்த அழைப்பை மறுபடியும் இப்பொழுது கொடுக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. நாம் ஆண்களையும், பெண்களையும் “உங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு, தன்னைத்தான் வெறுத்து” வர அழைப்பு விடவேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. முன் காலங்களை போல சிலர் மட்டுமே பதிலளிப்பார்கள். ஆனால் இச்சிலரே தேவனுடைய கரத்திலுள்ள வல்லமையான கருவிகளாய் இவ்வுலகத்தை தலைகீழாய் மாற்றக் கூடியவராவார்கள்” குறைந்த பட்சம் தாங்கள் உழைக்கிற பகுதிகளிலே அப்படி செய்வார்கள்.
இயேசு இன்று “என்னை பின்பற்றி வா” என கூறினால் அவரை பின்பற்றி செல்வாயா? “சீடர்களை உருவாக்கிற” பேராணையில் இணைவீரா? அல்லது “இவன் என் சீடராயிருக்க முடியாது” என்கிற சோகமான வார்த்தையை அழைப்பை மறுப்பதால் அவரிடத்திலிருந்து கேட்பீர்களா?
சீடத்துவத்திற்கு அழைப்பு
- நீங்கள் ஏன் இந்த பாடத்தை படிக்க தீர்மானம் செய்தீர்கள்?
- கர்த்தராகிய இயேசுவுக்கு சீடராக இருத்தல் என்பதின் பொருள் என்ன?
- கர்த்தராகிய இயேசு யாரை தன்னுடைய சீடர்களாக இருக்கும் படியாய் அழைத்தார்? உங்கள் பதிலுக்கு வேதவாக்கியங்களைக் கொண்டு பதில் கூறவும்
- “நாம் எல்லாரும் சீடர்களாக இருக்க அழைக்கப் படவில்லை” முடிந்தால் இதற்கு பதிலளிக்கவும்
- இயேசுவின் சீடராயிருப்பது அவசியமானதா?
- இப்பாடத்தின்மூலம், உங்கள் வாழ்க்கையில் எதை தனிப்பட்டமுறையில் கைக்கொள்ள விரும்புதிறீர்கள்.












