- தேவன் பாவியை நீதிமானாக்குகிறார்
ஒரு சிறு பிரசங்கத்தைக் கேளுங்கள். பிரசங்க வாக்கியத்தை ரோமருக்கு எழுதப்பட்ட நிருபம், நாலாம் அதிகாரம் ஐந்தாம் வசனத்தில் நீங்கள் காணலாம்.
ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
பாவியை நீதிமானாக்குகிறவர் என்ற சொற்களைக் கவனியுங்கள். இவை அற்புதமான சொற்களாக எனக்குப்படுகின்றன. பாவியை நீதிமானாக்குகிறவர் என்ற ஒரு தொடர் வேதத்தில் இருப்பது குறித்து நீங்கள் வியப்புறவில்லையா? சிலுவையின் உபதேசங்களை வெறுக்கிறவர்கள், கொடியவர்களைத் தேவன் இரட்சிப்பதாலும், பாவியிலும் நீசப்பாவியைத் தம்மிடம் அவர் சேர்த்துக் கொள்வதாலும் தேவன் பேரில் அதை ஒரு குற்றமாகச் சாட்டுகின்றனர். இந்த தேவவசனம் அக் குற்றச்சாட்டை எவ்வாறு வெளிப்படையாக ஏற்று அறிக்கை பண்ணுகிறதென்று பாருங்கள்! தமது ஊழியனான பவுலின் வாயாலும், பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலாலும் பாவியை நீதிமானாக்குகுpறவர் என்ற பெயரை அவர் தாமே ஏற்றுக் கொள்கிறார். அவர் அநீதியுள்ளவர்களை நீதிமான்களாக்கி, தண்டனைக்குரியவர்களை மன்னித்து, தயைக்கு அருகதையில்லாதோருக்குத் தயை காண்பிக்கிறார். நல்லவர்களுக்குத்தான் இரட்சிப்பு என்று நீங்கள் நினைத்தீர்கள் அல்லவா? சுத்தருக்கும், புனிதமானவர்களுக்கும், பாவமற்றவர்களுக்குமே தேவகிருபை உண்டென்று நினைத்தீர்கள். நீங்கள் மிக நல்லவர்களாயிருந்தால் தேவன் உங்களுக்கு வரமளிப்பார் என்பது உங்கள் எண்ணம். நீங்கள் பாத்திரராக இல்லாதபடியால் அவர் இரக்கத்தைப் பெற்று அனுபவிக்க உங்களுக்கு ஒரு மார்க்கமுமில்லை எனக் கருதினீர்கள். பாவியை நீதிமானாக்குகிறவர் என்ற சொற்களை வாசித்த உங்களுக்கு வியப்புத்தான் மேலிட்டிருக்கும்.
உங்கள் வியப்பு எனக்கு அதிசயமாயில்லை. ஏனெனில் அந்தப் பெரும் தேவகிருபையை நன்கறிந்துள்ள நானே அதனால் விளைந்த பெரு மலைப்பினின்றும் விடுபட முடியவில்லை. ஒரு பரிசுத்த தேவனால் மாசுள்ள ஒரு மனிதனை நீதிமானாக்கவியலும் என்பது ஆச்சரியத்துக்குரியதுதான். நாம் நம் இருதயங்களின் இயல்பான சட்டத்தின்படி எப்போதும் நம் சுயநீதியைக் குறித்தும், சுயதகுதியைக் குறித்தும் பேசி, தேவனுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் நம்மில் நிச்சயமாய் ஏதோ ஒன்றுண்டு என்று அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருக்கிறோம். ஆனால் தேவனோ சகல வஞ்சகங்களையும் காணக்கூடியவராதலின் நம்மில் ஒரு நலனுமில்லை என்பதை அறிந்துள்ளார். நீதிமான் ஒருவனாகிலும் இல்லை (ரோமர் 3:10) என்பது அவர் வாக்கு. நமது நீதிகளெல்லாம் அழுக்கான கந்தை போல் இருக்கிறது (ஏசாயா 64:6) என்பதை அவர் உணர்ந்திருப்பதால், மனிதரிடையே நன்மையையும் நீதியையும் நாடி ஆண்டவரான இயேசு உலகத்துக்கு வராமல், அவை ஏதுமில்லா மாந்தருக்கு அவற்றை வழங்க, நன்மையையும் நீதியையும் அவர் தம்முடன் கொணர்ந்தார். நாம் நீதியுள்ளவர்களாய் இருப்பதால் அவர் நம்மிடம் வராமல், நம்மை அவ்விதம் மாற்றவே வருகிறார். அவர் பாவிகளை நீதிமான்களாக்குகிறார்.
ஒரு வாய்மையுள்ள வக்கீல் நீதி தலத்துக்கு வருகையில், ஒரு நிரபராதியின் வழக்கை ஏற்றுக்கொண்டு அவனுக்கு எதிராகப் பொய்யாகச் சாட்டப்பட்டிருக்கும் குற்றங்களினின்று அவனை விடுவித்து, நீதிமானாய் நிறுத்தும்படி அவனுக்காக வழக்காட விரும்புகிறான். நிரபராதியை நீதிமானாயக் காட்டுவதே வழக்கறிஞரின் நோக்கமாய் இருக்க வேண்டுமேயன்றி, குற்றவாளியை அவன் மறைக்கக் கூடாது. குற்றவாளியை நீதிமானாக்குதல் உண்மையில் மனிதனுடைய உரிமையல்ல, அதற்கான வல்லமையும் அவனிடம் கிடையாது. இந்த அற்புதம் ஆண்டவர் ஒருவருக்கே உரியது. எல்லையற்ற நீதியின் மன்னராயிருக்கும் Nதுவனுக்கு, உலகில் நீதிமான் எவனுமில்லை என்பதும் நல்லதையே செய்து பாவம் செய்யாதவனில்லை என்பதும் தெரியும். ஆகையால் தம் எண்ணுக்கடங்காத தெய்வீகத் தன்மையினிமித்தமும் விவரிக்காத அவர் தம் அன்பின் பொருட்டும் நீதிமானை நீதிபரனாய்க் காண்பித்தலைக் காட்டிலும் பாவியை நீதிமானாக்கும் பணியையே அவர் அதிகமாய் மேற்கொள்ளுகிறார். தேவனற்ற மனிதனை நீதிமானாக ஏற்கும் வகையில் தம்முன்னிலையில் நிறுத்த வழி வகைகளை வகுத்துள்ளார். அவர் நிறுவியுள்ள முறைமையின்படி, குற்றவாளி ஒருவன் தன் வாழ்நாளெல்லாம் குற்றமற்றவனாய் இருந்தது போலவும், பாவத்தினின்று முற்றுமாக விடுதலை பெற்றவன் போலவும் பூரண நீதியுடன் அவர் அவனை நடத்த முடியும். அவர் பாவியை நீதிமானாக்குகிறார்.
இயேசு கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க உலகுக்கு வந்தார். இது மிகவும் வியப்புக்குரிய காரியம். அதிலும் அதை அனுபவிப்பவர்கள் தாம் அதைக்குறித்து அதிகமாய் அதிசயப்பட வேண்டும். தேவன் என்னையும் நீதி மானாக்கினாரேயென்ற உண்மை இன்றளவும் எனக்குப் பெரிய ஆச்சரியத்தை விளைவிப்பதாயுள்ளது. அவரின் சர்வவல்லமையுள்ள அன்பைத் தவிர்த்து, நான் ஒரு அபாத்திரமான பாண்டம் என்பதையும், அசுத்தப் பிண்டம் என்பதையும், பாவக்குவியல் என்பதையும் உணர்ந்திருக்கிறேன். கிறிஸ்து இயேசுவைப் பற்றிய விசுவாசத்தால் நான் நீதிமானாக்கப்பட்டிருக்குpறேனென்றும், பூரண நீதிமானைப்போல நடத்தப்படுகிறேனென்றும், தேவனுக்கு சுதந்திர வாளியாகவும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரவாளியாகவும் ஆக்கப்பட்டுள்ளேன் என்றும் ஒரு முழுமையான நிச்சயத்தின்படி நான் அறிந்திருக்கிறேன். இருப்பினும் இயற்கையாக, பெரும் பாவிகளிடையே நான் என் இடத்தை வகிக்க வேண்டும். முற்றிலும் அருகதையற்ற நான், அருகதையுள்ளவன் போல் நடத்தப்படுகிறேன். நான் முன்னர் பாவியாய் இருந்தும் கூட, நான் எப்போதுமே தேவபக்தியுடன் இருப்பதுபோல நேசிக்கப்படுகிறேன். யாருக்குத்தான் இது வியப்பைத் தராது? அத்தகைய தயவுக்காகச் சுரக்கும் நன்றி, அதிசயம் என்னும் ஆடைகளை அணிந்து நிற்கிறது.
இதனால் ஏற்படும் ஆச்சரியம் ஒருபுறமிருக்க, உங்களுக்கும் எனக்கும் சுவிசேஷம் கிடைக்க இது எவ்வளவு துணைபுரிகிறதென்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். தேவன் பாவியை நீதிமானாக்குகிறாரெனில், பிரிய வாசகரே! அவர் உங்களையும் நீதிமானாக்கக்கூடும். நீங்களும் அதே வகையைச் சேர்ந்தவர்கள் தானே? இந்த வினாடியில் நீங்கள் மனந்திரும்பாதிருந்தால் இது உங்களுகு;கு ஏற்ற விமரிசனமாகும். நீங்கள் தேவனற்றவர்களாய் வாழ்ந்திருந்து, அவபக்தியுள்ளோராய் இருந்திருக்கிறீர்கள்.
சுருங்கக்கூறின், நீங்கள் முன்பும் இப்போதும் பாவியாய் இருந்து வருகிறீர்கள். ஒருகால், ஓய்வுநாளன்று நீங்கள் ஆராதனை நிகழும் எந்தத் தலத்துக்கும் செல்லாமல் இருந்திருப்பீர்கள். தேவனுடைய நாள், அவர்தலம், அவர் வார்த்தையைப் பற்றியெல்லாம் கவலையற்றவர்களாய் நாட்களைக் கழித்திருப்பீர்கள். நீங்கள் பாவியாயிருந்தீர்கள் என்பதை இது நிரூபிக்கிறது. மேலும் துயரமளிக்கக்கூடிய காரியம் யாதெனில் தேவன் நிலைத்திருக்கிறார் என்பதை நீங்கள் சந்தேகித்து, உங்கள் ஐயத்தை வாய்விட்டுக் கூறியிருக்கவும் கூடுமென்பதுதான். தேவனுடைய பிரசன்னத்தின் சின்னங்கள் மிகுந்திருக்கும் இந்த அழகான பூமியில் நீங்கள் வாழ்ந்து வந்த போதிலும், தேவத்துவம் அவர் வல்லமை முதலியவற்றைத் தெளிவாய்க் குறிக்கும் சான்றுகளுக்கு உங்கள் கண்களை மூடிக்கொண்டு விட்டீர்கள். தேவனே இல்லையென்பது போல் வாழ்ந்து விட்டீர்கள். உண்மையில் தேவன் என்று ஓருவரில்லை என்பதை நிச்சயப்படுத்தும் முறையில் ஒரு விளக்கத்தை உங்களால் செய்து காண்பிக்க முடிந்திருக்குமானால், நீங்கள் மிகவும் மகிழ்வுற்றிருப்பீர்கள். இந்த விதமாய் நீங்கள் பல ஆண்டுகளைக் கழித்திருக்கலாம். நீங்கள் வகுத்துக்கொண்ட வழிகளிலேயே சௌகரியமாக நீங்கள் வாழ்வை நடத்தினாலும், உங்கள் வழிகள் எதிலுமே தேவன் இல்லை. கடலுக்கு உப்புநீர் என்று முத்திரையிட்டால் அதன் விளக்கம் புரியுமோ அதே வண்ணம் உங்களுக்குப் பாவி என்ற முத்திரையிட்டால் உங்களைப்பற்றிய விளக்கம் புலனாகும். இது உண்மைதானே?
ஒருகால் நீங்கள் வேறு ரகமாயிருக்கலாம். மதசம்பந்தமான சகல முறைமைகளையும் நீங்கள் கிரமமாகக் கடைப்பித்திருப்பினும், அவற்றில் உங்களுக்கு நாட்டமே இல்லாமல், உண்மையில் நீங்கள் தேவனற்றவர்களாயிருக்கக்கூடும். தேவனுடைய அடியார்களை நீங்கள் சந்தித்திருந்தாலும் நீங்கள் தேவனை மட்டும் ஒருபோதும் சந்திக்கவில்லை. நீங்கள் பாடகர் குழுவில் இருந்தபோதிலும் உங்கள் உள்ளத்தினின்று தேவனைத் துதிக்கவில்லை. தேவனுக்காக உங்கள் இருதயத்தில் அன்பும், உங்கள் ஜீவியத்தில் அவருடைய கற்பனைகளின் பேரில் மதிப்பும் இருந்ததில்லை. இச்சுவிசேஷம் உங்களைப்போன்றவர்களுக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது. தேவன் பாவியை நீதிமானாக்குகிறார் என்னும் இச் சுவிசேஷம் உங்களுக்கே தகும். அற்புதமான இச்செய்தி களிப்புறும் வகையில் உங்களுக்குக் கிடைப்பதாயிருக்கிறது. இது உங்களுக்குப் பொருத்தமாயிருக்கிறதல்லவா? நீங்கள் இதை அங்கீகரிக்க வேண்டுமென்று நான் எவ்வளவாய் விரும்புகிறேன். நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்தால், உங்களைப் போன்றதோருக்காக இதை அருளும் தேவனுடைய குறிப்பிடத்தகும் கிருபையை உணர்ந்து பாவியை நீதிமானாக்குவதா? அப்படியானால் ஏன் நான் நீதிமானானக்கூடாது? அதுவும் இப்பொழுதே நீதிமானாக மாறலாகாது? என்று உங்களுக்குள் கூறிக்கொள்வீர்கள்.
தவிர, மேலும் கவனியுங்கள். தேவனுடைய இரட்சிப்பு அபாத்திரவான்களுக்கும், அதற்காக ஆயத்தமாயில்லாதவர்களுக்குமெயென்பதால், அது அப்படிதான் இருக்கவேண்டும்மென்பது தெளிவாகிறது. இந்த வாக்கு வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது நியாயமானது. ஏனெனில் அருமை நண்பரே, சுயமாக எந்த நீதியுமில்லாதவர்களுக்குத்தான் நீதி தேவையாயிருக்கிறது. என் வாசகர்களில் எவரேனும் சம்பூணர நீதிமான்களாயிருப்பின், அவர்கள் நீதிமான்களாக்கப்பட வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் கடமைகளைச் சரிவரச்செய்தால் பரலோக நிச்சயம் உங்களுக்குக் கிட்டுமென்ற உறுதியில் இருக்கிறீர்கள். அப்படியானால் ஓர் இரட்சகரோ அல்லது கிருபையோ உங்களுக்கு எதற்கு? நீதிமானாக்கப்படுதலைக் குறித்து நீங்கள் ஏன் கவலையுற வேண்டும்? உங்களுக்குச் சுவை தருபவை எதுமிராதபடியால் இதற்குள் என் புத்தகம் உங்களுக்கச் சலிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
உங்களில் யாரேனும் அப்படியொரு பெருமைபாராட்டிக் கொள்வீர்களேயானால் சிறிது நேரம் எனக்குச் செவிகொடுத்துக் கேளுங்கள். நீங்கள் சுவாசித்து எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு திண்ணமாக நீங்கள் உங்கள் ஆத்துமாவை இழப்பீர்கள். உங்கள் சுய செய்கையால் உருவான நீதியைக் கொண்டுள்ள நீதிமான்களே, ஒன்று நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் அல்லது ஏமாறுகிறீர்கள். ஏனென்றால் வேதம் பொய் பகர முடியாது. அதன் சத்தியம் தெளிவாய்க் கூறுவதாவது: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. எவ்வாறாயினும், சுய நீதியுள்ளோருக்கு என்னிடம் பிரசங்கிப்பதற்கான சுவிசேஷம் ஏதுமில்லை. இயேசு கிறிஸ்துவே நீதிமான்களை அழைக்க வரவில்லையென்பதால், அவர் செய்யாததை நான் செய்யப்போவதில்லை. நான் அழைத்தால் நீங்கள் வரமாட்டீர்கள். ஆகவே அப்படியும் உங்களை நான் அழைக்கமாட்டேன்.
நீங்கள் நீதியென்று கருதுவது எத்தகைய மாயமென்பதை நீங்களே கண்டு உணரும்வரை அதை நீங்கள் பார்க்கவேண்டுமென்றுமட்டும் நான் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். ஒரு சிலந்தி வலைக்குள் பாதி வலுகூடப் பெறாதது அது. அதை விட்டொழியுங்கள். தூர ஓடுங்கள். சகோதரரே, தங்களுக்குள்ளே நீதிக்கண்கொண்டு பாரமலிருக்கிறவர்கள்தாம் நீதிமான்களாக்கப்பட வேண்டியவராயுள்ளனர். தேவனுடைய நியாயாசனத்தின் முன் அவர்கள் நீதிமான்களாய்க் காணப்பட அவர்களுக்கு ஒன்று தேவைப்படுகிறது. எது தேவையோ அதை மட்டுமே தேவன் செய்வாரென்பதை நிச்சயமாய் அறியுங்கள். எல்லையற்ற ஞானம் அனாவசியமானதை ஆற்ற ஒருபோதும் எத்தனிக்காது. தேவைக்கு மேற்பட்டதை மேற்கொள்ள இயேசு முயற்சிப்பதே கிடையாது. நீதிமானாயிருக்கிறவனை நீதிமானாக்குதல் தேவனுடைய பணியல்ல. அது ஒரு மூடனின் வேலை. ஆனால் அநீதியுள்ளவனை நீதிமானாக்குவது, எல்லையற்ற அன்பும் கிருபையும் ஆற்றும் பணியாகும். பாவியை நீதிமானாக்குதல் – இந்த அற்புதம் தேவனுக்கே உரியதாம்.
நிச்சயமாய்ச் சுகமளிக்கவல்ல பிணிகளுக்குரிய அருமையான பரிகாரங்களைக் கண்டுபிடித்த ஒரு மருத்துவன் உலகில் எங்கேனும் இருப்பானாகில் இந்த வைத்தியன் எங்கு அனுப்பப்படுவான்? பரிபூரண சுகமுள்ளவர்களிடமா? இருக்காது. நோயாளிகளே இல்லாத ஒரு மாகாணத்தில் அந்த மருத்துவனை நீங்கள் அனுப்பினீர்களானால், தான் தனக்கு ஏற்ற இடத்திலில்லை என்பதை அவன் உணருவான். அவன் செய்யக்கூடிய வேலையெதுவும் அங்கிராது. பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. இதைப்போலவே, கிருபை, மீட்பு என்னும் பெரும் பரிகாரங்கள் ஆத்தும நோயுற்றோருக்கு வேண்டியவை என்பது தெளிவாகிறதன்றோ? சுகமுள்ளோருக்கு அவை தேவையில்லை.
அருமை நண்பரே, உங்களுக்கு ஆத்துமப் பிணி உண்டென்று நீங்கள் உணர்ந்தால், உங்களுக்காக வைத்தியர் உலகுக்கு வந்துள்ளாரென்பதை அறியுங்கள். உங்கள் பாவத்தினிமித்தம் நீங்கள் மோசமான நிலையிலிருப்பின், இரட்சிப்பின் திட்டத்தில் உங்களை நோக்கியே இலக்கு அமைந்துள்ளதென்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அன்பின் ஆண்டவர் கிருபையின் முறைமையை ஒழுங்குபண்ணியபோது, உங்களைப்போன்றவர்களைத்தாம் தம் கருத்தில் வைத்திருந்தாரென்று நான் கூறுகிறேன்.
தாராள சிந்தையுள்ள ஒரு மனிதன் தன்னிடம் கடன்பட்டோருக்கெல்லாம் மன்னிப்பை வழங்கத் தீர்மானித்தானென்று வைத்துக்கொள்வோம். அவனிடம் கடன்பட்டோருக்கு மட்டுமே இது பொருந்துமென்பது தெளிவு. ஒருவன் அவனுக்கு ஆயிரம் ரூபாய் தரவேண்டும். வேறொருவன் அவனுக்கு ஐம்பது ரூபாய் தரவேண்டும். ஒவ்வொருவனுக்கும் தான் பட்டிருக்கும் கடன் தீர்க்கப்படவேண்டும். பில்லுக்கு ரசீது கொடுக்கப்படவேண்டுமென்பதே ஆவல். ஆனால் மிகுந்த தாராள சிந்தையுடையவனாலும்கூட தன்னிடம் ஒரு கடனும்பட்டிராத யாருடைய கடன்களையும் மன்னிக்க முடியாது. சர்வவல்லமையுள்ளவரால் பாவமில்லாதவிடத்து மன்னிக்கவியலுமா? ஆகையால் பாவமில்லாத உங்களுக்கு மன்னிப்பு இராது. குற்றமிழைத்தவர்களுக்கே மன்னிப்பு வழங்கப்படும். பாவிகளுக்கே மன்னிப்பு உரியது. மன்னிப்பு தேவைப்படாதவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது பற்றிப் பேசுதல் மதியீனமே.
நீங்கள் பாவியாயிருப்பதால் நீங்கள் கெட்டுப்போகவேண்டுமென்று நினைக்கிறீர்களா? நீங்கள் இரட்சிக்கப்படக்கூடுமென்பதற்கு இதுவே காரணம். நீங்கள் பாவியென்பதை ஒப்புக்கொள்வதால், உங்களைப்போன்றவர்களுக்குத்தான் கிருபை நியமிக்கப்பட்டுள்ளதென்பதை நீங்கள் நம்பவேண்டுமென்று உங்களைத் தூண்டுகிறேன்.
பாவி யென்பவன் புனிதன்
அவ்வாறவனை ஆக்கியோர் பரிசுத்தாவியே
இவ்விதம் ஒரு பக்தர் பாடியிருக்கிறார். இயேசு இழந்து போனதைத் தேடி இரட்சிக்கிறாரென்பது மெய்யே. அவர் மரித்து உண்மையான பாவிகளுக்கு மெய்யான பரிகாரமாய் மாறினார். வெறும் வாய்ச்சொல்லாக அல்லாமல் உண்மையாகவே தங்களைப் பரிதபிக்கப்படத்தக்க பாவிகள் என்று குறிப்பிட்டவர்களை நான் சந்திக்க நேர்ந்தால் பெருமகிழ்வுறுகிறேன். நம்பகமான பாவிகளுடன் நான் இரவெல்லாம் பேசத்தயார். கிருபை விடுதி, வார நாட்களானாலும், ஞாயிற்றுக்கிழமையென்றாலும் அத்தகையோரின் முகத்துக்கு நேராகத் தன் கதவுகளை மூடுவதில்லை. நமது ஆண்டவராகிய இயேசு கற்பனைப் பாவங்களுக்காக மரிக்காமல், வேறு எதனாலும் அகற்றப்படமாட்டாத ஆழ்ந்த சிவப்புக் கறைகளைப் போக்க தம் இதயக் குருதியைச் சிந்தினார்.
பாவக் கறையால் கருமைபடிந்த பாவி எவனோ அவனை வெண்மையாக்கவே இயேசு கிறிஸ்து வந்தார். ஒரு சுவிசேஷப் பிரசங்கியார் ஒருமுறை, இப்பொழுதே கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது என்ற வசனத்தின் பேரில் ஆற்றிய பிரசங்கத்தின் தன்மையைக் கேட்டு உணர்ந்த ஒருவர் அவரிடம் வந்து, ஏதோ குற்றவாளிகளுக்குத்தான் நீங்கள் பிரசங்கித்தீர்களென்று யாரும் கருதுவார்கள். உங்கள் பிரசங்கம் ஒரு சிறைக்கூடத்தில் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றார். அதற்கு அவர், அப்படியல்ல, நான் சிறைக்கூடத்தில் பிரசங்கிப்பதாயின், அந்த வசனத்தின் பேரில் பேசேன். அங்கே தெரிந்து கொள்ளும் வசனம், பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது என்பதாயிருக்கும் எனப் பதிலளித்தார். அது உண்மையே, சுயநீதியுள்ளவர்களுக்குத்தான் அவர்கள் பெருமை நீங்கும்படி நியாயப்பிரமாணம் உள்ளது. சுவிசேஷமோ கெட்டுப்போனவர்களின் கவலை நீங்கும்படி அவர்களுக்கே உரியதாயிருக்கிறது.
நீங்கள் கெட்டுப்போகவில்லையெனில் உங்களுக்கு ஓர் இரட்சகர் எதற்கு? வழிதவறிச் செல்லாத ஆடுகளின் பின்னால் ஒரு மேய்ப்பன் போகவேண்டுவதில்லையே? தன் பணப்பையிலிருந்து விழாத ஒரு காசுகளுக்காக ஒரு பெண் வீட்டைப் பெருக்கித் தேடவேண்டியதேன்? மருந்து நோயுற்றோருக்குத்தான். உயிர்ப்பிக்க வேண்டியது மரித்தோரைத்தான். குற்றமிழைத்தவருக்கே மன்னிப்பு. கட்டுண்டவர்களுக்குத்தான் விடுதலை. குருடர்களுக்கே கண் திறக்கப்படவேண்டும். மக்கள் குற்றம் புரிந்தவர்களாயும் ஆக்கினைக்குப் பாத்திரவான்களாயுமுள்ளனரென்று அனுமானிக்கப்பட்டாலன்றி, இரட்சகரும் , அவரது சிலுவையின் மரணமும் மன்னிப்பின் சுவிசேஷமும் எவ்விதம் உத்தரவாதமுள்ளதாகக் கருதப்படக்கூடும்?
சுவிசேஷம் நிலைத்திருப்பதற்குக் காரணம் பாவிதான். உங்களுக்காக வரும் இச்செய்தியை வாசிக்கும் பிரிய நண்பரே! நீங்கள் அபாத்திரராயிருந்தால், அருகதையற்றவராயிருந்தால், நரகத்திற்கு எற்றவராயிருந்தால், உங்களுக்காகவே சுவிசேஷம் அனுப்பப்பட்டும், ஒழுங்கு பண்ணப்பட்டும், அறிவிக்கப்பட்டும் வருகிறது. தேவன் பாவிகளை நீதிமான்களாக்குகிறார்.
இதை இன்னும் தெளிவாய்க்கூற நான் விரும்புகிறேன். இதுவரை நான் கூறியதிலிருந்தே இது தெளிவாயிருக்குமென்று நான் கருதினாலும், தேவன் ஒருவரே மனிதன் அதை அறியும்படி செய்ய வல்லவராதலின், இன்னும் புரியும்படி விளக்குகிறேன் விழிப்புற்ற ஒருவனுக்கு தன்னைப்போல் கெட்டுப்போனவனும் குற்றவாளியுமானவனுக்கா இரட்சிப்பென்று பெரும் மலைப்பு ஏற்படும். தான் மனஸ்தாபப்படும் மனிதனாயிருந்தால்தான் அது தனக்கு உரித்தாகுமென்று அவன் எண்ணினாலும், மனஸ்தாபப்படுதல் இரட்சிப்பின் ஒரு பகுதியென்பதை அவன் மறந்துவிடுகிறான். ஓ, நான் இந்த மாதிரியும் அந்த மாதிரியும் இருக்கவேண்டும் என்று அவன் கூறிக்கொள்கிறான். உண்மைதான், ஏனெனில் இரட்சிக்கப்பட்டதின் பலனாக அவன் இந்தமாதிரியும் அந்த மாதிரியும் மாறியிருப்பான். ஆயினும் இரட்சிப்பின் பலன்கள் எதுவும் அவனிடம் தோன்றுமுன்னரே, அவனுக்கு இரட்சிப்பு கிட்டிவிடுகிறது. வெறுமை, அவலம், கேவலம், மோசம் எனும் விளக்கங்களுக்கு இலக்கமான பாவியாக அவன் இருக்கiயில்தான் தேவனுடைய சுவிசேஷம் அவனை நீதிமானாக்க வருகிறது.
ஆகையால் தங்களில் ஒரு நன்மையுமில்லையெனக் கருதுவோரும், ஒரு மேலான உணர்வுகூடக் கிடையாதென அஞ்சுவோரும், தங்களைத் தேவனிடம் சிபாரிசு செய்துகொள்ளத் தகும் தகுதி ஏதுமற்றவரென எண்ணுவோரும், இரக்கத்தின் தேவன் அவர்கள் நல்லவர்களென்றல்ல, தாம் நல்லவராயிருப்பதால்த்தான் அவர்களை ஏதுமற்றவர்களாகவே, எவ்வித தகுதிகளையும் அவர்களில் காணாமலே, அவர்களை அங்கீகரிக்கவும் உடனடியாய் அவர்களை மன்னிக்கவும் சித்தமாயிருக்கிறாரென வற்புறுத்துகிறேன். அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணுவதில்லையா? தேவனற்ற மக்களுள்ள தேசங்களிலும்கூட அவர் பலன் ஈயும் பருவங்களை வழங்கி, காலா காலங்களில் மாரியையும் சூரிய ஒளியையும் அனுப்புவதில்லையா? ஆம், சோதோமுக்கும் அதன் கதிரவனும், கொமோராவுக்கு அதன் பனியும் உண்டு.
நண்பரே, தேவனுடைய பெரிதான கிருபை நமது கருத்துக்கும் அப்பாற்பட்டதாயிருப்பதால், அதன் தகுதிக்கேற்ப நீங்கள் அதை மதிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். பூமிக்கு வானம் எவ்வளவு தூரமாய் இருக்கிறதோ, அவ்வளவு பெரிதாய் நம் நினைவுகளைவிட அவர் நினைவுகள் உள்ளன. அவரால் அபரிமிதமாய் மன்னிக்கவியலும். பாவிகளை பிழைக்கச் செய்யவே இயேசுகிறிஸ்து பூமிக்கு வந்தார். தவறு இழைத்தோருக்கே மன்னிப்பு தேவை.
உங்களை எவ்வகையிலும் மாற்றிக்கொள்ள நீங்கள் எத்தனிக்காமல், பாவியை நீதிமானாக்கும் அவரிடம் நீங்கள் இருக்கும் வண்ணமாகவே வாருங்கள். ஒரு பிரபல ஓவியர் தாம் வாழ்ந்த நகர் பகுதியை ஓவியமாகத் தீட்ட எண்ணியபோது, சரித்திர சம்பந்தமான காரணங்களுக்காக, ஊரில் வழக்கமாய்க் காணப்படும் சில நபர்களைத் தன் படத்தில் புகுத்த விரும்பினார். பரட்டைத் தலையுடனும் கந்தலுடனும் அழுக்குடனும் காட்சியளிக்கும் தெருக்கூட்டுவோன் யாவருக்கும் அறிமுகமானவனாகையால் படத்தில் அவனுக்கென்று ஓர் இடமிருந்தது. அழுக்குக் கந்தையுடனிருந்த அவனிடம் ஓவியர், நான் உன்னைப் படம் வரையும்படி நீ என் அறைக்கு வருவதாயின் உனக்கு நல்ல சன்மானம் அளிப்பேன் என்றார். அவன் காலையில் அவரிடம் வந்தபோது, அவன் உடனே சென்று தன் வேலையைக் கவனிக்கும்படி அனுப்பிவிடப்பட்டான். ஏனெனில் அவன் தன் முகத்தைக் கழுவி தலை வாரிவிட்டு, கண்ணியமான உடை தரித்து வந்திருந்தான். அவன் பிச்சைக்காரக் கோலத்தில்தான் தேவைப்பட்டானேயன்றி வேறு எந்த வகையிலும் அவன் அழைக்கப்படவில்லை. அவ்விதமே சுவிசேஷமும் கூட நீங்கள் பாவியாக மட்டுமே வருவதென்றால்தான் உங்களைத் தன் கூட்டத்தில் வரவேற்கும் . சீர்திருத்தத்திற்காக காத்திராமல் மீட்புக்காக உடனே வாருங்கள். தேவன் பாவியை நீதிமனாக்குவதால், உங்களின் கீழான நிலையில் அவர் உங்களைச் சந்திக்க வருகிறார்.
உங்கள் பரலோகத்தின் பிதாவிடம் உங்கள் சகல பாவத்துடனும் வாருங்கள். அருவருப்போடும் அழுக்கோடும் மூடப்டாமலும், உயிர்த்தரிக்க துறக்கவோ தகுpயற்ற நிலையோடும் நீங்கள் இருக்கிற கோலத்திலேயே இயேசுவிடம் வாருங்கள். படைப்பின் குப்பைகளே வருக. மரணத்தைத் தவிர வேறேதும் எதிர்பார்க்கத் தைரியமற்றோராயிருப்பினும் வருக. தீயக்கனவுபோல் பெருந்துயர் உங்கள் இருதயத்தை அழுத்தினும் வாருங்கள். ஆண்டவரை அணுகி, மற்றுமொரு பாவியை அவர் நீதிமானாக்க வேண்டுமென விருப்பம் செய்யுங்கள். அவர் ஏன் செய்யக்கூடாது? இப் பெரும் தேவகிருபை உங்களை ஒத்தவருக்கே குறிக்கப்பட்டிருப்பதால், நீங்கள் வாருங்கள். வேதமொழியிலேயே நான் அதைக் கூறியதால், அதைவிட வன்மையாக நான் குறிப்பிடவொண்ணாது. தேவனாகிய கர்த்தரே, பாவியை நீதிமானாக்குகிறவர் என்னும் கிருபையுள்ள நாமத்தை வகித்துள்ளார். சுபாவத்தில் பாவியாய் இருப்பவர்களை நீதிமான்களாக்கவும், நீதிமான்களாகவும் அவர்கள் நடத்தப்படவும் அவர் வழிசெய்கிறார். உங்களுக்கு இது ஓர் அற்புதமான வாக்காக இல்லையா? இக் காரியத்தைக் குறித்து நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்க்குமுன், வாசகரே நீங்கள் உங்கள் இருக்கையினின்று எழாதீர்கள்.











