- தேவனே நீதிமான்களாக்குகிறவர்
(ரோ.8:33)
நீதிமானாக்கப்படல் ஓர் அற்புதமான காரியமே. நாம் தேவனுடைய கற்பனைகளை ஒருபோதும் மீறாதிருப்பின், நாம் நீதிமான்களாகவே இருந்திருப்போமாகையால், நமக்கு அது தேவைப்பட்டிராது. தன் வாழ்நாள் முழுவதும் தான் செய்யவேண்டிய காரியங்களையே செய்து, செய்த தாகாதவற்றைச் செய்யாமலும் இருந்தவன் எவனோ அவன் நியாயப்பிரமாணத்தின்படி நீதிமானாக்கப்படுகிறான். ஆனால் அன்பான வாசகரே, நீங்கள் அந்த வகுப்பாரல்லவென்பதை நான் நிச்சயமாய் அறிவேன். பாவமற்றவரென்று பாசாங்கு செய்யுமளவுக்கு நீங்கள் பொய்யரல்லவாகையால், நீங்கள் நீதிமானக்கப்படல் அவசியம்.
இப்போதும் நீங்கள் சுயமாகவே உங்களை நீதிமானாக்கிப் கொள்வீர்களெனில், உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வீர்கள். ஆகவே பயனற்ற அம்முயற்சியில் இறங்காதீர்கள்.
உங்கள் நண்பர்கள் உங்களை நீதிமான்களாக்கவேண்டுமென்று நீங்கள் கேட்பீர்களாயின், அவர்களால் யாது செய்யக்கூடும்? அற்ப சொற்பத் தொகைக்காக உங்களைக் குறித்து ஓரிருவர் நலமானதைக் கூறுவதாயினும், ஒன்றும் பெறாமலேயே உங்களைப் பற்றிப் பழிபேசப் பலர் இருப்பர். அவர்களின் நியாயத்தீர்ப்புக்கு அவ்வளவு மதிப்பில்லை.
தேவனே நீதிமான்களாக்குகிறவர் என்று நம் வசனம் கூறுகிறது. இது வியப்புக்குரிய செய்தியாதலால் இதை நாம் சிரத்தையுடன் சிந்தித்து பார்க்கவேண்டும்.
முதலாவதாக, தவறு புரிந்தவர்களை நீதிமான்களாக்கவேண்டுமென்று தேவனையன்றி வேறு எவரும் நினைத்திரார். அவர்கள் கலகக் குணத்துடன் பகிரங்கமாக வாழ்ந்திருக்கிறார்கள். இரு கைகளாலும் தீயச் செயல்கள் புரிந்திருக்கிறார்கள். வரவர அவர்கள் போக்கு மோசமாயிற்று. பாவத்தினிமித்தம் அவர்கள் துன்புற நேரிட்டும்கூட மறுபடியும் அவர்கள் பாவத்துக்கு திரும்பினார்கள். இதனால் சில காலம் அவர்கள் பாவத்தைவிட்டு விலகும் நிர்பந்தம் ஏற்பட்டது. அவர்கள் நியாயப்பிரமாணத்தை மீறியதுடன், சுவிசேஷத்தை மிதித்துப்போட்டார்கள். கிருபையின் பிரகடனங்களை அவர்கள் நிராகரித்து, தேவனற்ற நிலையில் நீடித்திருந்தார்கள். அவர்கள் எவ்வாறு மன்னிப்பைப் பெற்று நீதிமான்களாக்கப்படுவார்கள்? அவர்களுடைய சகாக்கள் சலிப்புடன் இவர்கள் திருந்துவார்களெனும் நம்பிக்கையில்லை என்று அவர்களைக் குறித்துக் கூறுகிறார்கள். கிறஸ்தவர்களும்கூட அவர்களைக் கவலையோடு காண்கிறார்களே தவிர நம்பிக்கையுடன் பார்ப்பதில்லை.
ஆனால் அவர்களுடைய தேவன் அப்படியில்லை. அவரோ, தம் மகிமையான தெரிந்துகொள்ளும் கிருபையால் உலகம் உருவாகுமுன்னரே அவர்களில் சிலரைத் தேர்த்தெடுந்திருந்தாராகையால், அவர்களை நீதிமான்களாக்கி நேசரால் ஏற்கத்தக்கவர்களாக அவர்களை மாற்றும்வரை ஓய்திரார். எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார் என்று எழுதப்பட்டிருக்கவில்லையா? இவ்வாறாக, சிலரை நீதிமான்களாக்க வேண்டுமென்று ஆண்டவர் உறுதிகொண்டுள்ளார். அச் சிலரில் நீங்களும் நானும் ஏன் இருக்கலாகாது.
தேவனைத் தவிர்த்து யாரும் என்னை நீதிமானாக்க நினைத்திருக்கமாட்டார்கள். எனக்கே நான் ஓர் அதிசயமாக இருக்கிறேன். இதே வகையில், மற்றவர்களில் கிருபை காணப்படுகிறதென்பதை நான் ஐயுறவில்லை. தர்சுப் பட்டணத்தின் சவுலை எடுத்துக்கொள்ளுங்கள். தேவனுடைய ஊழியர்களுக்கு விரோதமாக அவன் எப்படி குமுறியெழுந்தான்? ஒரு பசித்த ஓநாயைப்போல வலமும் இடமுமாக சாடி, ஆடுகளையும் ஆட்டுக்குட்டிகளையும் அவன் இம்சிக்கவில்லையா? இருப்பினும், தமஸ்குவின் பாதையில் தேவன் அவனைப் பிடித்து அவன் மனதை மாற்றி, அவனைப் பூரணமாக நீதிமானாக்கியதால் , அவன் அதி விரைவில், விசுவாசத்தால் நீதிமானாக்கப்படல் எனும் சத்தியத்தின் பேரில் மாபெரும் பிரசங்கியாக மாறினான். கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தால்தான் நீதிமானாக்கப்பட்டதைக் குறித்து அவன் அடிக்கடி எண்ணி அதிசயித்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு காலத்தில் அவன் நியாயப்பிரமாணத்துக்கடுத்த கிரியைகளினால்தான் இரட்சிப்பு உண்டாகுமென்று உறுதியாய் நம்பியிருந்தான். பிறரை இம்சித்த சவுலைப்போன்ற ஒருவனை நீதிமானாக்கவேண்டுமென்று தேவன் ஒருவரே நிச்சயித்திருக்க முடியும். ஆனால் ஆண்டவராகிய தேவன் கிருபையின்மேல் மேம்பட்டவரன்றோ!
ஆயினும் பாவியை நீதிமானாக்க வேண்டுமென்று யாரேனும் கருதியிருந்தால், தேவன் மட்டுமே அதைச் செய்திருக்கக்கூடும். தனக்கு விரோதமாகச் செய்யப்படாத பிழைகளை மன்னித்தல் என்பது யாருக்குமே சாத்தயமாகாது. ஒருவர் உங்களுக்குத் தவறிழைத்துவிட்டாரென்று வைத்துக்கொள்வோம். நீங்கள் மன்னித்துவிடலாம். நீங்கள் அப்படிச் செய்வீர்களென்றே நம்புகிறேன். ஆனால் உங்களையன்றி மூன்றாம் நபர் யாரும் அவரை மன்னிக்கமுடியாது. பிழை உங்களுக்கு விரோதமாய் இயற்றியதெனில் மன்னிப்பு உங்களிடமிருந்தே வரவேண்டும்.
தேவனுக்கு விரோதமாக நாம் பாவஞ்செய்திருந்தால் நம்மை மன்னிப்பது அவர் அதிகாரத்தில் உள்ளது. அதனால்தான் தாவீது 51ம் சங்கீததத்தில் தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்தேன் என்கிறான். காரணம் தேவனுக்கு விரோதமாக இழைக்கப்பட்ட தீமையை அவரே அகற்றமுடியும். நாம் தேவனுக்குக் கடன்பட்டிருப்பதை நமது பெரும் சிருஷ்டிகரால் தீர்க்கவியலும். அது அவருக்கு மகிழ்வையழிக்கும். அதை அவர் மன்னித்தால் அது மன்னிக்கப்பட்டுவிட்டதென்றாகும். நாம் யாருக்கும் விரோதமாகத் தவறு புரிந்தோமோ, அந்தப் பெருமைக்குரிய தேவன் ஒருவரே அப்பிழையை அழிக்கவல்லவர்.
எனவே, அவர் கரங்களில் இரக்கத்தை நாடி அவரிடம் செல்ல நாம் முற்படுவோம். தங்களிடம் அறிக்கைபண்ணும்படி தூண்டும்போதகர்களால் நாம் வேறு திசைக்குத் திரும்பிவிடாதிருப்போமாக. அவர்கள் பாராட்டும் உரிமைகளுக்கு ஏற்ற அதிகாரம் ஏதும் வேதவசனத்தில் கிடையாது. தேவநாமத்தின் பேரில் சுத்திகரிப்பை அறிவிக்க அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பினும்கூட நமது மத்தியஸ்தரான இயேசு கிறிஸ்துவின்மூலம் நாமே நம் மகத்தான ஆண்டவரிடம் சென்று அவர் கரத்தில் மன்னிப்பை நாடுவது மிகச் சிறந்தது. ஏனென்றால், இதுவே நேர்மையான வழியென்பது நமக்கு நிச்சயமாய்த் தெரியும். பிரதிநிதி கொண்ட மார்க்கம் இடர்களை வருவிக்கக்கூடியது. ஆதலால் வேறு மனிதனின் பொறுப்பில் விடாமல், உங்கள் ஆத்மீகக் காரியங்களை நீங்களே கவனித்துக்கொள்ளுதல் நல்லது.
தேவன் தாமே பாவியை நீதிமானாக்கக்கூடியவர். அதை அவர் பரிபூரணமாய் நிறைவேற்ற முடியும். நமது பாவங்களை அவர் தம் தோளில் ஏற்று, அவற்றை நீக்கிவிடுகிறார். அவற்றைத் தேடினாலும் காணமுடியாதென்று அவர் கூறுகிறார். அவரது எல்லையில்லா அன்பைத்தவிர வேறெந்த காரணமுமின்றி, சிவேறென்றிருக்கும் பாவங்களை உறைந்த மழையைப்போல் வெண்மையாக்கவல்லதும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்க வல்லதுமான ஒரு மகிமையான மார்க்கத்தை அவர் ஆயத்தப்படுத்தியிருக்கிறார். உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன் என்று கூறுகிறார். பாவத்துக்கு ஒரு முடிவு ஏற்பட அவர் வழிசெய்கிறார். பழைய கால மனிதன் ஒருவர், தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார் என்று வியப்புக்குள்ளாகி மொழிந்தார் (மீகா 7:18).
இப்போது நாம் நியாயத்தீர்ப்பைக் குறித்தோ, அல்லது மாந்தருடைய செயல்களுக்குத்தக்கபடி தேவன் கூறவிருக்கும் முடிவைக் குறித்தோ சிந்திக்கப்போவதில்லை. நீதியுள்ள தேவனிடம் நீங்கள் சட்ட ரீதியில் நடந்துகொள்ளப்போவதாய்க் கூறுவீர்களேயானால், நித்திய கோபாக்கினை உங்களுக்கு வரவிருக்கிறது. ஏனெனில் அதற்குத்தான் நீங்கள் அருகதையுள்ளவர்களாய் இருக்கிறீர்கள். நம் பாவங்களுக்குத்தக்கபடி அவர் நமக்குச் சரிக்கட்டாததால், அவர் நாமம் வாழ்க. ஆனால் இப்போது அவர் நம்மை இலவசமான கிருபையோடும் அளவற்ற இரக்கத்தோடும் நடத்தி, நான் உங்களை அன்போடு வரவேற்று, இலவசமாய் உங்களை நேசிக்கிறேன் என்று உரைக்கிறார்.
மகத்தான தேவன் மட்டில்லாக் கிருபையோடு பாவியை நடத்த வல்லவரென்பது நிச்சயமாகவே உண்மைதானென்று நம்புங்கள். ஆம். தேவனற்றவனை, அவன் எப்போதுமே தேவபக்தியுடையவனாயிருந்ததுபோல் பாராட்டக்கூடியவராயுள்ளார். கெட்ட குமாரனின் கதையைக் கவனமாக வாசித்து, அந்த மன்னிக்கும் தந்தை கெட்டலைந்து திரும்பிய மைந்தனை, அவன் வீட்டைத் துறந்து சென்று கேவலமான வாழ்வில் ஈடுபடாதிருந்தால், எவ்விதமாக அவனை நடத்தியிருக்கக்கூடுமோ, அதே அன்புடன் அவனை வரவேற்றான் என்பதை கவனியுங்கள். மூத்த சகோதரன் முணுமுணுத்துக் கோபமுறுமளவுக்கு, வீடுதிரும்பிய மகனைக் கேளிக்கைகளுடன் வரவேற்று தன் அன்பை வெளிப்படுத்தாமல் இருக்கவில்லை அவன் தந்தை. சகோதரரே, நீங்கள் எவ்வளவு பெரிய குற்றவாளியாய் இருந்தபோதிலும், உங்கள் பிதாவும் தேவனுமானவரிடம் திரும்பி வருவீhகளாயின், நீங்கள் பிழையே புரியாதது போன்று அவர் உங்களை நடத்துவார். உங்களை நீதிமானாக மதித்துப் போற்றுவார். நீங்கள் இதற்கு என்ன கூறப்போகிறீர்கள்?
தேவனையன்றி வேறோருவரும் பாவிகளை நீதிமானாக்க நினையாரென்றும், தேவனையன்றி மற்ற யாருமே அவ்வாறு செய்யக்கூடாது என்றும் இருக்கையில் ஆண்டவர் அதைச் செய்ய வல்லவராயிருக்கிறாரென்பது எவ்வளவு மேன்மையான காரியம்! தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர் என்று பவுல் அப்போஸ்தலன் சவால்விடுப்பதைக் காணுங்கள். தேவன் ஒரு மனிதனை நீதிமானாக்கினாரெனில், அது சிறப்பாய்ச் செய்யப்பட்டதும், சரியாய் முடிக்கப்பட்டதும், நிதானமாய் நடத்துப்பட்டதும், நித்தியமாய் நிலைக்கத்தக்கதுமாயிருக்கும்.
சுவிசேஷத்தைப் பிரசங்கிப்போருக்கு விரோதமாக வன்மம் பாராட்டி எழுதப்பட்டிருந்த ஓர் அச்சுப் பிரதியை ஒருமுறை நான் வாசிக்க நேரிட்டது. மாந்தரிடமிருந்து பாவத்தை அகற்றக்கூடுமென்று நாம் ஏதோ ஒரு கோட்பாடு மூலம் கற்பனைபண்ணிக் கொள்ளுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் எந்தக் கோட்பாட்டையும் பற்றியிராமல், ஓர் உண்மையையே நிலைநாட்டி வருகிறொம். தம் விலைமதிப்பற்ற இரத்தத்தின்மூலம் கிறிஸ்து உண்மையாகவே பாவத்தை அகற்றுகிறாரென்றும் தேவன் மக்களை நியாயந்தீர்க்கையில், கிறிஸ்துவினிமித்தம் தெய்வீக இரக்கத்தின் அடிப்படையில், தவறிழைத்தோரை மன்னித்து அவர்களை நீதிமானாக்குகிறாரென்றும், அவர்களில் தாம் காணும் அல்லது காணவிருக்கும் எதன் மூலமாயும் அல்லாமல், தம் சொந்த இதயத்தில் சுரக்கும் தம் இரக்கத்தின் ஐசுவரியத்தின்படியே அவ்வாறு செய்கிறாரென்றும் அறிவிக்கப்படும் இச்சத்தியமே பரலோகத்தின் கீழ் மிக உயர்ந்ததாயுள்ளது. இதையே நாம் பிரசங்கித்தோம், பிரசங்கித்து வருவோம். தேவனே நீதிமான்களாக்குகிறார். அதாவது பாவியை நீதிமானாக்குகிறவர் அவரே. அதைச் செய்ய அவர் நாணவில்லை, நாங்களும் அதை அறிவிக்க வெட்கமுறவில்லை.
நீதிமானாக்கப்படல் தேவனால் அருளப்பட்டதால், அது கேள்விக்கு இடமில்லாததயுள்ளது. நீதிபதி என்னைக் குற்றவாளியில்லை என்றபின் வேறு யார் என்னைக் கண்டனம் பண்ணக்கூடும்? உலகிலுள்ள மிகப் பெரும் நீதிமன்றமே என்னை நீதிமானென்று அறிவித்துவிட்டால், என்மேல் பழிசுமத்துவோர் யார்? எழுச்சியுற்ற மனச்சாட்சிக்கு தேவனால் நீதிமானாக்கப்படல் என்பது போதுமான பதிலாக இருக்கிறது. நம் முழு தன்மை மீதும் பரிசுத்த ஆவியானவர் சமாதானத்தை ஊற்றும்போது, நாம் பயமற்றவர்களாக மாறுகிறோம். இவ்விதம் நாம் நீதியைப் பெற்றபின் சாத்தானிடமிருந்தும் தேவனற்றவர்களிடமிருந்தும் வரும் சகல கர்ச்சனைகளுக்கும் வசைகளுக்கும் நம்மால் பதிலளிக்க முடியும். இதைப் பெற்றுக்கொண்டு நாம் மரிக்கலாம். இதை உடையவர்களாய் நாம் மறுபடியும் தைரியத்துடன் எழுந்து இறுதி நாட்களின் பெரும் நியாயத்தீர்ப்பினை எதிர்த்து நிற்கலாம்.
அப்பெரு நாளில் அஞ்சாமல் நான் நிற்பேன்:
என் பேரில் பழிபோடுவார் யார்?
பாவத்தின் பெரும் சாபமும் பழியும் நீங்க
ஆண்டவர் என்னைச் சுத்திகரித்தார்
நண்பரே, உங்கள் பாவங்கள் அனைத்தையும் ஆண்டவரால் அழிக்க முடியாது. இதை ஏதோ குருட்டாம்போக்கில் நான் கூறவில்லை. எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும். உங்கள் தொண்டைவரை நீங்கள் பாவத்தில் அமிழ்ந்திருப்பினும், எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்ற ஒரே வார்த்தையில் அவர் உங்கள் மாசை அகற்றிவிடுவார். ஆண்டவர் பெரிதும் மன்னிக்கிறவராயிருக்கிறார்.
நான் பாவ மன்னிப்பு உண்டென்று விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது. சமாதானத்தோடே போ! என்று இந்த வினாடியும்கூடி அவர் கூறக்கூடும், அவர் அவ்வாறு செய்தாராயின், வானம், பூமி பூமியின் கீழுள்ள எந்த அதிகாரத்தாலும் உங்களை ஐயத்துக்கோ அல்லுது சீற்றத்துக்கோ உள்ளாக்க முடியாது. சர்வவல்லவரின் அன்பைச் சந்தேகிக்காதீர்கள். நீங்கள் தேவனுக்குக் குற்றமிழைத்ததுபோல் உங்கள் சகா ஒருவன் உங்களுக்குத் தீமை புரிந்திருப்பின், உங்களால் அவனை மன்னிப்பது சாத்தியமாயிராது. ஆயினும் தேவனுடைய தானியத்தை நீங்கள் உங்கள் மரக்காலால் அளக்காதீர்கள். பூமியிலிருந்து வானம் எவ்வளது உயரமோ, அவ்வளது தூரமாய் அவருடைய நினைவுகளும் வழிகளும் உங்களுடையவற்றினின்று மாறுபட்டுள்ளன.
நல்லது, தேவன் என்னை மன்னிப்பாராகில் அது பெரிய அற்புதமாய்தானிருக்கும் என்று நீங்கள் மொழிவீர்கள். உண்மைதான், அது மகோன்னதமான அற்புதமாயிருக்குமாகையால் அவர் அதைச் செய்வாரென்பது உறுதி. ஏனெனில், நாம் சிறிதும் எதிர்பாராது ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களை அவர் ஆற்றுகிறார்.
பயங்கர குற்றவுணர்வால் பாதிக்கப்பட்ட நானே எனக்கு வாழ்வு துன்பகரமாயிருத்தலை உணர்ந்தேன் எனினும், பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள். அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள். நானே தேவன். வேறொருவரும் இல்லை என்ற கட்டளையை நான் கேட்டபோது, நான் ஏறிட்டு நோக்கிய ஓரே வினாடியில் ஆண்டவர் என்னை நீதிமானாக்கிவிட்டார். எனக்காகப் பாவக்கோலமான இயேசு கிறிஸ்துவையே கண்டேன். அக்காட்சியை எனக்கு இளைப்பாறுதலை அளித்தது. பாலைவனத்தில் கொள்ளிவாய்ச் சர்ப்பத்தால் தீண்டப்பட்டோர் வெண்கலச் சர்ப்பத்தை ஏறிட்டு நோக்கியதுமே உயிர்பெற்றனர். அவ்வண்ணமே நானும் சிலுவையில் அறையுண்ட இரட்சகரை நோக்கியதுமே உயிர் தரித்தேன். நான் விசுவாசிக்குமாறு என்னில் கிரியை புரிந்த பரிசுத்த ஆவியானவர், அவ்விசுவாசத்தின் வாயிலாக எனக்குச் சமாதானத்தை நல்கினார். குற்றஞ்சாட்டப்படுவவேனென்று முன்பு நான் எவ்வளவு நிச்சயமாய் இருந்தேனோ, அவ்வளவு நிச்சயமாக நான் மன்னிக்கப்பட்டேனென்பதையும் உணர்ந்தேன். நான் அழிவுக்குப் பாத்திரன் என்பதை ஆண்டவர் வசனம் அறிவித்தாலும், என் மனச்சாட்சியே அதற்குச்சான்று பகர்ந்தாலும் அதில் எனக்கு ஐயமிருக்கவில்லை. ஆனால் தேவன் என்னை நீதிமானாக்கியபோதே, அதே சான்றுகள் வாயிலாக நான் நீதிமான் என்பதில் எனக்கு உறுதி ஏற்பட்டது. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான் என்று வேத வாக்கியம் கூறுகிறபடி, நான் விசுவாசித்தேன் என்பதற்கு என் மனச்சாட்சி சான்றாக இருப்பதால், என்னை மன்னித்ததன்மூலம் தேவன் நீதிபரராய் விளங்குகிறார். இவ்விதமாக ஓரே காரியத்தை ஆமோதிக்கும் பரிசுத்த ஆவியானவரின் சாட்சியும், என் சொந்த மனச்சாட்சியும் எனக்கு உண்டு. இக்காரியத்தில் என் வாசகரும் தேவனுடைய அறிக்கையைப்பெற்று, உடனுக்கு உடன் தங்களிலேயே சாட்சி உடையவர்களாயிருக்க வேண்டுமென்று நான் எவ்வளவாய் ஆசிக்கிறேன் தெரியுமா?
தன் கிரியைகளினாலே நீதிமானாக இருக்கும் நபர் யாரேனும் உண்டென்றால், அந்த நபரைக் காட்டிலும் தேவனால் நீதிமானாக்கப்பட்டவனே அதிக பாத்திரமான நிலையில் இருக்கிறானென்பதையும் நான் கூறவிரும்புகிறேன். நாம் போதுமான பணிகளைச் செய்துவிட்டோமா என்ற நிச்சயம், சுயமாக நீதிமானாக முற்படுவோனுக்கு இராது. நிறுக்கப்படும்போது குறைவாக காணப்படுவோமோ என்று நம் மனச்சாட்சி, நிம்மதியை அளிக்காமல் நம்மை வாட்டிக்கொண்டிருக்குமாதலில், தவறாயிருக்கக்கூடிய நியாயத்தீர்ப்பின் பயங்கர முடிவையே நாம் சார்ந்திருக்க வேண்டிவரும், ஆனால் தேவனே நம்மை நீதிமானாக்கும்போது, தேவனுடன் நமக்குச் சமாதானத்தை அருளும் பரிசுத்த ஆவியானவர் அதற்குச் சான்றாயிருத்தலால், அது தீர்ந்துபோன காரியமென்பதை நாம் அறிந்து அமைதியுறுவோம், எல்லா புத்திக்கும் மேலான தேவ சாமாதானத்தை ஆத்துமா பெறுகையில், அச்சாந்தியின் ஆழம் எத்தகையதென்பதை எந்த நாவாலும் கூறவொண்ணாது. நண்பரே! அதைப்பெற்ற உடனே நாடுங்கள்.










