- கிருபையினாலும் விசுவாசத்தைக் கொண்டும்
‘கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபேசியர் 2:8)
என் வாசகர் சற்றே ஒரு புறமாய்த் திரும்பி, தேவ கிருபையான நமது இரட்சிப்பின் ஊற்றைப்பற்றிப் பயபக்தியுடன் சிந்திக்கக் கோருகிறேன். ‘கிருபையினால் இரட்சிக்கப்பட்டீர்கள்”. தேவன் கிருபையுள்ளவராயிருப்பதால்தான், பாவிகள் மன்னிக்கப்பட்டு, மனந்திரும்பப்பட்டு, மாசற்றோராக மாற்றப்பட்டு மீட்கப்படுகிறனர். அவர்களிலிருக்கும் எதனாலேயோ, அல்லது அவர்களுக்குள் எப்போதேனும் இருக்கக்கூடிய எதனாலேயோ அவர்கள் இரட்சிக்கப்படவில்லை. எல்லையற்ற அன்பு, நன்மை, பரிதாபம், அனுதாபம், இரக்கம், முதலியவை கூடிய தேவ கிருபையாலேயே இரட்சிப்பு உண்டாகிறது. அவ்வாறாயின், ஊற்றின் பிறப்பிடத்தைச் சற்றே நிதானியுங்கள். தேவனும், ஆட்டுக்குட்டியானவரும் அமர்ந்திருக்கும் சிங்காசனத்தினின்று புனிதமான ஜீவநதியின் நீர் பெருக்கெடுத்தோடுவதைக் காணுங்கள்!
தேவகிருபை எத்தகைய ஆழம் காணவியலாத ஆழி போலுள்ளது! அதன் அகலத்தை யாரால் அளவிடக்கூடும்? யார் அதன் ஆழத்தைக் கணிக்க வல்லார்? இதர தெய்வீகப் பண்புகள்போன்று இதுவும் முடிவற்றதாயுள்ளது. ‘தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்பதால் அவரில் அன்பு நிறைந்துள்ளது. ‘தேவன்” என்ற சொல்லே, ‘தேவையைப் பூர்த்திசெய்கிறவர்” என்பதன் சுருக்கமாகச் கொள்ளலாம். தேவன் என்னும் சாரத்தில் கணிக்கமுடியாத நன்மைகள் அன்பும் கலந்துள்ளன. ‘அவர் கிருபை என்றுமுள்ளது” என்பதாலேயே மாந்தர் அழிவுக்குள்ளாகாமல் இருக்கின்றார். ‘அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” என்பதால்தான் பாவிகள் அவரிடத்தில் கொணரப்பட்டு மன்னிக்கப்படுகின்றனர்.
மிக நன்றாக இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் இரட்சிப்பின் வாய்க்காலான விசுவாசத்தின் பேரில் உங்கள் சிந்தையை அதிகமாய் ஈடுபடவிட்டு, விசுவாசத்துக்கே நிலைக்களனும் ஊற்றுமான கிருபையை மறந்து விடும் பிழையைச் செய்துவிடுவீர்கள். விசுவாசமானது தேவகிருபை நம்மில் செய்யும் கிரியையாகும். பரிசுத்த ஆவியானவராலன்றி, எந்த மனிதனும் இயேசுவைக் கிறிஸ்து என்று அறிக்கை பண்ணமுடியாது. ‘என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்று இயேசு மொழிந்தார். எனவே, கிறிஸ்துவண்டை வருதலான விசுவாசமானது தெய்வீக ஈர்ப்பின் விளையாகும். இரட்சிப்புக்கு முதலும் முடிவுமான கிரியை செய்யும் காரணமாயிருப்புது கிருபையே. ஆக, விசுவாசமானது அத்தியாவசியமானதுதானென்றாலும், கிருபை இயக்கும் இயந்திரத்தின் ஒரு முக்கிய பாகமாகவே உள்ளது. நாம் ‘விசுவாசத்தைக்கொண்டு” இரட்சிக்கப்படினும், இரட்சிப்பு ‘கிருபையினாலே” என்ற வார்த்தைகளை, பிரதான தூதனுடைய எக்காளத்தோடு கூறுமாப்போல் அறிவியுங்கள். அருகதையற்றவர்களுக்கு எத்தகைய ஆனந்தம் தரும் செய்தி!
வாய்க்கால் அல்லது கால்வாய்க் குழாயின் நிலையை விசுவாசம் வகிக்கிறது. நீரூற்றும் ஓடையுமாயிருப்பது கிருபை. தாகத்தால் விடாய்த்திருக்கும் மனுக்குலத்தின் மக்களின் களைப்பைப் போக்கக் கருணைப் பிரவாகம் எடுத்து ஓடிவருவது விசுவாசமெனும் குழாயில்தான். குழாய் உடைந்து போனால் மிகப் பரிதாபமாயிருக்கும். நீரோட்டம் தங்குதடையின்றி இருக்கும்படி, குழாய் பூராவும் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும். அதே வண்ணமாக, விசுவாசமும் சத்தியமும் பழுதற்துமாயிருந்து நமக்குள் வருவதாயும் இருத்தல் அவசியம். அப்போதுதான் நம் ஆத்துமாக்களுக்கு உதவக்கூடிய கருணையின் கால்வாயாக அது விளங்கும்.
விசுவாசம், ஊற்று ஆரம்பிக்கும் இடமல்லவென்பதையும், அது வெறும் வாய்க்கால் அல்லது குழாய்தானென்பதையும், தேவகிருபையில் அடங்கியிருக்கும் சகல ஆசீர்வதாமும் தோன்றும் தெய்வீக இருப்பிடத்துக்கும் மேலானதென்று அதை உயர்த்தி வைக்குமளவுக்கு அதைப் பாவிக்கலாகாதென்பதையும் உங்களுக்கு மறுபடியும் நினைவூட்டுகிறேன். உங்கள் விசுவாசத்தினின்று ஒருபோதும் ஒரு கிறிஸ்துவை உருவாக்காதீர்கள். அதுமட்டுமல்ல, உங்கள் மீட்புக்கு அதுவே தனித்த தோற்றுவாயாக உள்ளதென்றும் எண்ணிவிடாதீர்கள். இயேசுவை நோக்கியிருப்பதால்தான் நாம் நம் ஜீவனைக் கண்டடைகிறோமேயன்றி, நம் சுய விசுவாசத்தை நோக்கியிருப்பதாலன்று. விசுவாசத்தால் எல்லாக் காரியங்களும் நமக்குச் சாத்தியமாகும். எனினும், அந்த வல்லமை விசுவாசத்தில் இல்லாமல், விசுவாசம் சார்ந்திருக்கும் தேவனில் இருக்கிறது. கிருபை இரயிலை இயக்கும் இயந்திரமாய் இருக்கிறதென்றால் ஆத்துமா எனும் வண்டியை அந்தப் பெரும் சக்தியுடன் இணைக்கும் சங்கிலியாக விசுவாசம் விளங்குகிறது. விசுவாசத்தின் நீதி என்றால், அது விசுவாசத்தின் உயர்ந்த தன்மையைக் குறிப்பிடுகிறனெ;று பொருளல்ல. விசுவாசம் பற்றிக்கொண்டு தனதாக்கிக் கொள்ளும் இயேசு கிறிஸ்துவின் நீதியையே அதுகுறிக்கிறது. நம் ஆத்துமாவில் தோன்றும் சமாதானம் நாம் நம் சுய விசுவாசத்தைச் சிந்தித்துக் கொண்டிருத்தலால் ஏற்படுவதில்லை. நமக்கு சமாதானமாயிருப்பவரிடமிருந்துதான் அது வருகிறது. விசுவாசமானது அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொடுகிறபோது, அவரிலிருந்து பரிசுத்தத் தன்மை வெளிப்போந்து, நம் ஆத்துமாவில் பிரவேசிக்கிறது.
ஆகையால், அருமையான நண்பரே, உங்கள் விசுவாசத்தின் பலவீனம் உங்களை அழித்துவிடாது ஒரு நடுங்கும் கரம் ஒரு பொன்னான பரிசைப் பெறக்கூடும். ஒரு கடுகு விளையளவு விசுவாசம் நமக்கிருக்குமெனினும், தேவனுடைய இரட்சிப்பு நமக்குக் கிட்டு விடும். நம் விசுவாசத்தில் அல்ல, தேவ கிருபையிலேயே வல்லமை அடங்கியுள்ளது. பெரிய செய்திகளையும்கூட மென்மையான மின்சாரக் கம்பிகளில் அனுப்புவது சாத்தியமாவதுபோல, சமாதானத்தைத்தரும் பரிசுத்த ஆவியானவரின் அறிக்கையும், தன் எடை நூலிழைப்போன்ற விசுவாசத்தில் வாயிலாக உள்ளத்தைத் தொட்டுவிடமுடியும். யாரை ஏறிட்டு நோக்குகிறீர்களோ, அவரையே அதிகமாக, நீங்கள் காணும் பார்வையைவிட அதிகமாக, தியானியுங்கள். நீங்கள் பார்க்கும் அந்தப் பார்வையையே நீங்கள் காணாதிருந்து, இயேசுவையும் அவரில் வெளிப்படுத்தப்பட்ட தேவ கிருபையுமே நீங்கள் காணவேண்டும்.










