- என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
பாவிகளின் பெரும் நம்பிக்கையான சிலுவையிலறையுண்ட கிறிஸ்துவைக் குறித்து இந்நூலில் நான் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். ஆனால் நமது ஆண்டவர் மரித்தோரிலிருந்து எழுந்து என்றென்றும் ஜீவிக்கிறாரென்பதை நான் ஞானமாய் நினைவுகூர வேண்டும்.
மரித்திருக்கும் இயேசுவில் நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படவில்லை. அவர் நம் பாவங்களுக்காக ஜீவனை அளித்தபோதிலும், நாம் நீதிமான்களாக்கப்பட உயிர்த்தெழுந்துள்ளார். உயிரோடிருக்கும் உங்கள் சக தோழரிடம் செல்வதுபோல் நீங்கள் உடனே இயேசுவிடம் போகலாம். அவர் வெறும் நினைவாக இல்லாமல், உங்கள் விண்ணப்பங்களைக் கேட்டு விடையளிக்கும்படி, என்றென்றும் நிலைத்திருக்கிறார். தாம் எந்தப் பணிக்காக தம் ஜீவனை ஈந்தாரோ, அதைத் தொடர்ந்து ஆற்றும் பொருட்டு அவர் ஜீவிக்கிறார். தேவனுடைய வலது பாரிசத்தில் இருந்தபடி பாவிகளுக்காக அவர் பரிந்து பேசுகிறவராயுள்ளபடியால், அவர்மூலம் தேவனிடம் வருகிறவர்களை இக்காரணத்தினிமித்தம் முற்றிலும் இரட்சிக்க வல்லவராயிருக்கிறார். உயிரோடிருக்கும் இந்த இரட்சகரிடம் இப்போதே வந்து உதவிபெறுங்கள்.
உயிரோடிருக்கும் இந்த இயேசுவானவர் மகிமையும் வல்லமையும் கூடிய மேன்மையான இடத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ‘சத்துருக்களின் முன் தாழ்வுற்ற மனிதன்” கலங்குவது போலவோ அல்லது தச்சனுடைய குமாரனைப் போலவோ இப்போது அவர் இல்லை. ஆனால் எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்த்தப்பட்டுள்ளார். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் பிதவானவர் அவருக்கு வழங்கியுள்ளபடியால் நம் கிருபையின் கிரியையை நிறைவேற்ற அவர் இந்த மேலான வரத்தைப் பிரயோகிக்கிறார். அவரைக் குறித்துப் பேதுருவும், பிற அப்போஸ்தலர்களும் பிரதான ஆசாரியனுக்கு முன்பும், ஆலோசனைச் சங்கத்தின் முன்னிலையிலும் எவ்விதம் அறிக்கை பண்ணினரென்பதைக் கவனியுங்கள்.
‘ நீங்கள் மரத்திலே தூக்கிக்கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி, இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.” அப்.5:30-31. பரத்துக்கேறியுள்ள ஆண்டவரைச் சூழ்ந்திருக்கும் மகிமையானது, ஒவ்வொரு விசுவாசியின் நெஞ்சிலும் நம்பிக்கையை நிரப்பவேண்டும். இயேசுவானவர் சாதாரணமானவர் அல்லர். அவர் ஓர் இரட்சகரும் பெரியவருமாயிருக்கிறார். அரியணையில் அமர்த்தப்பட்டும், முடிசூட்டப்பட்டும் இருக்கிற மனுக்குலத்தின் மீட்பரவர். ஜீவனா, மரணமா எனும் மேலான உரிமை அவர் வசமே உள்ளது. மத்தியஸ்தம் புரியும் குமாரனின் ஆளுகையில் பிதாவனவர் எல்லா மனிதரையும் விட்டு வைத்திருப்பதால், தமக்குச் சித்தமானவர்களை ஆண்டவர் உயிர்ப்பிக்க இயலும். அவர் திறப்பதை எந்த மனிதனாலும் அடைக்கமுடியாது. பாவம், ஆக்கினை என்னும் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஆத்துமா, அவர் வார்த்தையால் ஒரே வினாடியில் விடுதலை பெறும். தம் வெள்ளிச் செங்கோலை அவர் நீட்டுகையில், அதைத் தொடுவோர் யாவரும் ஜீவிப்பர்.
பாவம் நிலைத்திருப்பதுபோல், மாம்சத்தில் உயிர் இருப்பதுபோல், சாத்தான் சாகாதிருப்பதுபோல், இயேசுவானவரும் உயிரோடிருத்தல் உண்மையே. நம்மை இரட்சிப்பதற்கு அவற்றைவிட மேலான சத்துவத்தை இயேசு கிறிஸ்து பெற்றுள்ளாரென்பதும் நம் பாக்கியமே.
அவர் உயர்த்தப்பட்டிருப்பதும் அவர் வல்லமையோடிருப்பதும் நமக்காகவேதான். ‘அவர் உயர்த்தப்படுவதற்காகவும், வழங்குவதற்காகவும் உயர்த்தப்பட்டுள்ளார்.” அவர் ஆளுகைக்குட்படும் அனைவரின் இரட்சிப்புக்கும் தேவையானவற்றை அவர் வழங்குமாறு, அதிபதியாகவும், இரட்சகராகவும் உயர்த்தப்பட்டார். ஒரு பாவியின் இரட்சிப்புக்காக இயேசு எதையுமே பயன்படுத்தாமல் வைத்திருப்பதில்லை. அதேவண்ணம் தமது கிருபையின் பெருக்கத்திலிருந்து அவர் வெளிப்படுத்தாமல் மறைந்திருப்பது ஏதுமில்லை. ஒன்றில்லாமல் பிறிதொன்றை ஏற்றிருப்பதில்லை எனுமாப்போல், இராஜத்துவத்துடன் கூட இரட்சகர் தம்மையையும் அவர் இணைத்திருக்கிறார். அவரின் மகிமைக்கு மகுடமும் மலருமாயிருப்பது மனுக்குலத்துக்கு அவர் அருளும் ஆசீர்வாதங்களே என்ற வகையில் அவர் தாம் உயர்த்தப்பட்டிருப்பதன் நோக்கத்தை இவ்வாறு மதிப்பிடுகிறார். மீட்பை வேண்டி, கிறிஸ்துவை நோக்கிச் செல்லும் பாவிகளின் நம்பிக்கைகளைத் தூண்டி, இதைக் காட்டிலும் வேறு சிறந்த திட்டம் ஏதேனும் இருக்ககூடுமோ?
இயேசு மகத்தான தாழ்மையை மேற்கொண்டிருந்தபடியால் அவர் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்பு இருந்தது. அந்த தாழ்மையின் வழியாக, அவர் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற அனைத்தையும் சகித்தபடியால், மகிமையில் உயர்த்தப்படும் பரிசு அவருக்குக் கிட்டிற்று. மக்களின் சார்பில் அந்த உயர்வை அவர் பயன்படுத்துகிறார். என் வாசகரே! உமக்கு ஒத்தாசை வரவிருக்கும் இந்த மகிமையின் பர்வதங்களுக்கு நேராக உம் கண்களை ஏறெடுப்பீராக. அதிபதியும் இரட்சகருமானவரின் மேலான மகிமைகளைக்குறித்து தியானிப்பீராக. உலகில் அரியாசனத்தின்மீது ஒருவர் வீற்றிருக்கிறாரென்பது மனிதர்களுக்கு இப்போது அதிக நம்பிக்கையூட்டுவதாயில்லை? எல்லாருக்கும் ஆண்டவராயிருப்பவர் பாவிகளுக்கு இரட்சகராயுள்ளாரென்பது மேன்மை பொருந்தியதாயில்லையா? நீதி தலத்தில் நமக்கு ஒரு நேசர் உண்டு. தங்கள் காரியங்களை அவுர் கரங்களில் ஒப்படைப்போருக்கு, அவர் தம் செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்துவார்.
நண்பரே! வாரும்! முன்பு ஆணிகளால் கடாவப்பட்ட கரங்கள், இப்போது இராஜரீக அதிகாரமும் கனமும் கூடிய முத்திரை மோதிரங்களால் மகிமைப்பட்டிருப்பதால், அவற்றில் உங்கள் காரியத்தையும் வாழ்க்கையையும் ஒப்புவியுங்கள். பெருமை மிகுந்த இந்த மத்தியஸ்தரிடம் விடப்பட்ட வழக்கு எதுவும் தோல்வியுற்றதேயில்லை.









