18. நிலைநிறுத்தல்
எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் உண்டென்று பவுல் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த பாதுகாப்பை நீங்கள் கவனிக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். ‘நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவு பரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்”. எல்லாவற்றிற்கும் மேலாக விருப்பப்படத்தக்க உறுதி இத்தகையதுதான். மக்கள் நேர்மையானவர்களென்று அந்த உறுதி ஏற்றுக்கொள்வதுடன், அவர்களை நேர்மையிலேயே நிலைநிறுத்த விரும்புகிறது. பாவம், பிழை இவற்றின் வழிகளில் ஒரு மனிதனை உறுதிப்படுத்துதல் பயங்கரமானது. நிலைநிறுத்தப்பட்ட குடிகாரன், நிலை நிறுத்தப்பட்ட திருடன், நிலை நிறுத்தப்பட்ட பொய்யன், அவபக்கதியிலும், அவ நம்பிக்கையிலும் அசைக்கமாட்டாதபடி வேரூன்றப்பட்டவன். இவர்களையெல்லாம் கருத்தில் கொண்டால் கலக்கம் ஏற்படவே செய்யும். ஏற்கெனவே யாருக்குத் தேவ கிருபை வெளிப்படுத்தியாயிற்றோ, அவர்கள் மட்டுமே தெய்வீக திடப்படுத்துதலை அனுபவிக்க முடியும். அது பரிசுத்த ஆவியானவரின் செயல். விசுவாசத்தை அருளுகிறவர் அதை வலுப்பெறச் செய்து திடப்படுத்துகிறார். நம்மில் அன்பைத் தூண்டிவிடுகிறவர் அதன் சவாலையைப் பாதுகாத்துக் கொளுந்துவிட்டெரியப் பண்ணுகிறார். தமது முதல் போதிப்பில் அவர் நமக்கு வெளிப்படுத்துவதை, பின்னும் அவர் கற்பித்தலின் மூலம் அதிகத் தெளிவுள்ளதாயும் நிச்சயமுள்ளதாயும் இருக்குமாறு நல்ல ஆவியானவர் கிரியை புரிகிறார். பரிசுத்த செயல்கள் வழக்கங்களான மாறும்வரை உறுதிப்படுத்தப்படுகின்றன. பரிசுத்த உணர்வுகள், நிலைத்திருக்கும் நிபந்தனைகளாகுமட்டும் திடப்படுத்தப்படுகின்றன. நமது நம்பிக்கைகளையும், தீர்மானங்களையும் நம் அனுபவமும் பயிற்சியும் ஸ்திரப்படுத்துகின்றன. நமது இன்ப துன்பங்கள், வெற்றி தோல்விகள் யாவும், மென்மையான மழையும் முரட்டுத்தனமான காற்றும் ஓரு மரம் வேரூன்றிக்கொள்ள உதவுவதுபோல், அதே முடிவுக்குத் தூய்மையாக்கப்படுகின்றன. போதனையைப் பெறும் சிந்தையானது, தன் அறிவு வளருகையில், நல் வழியில் தொடர்ந்து போவதற்குரிய காரணங்களை அறிந்துகொள்ளுகிறது. ஆறுதல் பெறும் நெஞ்சு, நிம்மதி தரும் சத்தியத்தை மிக நெருக்கமாய்ப் பற்றிக்கொள்கிறது.
இது வெறும் இயல்பான வளர்ச்சியாயிராமல், மனந்திரும்புதலைப்போல் ஆவியானவரின் தெளிவான செயலாயிருக்கிறது. நித்திய ஜீவனுக்காகத் தம்மைச் சார்ந்திருப்போருக்கு, ஆண்டவர் நிச்சயமாகவே அதை தந்தருளுவார். நம்மில் அவர் கிரியை செய்வதன்மூலம் நாம் தண்ணீரைப்போலத் தளும்பிக் கொண்டிராதபடி அவர் நம்மைக் காத்து, நாம் வேரூன்றி ஸ்திரமாயிருக்கும்படிச் செய்வார். நம்மை இயேசு கிறிஸ்துவில் கட்டுவதும், நாம் அவரில் நிலைத்திருக்கும்படி செய்வதும் ஆண்டவர் நம்மை இரட்சிக்கும் முறையின் ஒரு பாகமாகும். பிரிய வாசகரே, நீங்கள் இதற்காக அனுதினமும் எதிர்பாருங்கள். நீங்கள் ஏமாற்ற முறமாட்டீர்கள். நீங்கள் நம்பியிருப்பவர் நீங்கள் நீர்க்கால்களின் ஓரத்தில் நடப்பட்ட மரம்போல இருக்கச்செய்து, உங்கள் இலை உலராதபடிக்கும் உங்களைக் காப்பார்.
நிலைநிறுத்தப்பட்ட கிறிஸ்தவனால் சபைக்கு எத்தகைய பலம்! அவல நிலையிலிருப்போருக்கு அவர் ஆறுதலாயும் பெலவீனருக்கு ஆதரவாளனாயுமிருக்கிறார். நீங்களும் அதே வண்ணமிருக்க விருப்பமில்லையா? நமது தேவனுடைய வீட்டின் தூண்களாக நிலைநிறுத்தப்பெற்ற விசுவாசிகள் உள்ளனர். இவர்கள் கொள்கையெனும் எந்தக் காற்றாலும் அடித்துக்கொண்டுபோகப்படார். திடீரென எழும் சோதனையாலும் தோல்வியுறார். அவர்கள் மற்றவர்களுக்குப் பெருந்துணையாயிருப்புதோடுகூட, சபையில் துன்பம் ஏறப்படுகையில் நங்கூரமாயும் செய்படுகிறார்கள். பரிசுத்த வாழ்வை ஆரம்பித்திருக்கும் நீங்கள் அவர்களைப்போல் ஆகமுடியுமாவென்று எதிர் நோக்கவும் தயங்குவீர்கள். அவர்களில் செயலாற்றியது போலவே நல்ல தேவன் உங்களிலும் ஆற்றுவார். எதோ ஒரு நாளில், இப்போது கிறிஸ்துவில் பாலகனாயிருக்கும் நீங்கள் சபையில் ஒரு தந்தையாயிருப்பீர்கள். இப்பெரும் காரியத்துக்காக நீங்கள் எதிர்பார்க்கையி;ல், கூலிக்கு வேண்டும் கிரயமாகவோ, அல்லது உங்கள் சொந்த சக்தியின் பலனாகவோ அதை வேண்டாமல், கிருபையின் வரமாக அதை எதிர்பாருங்கள்.
பவுல் அப்போஸ்தலன் இந்த மக்கள் முடிவு பரியந்தம் ஸ்திரப்படுத்தப்படுவார்களென்று கூறுகிறார். தேவ கிருபை அவர்களை அவர்கள் ஜீவிய காலம் வரைக்குமோ அல்லது ஆண்டவரான இயேசு வரும் நாள் மட்டுமோ, அவர்களைக் காக்குமென எதிர்காண்கின்றார். உண்மையில், எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலுமுள்ள தேவனுடைய திருச்சபை முழுவதுமே அந்த முடிவு நாள் மட்டும், அதாவது ஆண்டவரான இயேசு கிறிஸ்துவின் நாள் வரையும் பாதுகாக்கப்படும் என்று நம்பியிருந்தான். அவரில் ஸ்திரப்படுத்தப்படுவார்கள். ‘நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” என்று அவர் கூறவில்லையா? நான் என் ஆடுகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதில்லை. என்று அவர் கூறியுள்ளார். உங்களில் நல்ல பணியை ஆரம்பித்திருக்கிறவர், கிறிஸ்துவின் நாள் மட்டும் அதை நிலைநிறுத்துவார். ஆத்துமாவில் ஆற்றப்படும் கிருபையின் கிரியை, மேலெழுந்தவாரியாய்ச் செய்யப்படும் சீர்திருத்தமல்ல. புதைக்கப்பட்ட ஜீவனிலிருந்து எழும் மறுபிறவியானது, உயர்பெற்றிருப்பதும் பழுதற்றதுமான வித்தினின்று தோன்றுவதால், அது என்றென்றும் ஜீவித்து நிலைத்திருக்கும். விசுவாசிகளுக்கு தேவன் அருளும் வாக்குத்தத்தங்களும் தோன்றி மறைகிறவையாயிராமல், இவை நிறைவேறுகிறதற்கு விசுவாசியானவன் தான் முடிவில்லா மேன்மையை அடையுமட்டும் தன் வழியில் பற்றிச் செல்ல வேண்டிய தேவையைக் கொண்டதாயுள்ளன. இரட்சிப்புக்கு நாம் நமது விசுவாசத்தின் மூலம் தேவனுடைய வல்லமையால் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறோம். நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான். நமது சுய தகுதி அல்லது பெலனின் விளைவாக அல்ல, இலவசமும் தகுதியற்றதுமான ஈவாகிய தயவின் காரணமாகத்தான் விசுவாசிப்பவர்கள் இயேசு கிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களாயுள்ளார்கள். தமது மந்தையிலிருக்கும் ஆடுகளில் இயேசு ஒன்றையும் இழக்கமாட்டார். அவர் சரீரத்தின் ஓர் அங்கமாகிலும் அழியாது. அவர் தம் அணிகளைச் செய்யும் நாளில், அவர் பொக்கிஷத்தினின்று ஒரு மணியும் மறைந்திராது. அருமை வாசகரே, விசுவாசத்தினால் பெறப்படும் இரட்சிப்பு மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு உரியதல்ல. ஏனெனில் நமது கர்த்தராகிய இயேசு நமக்காக நித்திய மீட்பை உண்டுபண்ணினார் என்று இருப்பதால் நித்தியமாயிருக்கும் எதுவுமு; ஒரு முடிவுக்கு வரமுடியாது.
மேலும் பவுல் கொரிந்து சபையின் பரிசுத்தாவான்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவு பரியந்தம் ஸ்திரப்படுவார்களென்று தான் நம்புவதாய் அறிவிக்கிறார். நாம் திடப்படுத்தப்பட்டிருத்தலின் அருமையான அம்சம் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும் இந்தத் தன்மைதான். பத்திரமாய்க் காக்கப்பட்டிருப்பதைவிட, பரிசுத்தத்தில் நிலைநிறுத்தப்பட்டிருப்பது சிறந்தது. மார்க்க சார்புள்ள மக்கள் ஓர் அவமானத்திலிருந்து பிறிதொரு அவமானத்துக்கு உட்படுவதைக் காண்பது அச்சம் விளைவிப்பதாயிருக்கும். தாங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படிச் செய்ய ஆண்டவரின் சத்துவத்தால் கூடுமென்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை. சில சிறந்த கிறிஸ்தவர்களின் ஜீவியங்கள் இடறல்கள் நிறைந்தவையாய் காணப்படுகின்றன. அவர்கள் கீழே தரைமட்டமாய் விழாவிடினும் கால்களைக் கொண்டு உறுதியாய் நிற்பது சிரமமே. விசுவாசி ஒருவனுக்கு இது ஏற்றதன்று. அவன் தேவனோடு நடக்க அழைப்பைப் பெற்றிருப்பதால், விசுவாசத்தின் வாயிலாக, பரிசுத்த நிலையில் அவர் விடாமல் தொடர்ந்து செல்லுதல் சாத்தியமே. நரகத்தினின்று மட்டுமல்ல, நாம் இடறிவிழாமலிருக்கவும் கர்த்தர் நம்மைக்காக்க வல்லவராயுள்ளார். நாம் சோதனைக்கு அடிப்பணியவேண்டுவதில்லை. பாவம் உங்களை மேற்கொள் மாட்டாது என்று எழுதியிருக்கிறதல்லவா? தம் பரிசுத்தவான்களின் பாதங்களை ஆண்டவர் காக்கக்கூடியவர். எனவே, அவர் அவ்வாறு செய்யும்படி நாம் அவரைச் சார்ந்திருந்தபின் அதை அவர் நிறைவேற்றுவார். அவர் அருளால் நாம் நம் உடைகளை உலகத்தால் கறைப்படாதபடிக்குக் காத்துக்கொள்ள முடியுமென்பதால், அவற்றை நாம் தீட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையாகையால், நாம் திண்ணமாக இதைச் செய்வோம்.
நாம் காக்கப்படும்படி நாம் நாடவேண்டியதை, இந்த விசுவாசிகளுக்காக அப்போஸ்தலன் தீர்க்கதரிசனமாக உரைத்ததில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி என்கிறார். திருத்திய மொழிப்பெயர்ப்பில், நிந்திக்க முடியாத அல்லது நிந்தனைக்குள்ளாகாதபடி என்ற பொருள் தரும் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த மகத்தான இறுதி நாளில் நாம் எவ்விதக் குற்றத்துக்கும் இலக்காகாமல் நிற்கவும் நாம் கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்பதை யாருமே துணிந்து எதிர்க்கமாட்டாதபடி இருக்கவும் தேவன் அருள் புரிவாராக. திரளான தேவ பக்தியுள்ள ஆண்களும், பெண்களும் ஒளிவு மறைவில்லாத சீரான வாழ்க்கையை வெளிப்படுத்தியிருப்பதால் யாருமே அவர்களுடைய நேர்மையை மறுக்க முடியாது. கர்த்தருடைய சந்நிதியில் சாத்தான் வந்து நின்றபோது, கர்த்தர் அவனிடம் ‘உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான என் தாசன்மேல் நீ கவனம் வைத்தாயோ?” என்று யோபைக் குறித்துக் கூறியதுபோல், அநேக விசுவாசிகளைக் குறித்தும் வினவுவார். என் வாசகர் இந்த இலக்கையே குறியாகக் கொண்டு இதையே தேவனிடமிருந்து நாடவேண்டும். ஜீவனோடிருக்கும் தேவன் முன் நம் நேர்மையைக் காப்பாற்றிக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவர் செல்லுமிடமெல்லாம் அவரை விடாது தொடர்ந்து செல்வதே பரிசுத்தவான்கள் கண்ட வெற்றியாகும். நாம் கோணலான வழிகளில் ஒருபோதும் திரும்பாமல் எதிரி நம்மை நிந்திக்க இடங்கொடாமல், இருப்போமாக. பொல்லாங்கன் அவனைத் தொடான் என்று உண்மை விசுவாசியைக் குறித்தும் அவ்வாறே எழுதப்படட்டும்.
தெய்வீக வாழ்வில் இப்போதுதான் அடியெடுத்து வைக்கும் நண்பரே! தவறு காணமுடியாத பண்பை ஆண்டவர் உங்களுக்கு அருளமுடியும். கடந்த வாழ்க்கையில் நீங்கள் பாவத்தில் ஆழ மூழ்கியிருந்திருப்பினும், முன்னைய வழக்கங்களினின்று ஆண்டவர் உங்களை முற்றிலும் விடுவித்து நல்லொழுக்கத்தின் முன்மாதிரியாக உங்களை மாற்றவல்லுவராயுள்ளார். நீங்கள் நீதிமான்களாக மட்டுமல்ல, சகல தீய வழிகளையும் வெறுத்து, பரிசுத்தமான காரியங்களையே பற்றிச் செல்லும்படி அவர் வழி செய்வார். அதில் சந்தேகமுறாதீர்கள்.
சகலத்தின் நியாயாதிபதிக்கும் முன்பாக வானமும் பூமியும் மறைந்துவிடுகையில் மேற்கொள்ளமுடியாத அத்தீரத்தை நாம் அனுபவிப்பது எப்பேர்ப்பட்ட இன்பமாயிருக்கும்! தேவகிருபைக்கும், சகல பாவங்களையும் எதிர்த்து விடாமல் போரிடும் தூய்மையான சத்துவத்துக்கும் கிறிஸ்து இயேசுவையே நோக்கியிருப்போருக்கு இந்த பேரின்பம் உரியதாகும்.










