(1) ஆணவம்
மனிதனைக் கொல்லக்கூடிய கொடிய பாவங்களை ஏழு வகைப்படுத்தலாம். அவற்றுள் தலையாய முதற்கொடிய பாவம் ஆணவமாகும். அழிவுக்கு முன்னானது அகந்தை. விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை என்று நீதிமொழிகள் 16:18ல் கூறியுள்ளவாறு, எல்லா அழிவுக்கும் முதற்காரணமாக இயற்கையாய் வருவது ஆணவமே. அநேகமாக மற்ற எல்லாப் பாவங்களுக்கும் அடிப்படைக் காரணமாக அகத்திலும் ஒழுக்கத்திலும் எழும் முதற்பாவம் ஆணவம். தன்னலத்தின் வெவ்வேறு வடிவங்களே வெவ்வேறு பாவங்களாகும். நான் என்ற ஆணவமே எல்லாப் பாவங்களுக்கும் ஆதி வித்தாகும். மற்றவர்களைவிட தான் தான் பெரியவன் என்ற எண்ணமும், தகுதிக்கு மிஞ்சி தன்னையே தகாத முறையில் தகாதவாறு வீணாகப் பெருமைப்படுத்திக் கொள்ளுதலும் ஆணவம் முளைப்பதற்கு மூலவித்துக்களாகும். மனமேட்டிமையுள்ள வனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன். கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான் என்று பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் 16:5ல் கூறியுள்ளது. மீண்டும் நீதிமொழிகள் 29:23ல் இயம்புவதைக் கேளுங்கள். மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும். மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
ஆண்டவர் அருவருக்கும் ஆணவம் சுயமரியாதை அன்று, அல்லது நியாயமான சுயமதிப்பு உணர்ச்சியுமன்று. உண்மையான தகுதிக்கு மிஞ்சி, தகுதியற்ற முறையில் தன்னையே அகந்தையோடு பெரியவன் என்று எண்ணிக்கொள்ளுதல் ஆணவமாகும். இந்த ஆணவம் தன்னையே தகுதியற்ற தன்மையில் பெருமைப்படுத்திக்கொண்டு மற்ற மனிதரையும் கடவுளையும் இழிவுபடுத்தி வெறுத்து ஒதுக்கித்தள்ளிவிடுகிறது. எல்லாம் வல்ல இறைவனைவிட தன்னையே பெரிதாகக் கருதும் இந்தத் தற்பெருமையே கடவுள் அருவருக்கிறார். பிற மனிதரை வீண் கர்வத்தோடு புறக்கணித்துவைக்கும் அகந்தையை ஆண்டவர் வெறுக்கிறார். … மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன் என்று ஆண்டவர் சங்கீதம் 101:5ல் கூறியுள்ளார். ஆணவத்தை ஆண்டவரால் சகிக்க முடியாது. அவர் அதனை அருவருக்கிறார்.
ஆணவம் அநேக வடிவங்களில் தலைகாட்டும். ஆனால் அத்தனையும் அகந்தையான இருதயத்தினின்று எழும்புவனவாகும். சிலர் மேட்டிமையான பார்வையில் ஆணவம் கொள்ளுகிறார்கள். சிலர் தங்கள் குலத்தில் ஆணவம் கொள்ளுகிறார்கள். சிலர் தங்கள் அலுவலில் ஆணவம் கொள்ளுகிறார்கள். வேறுவகையாகக் கூறுமிடத்து, பக்திப்பெருமை, அறிவுப்பெருமை, செல்வப்பெருமை, சமூகப்பெருமை என்று பெருமையைப் பலவகைப்படுத்தலாம். பெருமையுள் மாபெரும் கொடிய பெருமை பக்திப்பெருமையாகும். இந்த ஆவிக்குரிய பெருமைதான் லூசிபர் என்னும் தேவதூதனை அதமாக்கிக் கொடும் பேயாக்கிவிட்டது. இந்த ஆவிக்குரிய ஆணவந்தான் பாவத்தின் ஆதிமூலவித்தாகும். இந்த ஆவிக்குரிய அகந்தையிலிருந்துதான் ஆதியில் பாவம் ஆரம்பமானது.
ஏசாயா 14:12-15 செப்புவதைக் கேளுங்கள். அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே ! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
நான் வானத்துக்கு ஏறுவேன். தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன். வடபுறங்களிலுள்ள ஆராதனைக்கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன். உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
இப் பகுதியில் லூசிபர் தன்னை உன்னதமான கடவுளுக்கும் மேலாக உயர்த்தி நான், நான் என்று ஆணவத்தோடு ஐந்து தடவை நான் ஏறுவேன், நான் உயர்த்துவேன், நான் வீற்றிருப்பேன், நான் உன்னதங்களில் ஏறுவேன், நான் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று வீண் கர்வத்தோடு அகந்தை கொப்பளிக்க கூறியுள்ளதைக் கூர்ந்து கவனியுங்கள். லூசிபரின் இதயத்தில் எழுந்த நான் என்ற ஆணவமே இம்முழு உலகிலும் செய்யப்பட்ட முதல் பாவமாகும். லூசிபரைப்போல் நாமும் ஆண்டவர் எனக்கு வேண்டாம் என்று அவரை ஒதுக்கித் தள்ளி விட்டு, நாமே நமக்கு ஆண்டவராகும்பொழுது அந்த ஆணவப்பேய் நம்மையும் பிடித்துக் கொள்ளுகிறது.
ஆவிக்குரிய ஆணவம் கொண்டவன் ஆண்டவரது அருளையே நம்பிப் பற்றிக் கொள்ளாது, தன்னுடைய சுயநீதியையே நம்பி, அதிலேயே வீண் திருப்திகொண்டு, அழிந்துபோகிறான். கிறிஸ்துவின் கிருபையே நம்பிப் பிழைக்காதவர்கள் கடவுளுடைய நியாயத்தீர்ப்புக்குட்படுவார்கள். தற்பெருமை கொண்ட மமதையாளர்கள் பழைய பரிசேயனைப்போல் பிறரைப் பழிக்கிறார்கள். தங்களையோ புகழ்கிறார்கள். தங்களை நீதிமான்களென்று தவறாக கருதுகிறார்கள். மற்றவர்களை அற்பமாக எண்ணுகிறார்கள். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் என்று இயம்பியதைப்போல் இறுமாப்புக்கொள்கிறார்கள். தாங்கள் சுயநிறைவு கொண்டவர்கள் என்றும், தங்களுக்கு கடவுளும் நிகரில்லை, பிறமனிதரும் நிகரில்லை என்று அகந்தை கொள்ளுகிறார்கள், கடவுள் தங்களுக்குத் தேவை இல்லையென்று சுயதிருப்தி கொள்கிறார்கள். இத்தகைய சுயநீதிச் செருக்கு கர்த்தருக்கு அருவருப்புஆபாச அழுக்கு கந்தை அணிந்தவன் அகில உலகிலுள்ள அத்தனை பேரையும்விட தானே அதிக அலங்காரமான தூயஆடை அணிந்தவன் என்று வீண் மனப்பால் குடித்துக்கொண்டிருப்பதுபோல், சுயநீதி மமதையாளர்கள் சுயதிருப்தி என்னும் வீண் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். இப் பரிசேய பரம்பரையாளருக்குக் கடவுள் கடுமையான எச்சரிப்பு விடுத்துள்ளார். …. தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது (யாக்.4:6).
கொசு விழாமல் வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். நியாயப்பிரமாணத்தை எழுத்துத் தவறாமல் கைக்கொள்ளவேண்டும் என்று பறை சாற்றுகிறார்கள். ஆனால் நியாயப்பிரமாணத்தின் ஆவிக்குரிய கருத்தையோ மறந்துவிட்டார்கள். தாங்கள் தாம் பரிசுத்தவான்களென்றும், மற்றவர்களெல்லாரும் அசுத்தர்களென்றும் பிறரை வெறுத்துத்தள்ளுகிற ஆன்ம ஆணவ நெஞ்சத்தினர் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். முற்றிலும் புனிதமான திருச்சபை என்று இவ்வுலகில் இருக்கமுடியாது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். கோதுமையும் களையும் ஒன்றாக வளரும் என்றும், இவ்வுலகத்தின் முடிவுகாலமட்டும் இவ்விரண்டையும் வேறுபடுத்திப் பிரிக்கமுடியாதென்றும், இயேசு கிறிஸ்து இரண்டாந்தடவையாக இவ்வுலகுக்கு மீண்டும் வரும்போது அவர்தாமே களைகளைக் கோதுமையினின்று பிரித்தெடுத்து, அக் களைகளை அவியாத அக்கினியில் போடுவார் என்னும் உண்மையைப் பலர் மறந்துவிட்டார்கள். அநேகப் பரிசேயர்கள் தற்காலத்தில் எழும்பி, தாங்களே தங்களால் செய்யமுடியாத, களையைக் கோதுமையினின்று பிரித்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வேலையை இப்பொழுது மனிதன் செய்யமுடியாது. கிறிஸ்துதாமே தமது இரண்டாம் வருகையின்போது செய்யப்போகும் வேலை இது. அதுவரை திருச்சபையில் கோதுமையோடு களைகளும் இருந்தால் நாம் ஆச்சரியப்படுவதற்கொன்றும் இல்லை. அநேகர் தங்கள் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், தங்கள் சகோதரர் கண்ணிலிருக்கிற துரும்பை பார்த்து, அதனை அகற்றுவதற்கு முயலுகிறார்கள். இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டுமா என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே, முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு. பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய். அநேகர் பிறரைப் பழித்துக் கூறுவதிலும் இழித்துரைப்பதிலுமேயே தங்கள் நேரத்தைப் போக்குகிறார்கள். அகந்தையிலெல்லாம் அதிகக் கொடிய அகந்தை இதுவாகுமன்றோ!
ஆணவத்தின் மற்றொரு வடிவம் அறிவுப் பெருமையாகும். அறிவுப் பெருமையைக் குறித்து பரிசுத்தவேதாகமம் 1.கொரிந்தியர் 8:1-2ல் பகர்ந்துள்ளதைக் கேளுங்கள். … அறிவு இறுமாப்பை உண்டாக்கும். அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும். ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறிய வேண்டிய பிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை. கல்லாதாரையும் அறிவீனரையும், தாழ்த்தப்பட்டோரையும் அதிக இழிவாக இத்தகைய அறிவு அகந்தையாளர்கள் கருதுகிறார்கள். நமது மனோசக்தியளவு ஆண்டவரால் அருளப்பட்டது என்பதை இத்தகைய அறிவு இறுமாப்பாளர்கள் மறந்துவிடுகிறார்கள். பிறர் செல்வத்தைத்தான் தாங்கள் அனுபவித்துவருகிறார்கள் என்பதையும் இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. அறிவுப் பெருமைக்கு இதுவும் ஒரு காரணமாகுமன்றோ? புனித பவுல் அடிகளார் ரோமர் 12:16ல் தீட்டியுள்ளதைக் கேளுங்கள்: …… மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள். உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.
தத்துவ நிபுணரான பிளாட்டோ என்பவர் ஒரு தடவை சில நண்பர்களுக்கு ஓர் அறையிலே விருந்து வைத்து உபசரித்தார். இவ்வறையில் விலையேறப்பெற்ற இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சொகுசிருக்கை போடப்பட்டிருந்தது. வழக்கமாக அழுக்கு ஆடையிலே காணப்படும் ஒரு நண்பர் அன்றும் அழுக்கு ஆடை அணிந்து கொண்டு அவ்வறைக்குள்ளே வந்து, அந்த அலங்காரமான சொகுசிருக்கையைக் கண்டு, அதன்மேல் ஏறி நின்று, அதனை மிதித்து, நான் பிளாட்டோவின் அகந்தையைக் காலின்கீழ் மிதிக்கிறேன் என்றான். பிளாட்டோ சாந்தமாக, ஆனால் என்னைவிட நீ அதிக அகந்தையோடு அதனைக் காலின்கீழ் மிதிக்கிறாய், என் நண்பனே என்று பதிலுரைத்தார்.
அறிவுப் பெருமை, கிறிஸ்துவின் கிருபை சுவிசேஷத்திற்கு அடிக்கடி எதிரியாகத் தோன்றுகிறதற்கு காரணம், அறிவுப் பெருமை கடவுள் மீது நம்பிக்கை வையாமல், சுய நம்பிக்கையிலே அதிக கவனம் செலுத்துகிறது. நீதிமொழிகள் 3:5 கூறும் சத்தியம் யாதெனில், உன் சுய புத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு. ஆனால் அறிவு அகந்தையாளர்களோ தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிலே நம்பிக்கையாயிராமல், தங்கள் சுய புத்தியின்மேல் முழுவதும் சாய்ந்துவிடுகிறார்கள். கடவுளை ஒரு சோதனைக் குழாயில் போட்டு, தங்கள் அறிவு ஆராய்ச்சியினால் அவரை அளந்து காட்டினால் மட்டுமே தாங்கள் அவரை ஏற்றுக்கொள்வோம் என்று கூறுகிறார்கள். கடவுளை முழுவதும் நம்பி, அவரையே சார்ந்து, பிழைக்க மனமற்றிருக்கிறார்கள். கல்வி, ஞானம், பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டவை விசுவாசம், நம்பிக்கையாகும். உள்ளத்தையும் கடந்து நிற்பவர் கடவுள். மனித அறிவையும் கடந்து நிற்பவர் கடவுள். எனவே மனிதன் கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும். அவர் நம்பிக்கைக்கு உரியவர். அவரை நம்பினால் மட்டுமே நாம் பிழைக்கமுடியும். அவரை நம்பாது நாம் நம்மையே நம்பிக்கொண்டிருப்போமானால், நாம் அழிவது திண்ணம். கிறிஸ்துவையல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யக்கூடாது. தேவனால் எல்லாம் கூடும். ஆகவே மனிதன் தன் சுயபுத்தியின்மேல் சாயாமல், தன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்தால் வாழ்வு பெறுவான். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (சங்.111:10).
உண்மையான மதம் சிலர் நினைக்கிறபடி அறிவை மட்டுப்படுத்தாமல் பெரிதும் அறிவை வளர்த்துவிடுகிறது. சிறந்த அறிஞரான பவுல் அடிகளார் ரோமர் 12:2ல் பறைசாற்றியுள்ளதைக் கேளுங்கள். …. உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். குறுகிய நோக்கமும், தற்பெருமையும், ஆணவமும் கொண்டவர்களை ஆண்டவர் வெறுக்கிறார். அறிவுப் பெருமையை அவர் அருவருக்கிறார். நீதிமொழிகள் 26:12ல் கடவுள் இவ்வாறு கூறியுள்ளார். தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப் பார்க்கிலும் மூடனைக் குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
செல்வச் செருக்கு ஆணவத்தின் மற்றொரு வடிவமாகும். அருள் செல்வத்திற்குக் காரணமாகிய ஆண்டவரிடமிருந்தே பொருள்செல்வமும் மனிதருக்குக் கிட்டுகிறது. எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றும் காரணமுமாயிருப்பவர் கடவுளே. உபாகமம் 8:18 கூறுகிறபடி, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக. அவரே… ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி சொன்னது: எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கர்த்தாவே மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள். வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்…. ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது. தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர். உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு. எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும் (1.நாளா.29:10-12).
உலகப் பொருள்மீது கொண்டுள்ள அகந்தையால் ஆண்டவர் இகழப்படுகிறார். நான் என்னும் ஆணவமும் முதலிடம் பெறுகிறது. இரண்டாவது இடம் பெறவேண்டியது முதலிடம் பெற்றுவிடுகிறது. நான் என்னும் அகந்தை அரியணை அமர்ந்து ஆட்சி செலுத்துகிறது. ஆண்டவர் இருக்கவேண்டிய இடத்தில் மனிதன் அமர்ந்துகொள்ளப் பார்க்கிறான். தன்னையே தனக்குக் கடவுளாக்கிக் கொள்கிறான். உலகப் பொருள் அவனுக்கு ஜீவன் ஆகிவிடுகிறது. மேலும் மேலும் உலகப் பொருளையும் செல்வத்தையும் திரட்டி வைக்க அல்லும் பகலும் அரும்பாடுபடுகிறான். பணப் பேராசை அவனைப் பற்றிப் பிடித்துக்கொள்கிறது. அவனுடைய இதயமெல்லாம் அவனுடைய ஐசுவரியத்தின் மீதே இருக்கிறது. சங்கீதம் 62:10 விடுத்துள்ள எச்சரிப்பைக் கவனித்துக் கேளுங்கள். கொடுமையை நம்பாதிருங்கள். கொள்ளையினால் பெருமை பாராட்டாதிருங்கள். ஐசுவரியம் விருத்தியானால் இதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள். 1.தீமோத்தேயு 6:9ல் மீண்டும் வேதாகமமம விடுக்கும் எச்சரிப்பைப் பாருங்கள். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிறமதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளில் விழுகிறார்கள்.
நீ அனுபவிக்கிற நன்மைகளும் ஆசீர்வாதங்களும் ஐசுவரியப் பொருள்களும் ஆண்டவரிடமிருந்து வந்தவையாகும். செல்வத்தைச் சம்பாதிப்பதற்குரிய பலத்தையும் சுகத்தையும் வாழ்நாளையும் கொடுத்தவர் கர்த்தர்தாமே. உலக ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கான காலத்தையும் உனக்குக் கிருபையாய் அருளிச் செய்தவர் ஆண்டவர்தாம். நீ இருப்பது கர்த்தருடைய கிருபையினால்தான். பின் ஏன் அனாவசியமாய் அகந்தை கொள்கிறாய்? நீ அனுபவிக்கும் எல்லா நன்மைகளையும் உனக்கு இரக்கமாய்க் கொடுத்த கடவுளை அல்லவோ நீ இடைவிடாமல் இதயபூர்வமாய் நன்றியோடு துதித்துக் கொண்டிருக்கவேண்டும். யாக்கோபு 1:17 அறைகூவுகிறதைக் கவனியுங்கள். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது. அவரிடத்தில் யாதொரு மாறுதலும் வேற்றுமையின் நிழலுமில்லை. கடவுள் எனக்கு ஒன்றும் செய்யவில்லையென்று ஒரு மனிதனும் சொல்லமுடியாது. நமக்கு இருக்கிற அத்தனை நன்மைகளும் அவர் கரத்திலிருந்து வந்தவையே. வேலை செய்ய உனக்குப் பலம் கொடுத்தவர் அவர், சிந்திக்க உனக்கு ஓர் அற்புதமான மனதைக் கொடுத்தவர் அவர். உரிமையோடு வாழ உனக்கு ஒரு நல்ல நாட்டை ஈந்தவர் அவர். உன்னிடம் இருக்கும் எல்லாப் பொருள்களும் கிருபையாய் உனக்குத் தந்தவையேயாகும். எனவே, எல்லா மகிமையும் கனமும் ஆண்டவருக்கே உரியன. பெருமை பாராட்டுவதற்கு உனக்கு என்ன இருக்கிறது?
சமூகப்பெருமை ஆணவத்தின் இன்னொரு தோற்றமாகும். சாதிப்பெருமை, இனப்பெருமை, குலப்பெருமை, நிறப்பெருமை போன்றவையெல்லாம் ஆணவத்தின் பல்வேறு அம்சங்களாகும். அணுக்குண்டு யுகத்திலிருக்கும் நம்மையும் அச்சின்னஞ்சிறு அணு ஓர் அணுவுள்ள மனிதராக்கியுள்ளது என்று அரசியல்மேதை இயம்பியுள்ளார். கடவுள் பட்சபாதமுள்ளவரல்லர். மனித குலத்துள் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று ஒன்றும் இருப்பதாக மனிதர் கருதுவதுபோல் கடவுள் கருதுவதில்லை. எல்லாரையும் ஒரே இரத்தத்தினால் தோன்றப்பண்ணினவர் அவர், எல்லாரும் ஒரே கடவுளால் படைக்கப்பட்ட மக்களாய் சகோதர அன்போடு வாழவேண்டும் என்று விரும்புகிறவர் ஆண்டவர்.
மேல்சாதி, கீழ்சாதி என்னும் கருத்து பரிசுத்தவேதாகம சத்தியத்திற்கு முற்றிலும் முரண்பட்டதாம். கிறிஸ்தவ நெறிக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். ஜெர்மனி நாட்டை நான் பார்வையிட்டபோது கிட்லருக்கு மேல் சாதி என்று ஓர் உயர்ந்த சாதி இருப்பதில் நம்பிக்கை இருந்ததாகக் கேள்விப்பட்டேன். அத்தவறான கருத்துகாரணமாக உலகம் எவ்வளவோ அவதியுற்றது. ஒரு பெரிய நாடு எவ்வளவோ சீரழிந்துவிட்டது.
சமூகப் பெருமை யாருள்ளத்தில் இருந்தாலும் அது பயங்கரமான பாவமேயாகும். ஆம், ஆணவம் ஒரு கொடி விஷப் பாவம் என்று பரிசுத்த வேதாகமம் நமக்குத் திட்டமாய்க் கற்பித்துள்ளது. தேவனுடைய இராஜ்யத்திற்குள் நாம் செல்லாதபடி, ஒரு முட்டுக்கட்டைபோல் ஆணவம் நம்மைத் தடுத்து நிறுத்திவிடும். ஆணவம் நம்மைக் கொன்று ஒழித்துவிடும். ஆணவமுள்ள எந்த ஆணும் அல்லது பெண்ணும் ஆண்டவருடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது. நான் என்ற ஆணவமுள்ளோரை ஆண்டவர் அதிகமாய் அருவருக்கிறார். உன்னைக் கொல்லும் கொடிய பாவம் ஆணவம்.
ஆணவம் என்ற பாவத்தை அறவே ஒழிப்பது எப்படி? இப் பயங்கர பாவத்திலிருந்து விடுதலை பெறுவது எங்கனம்? உன்னைக் கொன்று ஒழித்துக் கொண்டிருக்கும் இப்பயங்கர பாவமாகிய ஆணவத்தைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைக் கண்ணீரோடு கிறிஸ்துவிடம் அறிக்கை செய். நொறுங்குண்ட நறுங்குண்ட இருதயத்தோடு மனத்தாழ்மையோடும் கிறிஸ்துவிடம் வா. உனது ஆணவம் என்னும் பாவத்தினின்று உன்னை விடுதலையாக்குவதற்காக அப்பாவத்தைச் சிலுவையின்மேல் சுமந்து தீர்த்த தேவாட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது (பிலி.2:5). ஆணவத்தோடு பரலோக இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க ஒரு மனிதனாலும் கூடாது. நான் என்ற ஆணவத்தோடு இயேசு கிறிஸ்துவிடம் சென்றால், நாம் எற்றுக்கொள்ளப்படமாட்டோம். உன் பாவத்தை ஒத்துக்கொண்டு, அதற்காக மனஸ்தாபப்பட்டு இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் புண்ணியத்தின் மூலமாய் இயேசு கிறிஸ்துவிடம் பாவ மன்னிப்புக்காக கெஞ்சி, மன்றாடி, இயேசு கிறிஸ்துவையே உன் இரட்சிப்பாகவும், உன் இரட்சகராகவும், உன் தெய்வமாகவும் ஏற்றுக்கொள்ளும்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்.








