(4) காமம்
பார்வைக்கு காமம் பெரும் பகட்டாகவே தோன்றும். ஆரம்பத்தில் அது அழகாகவே காட்சியளிக்கும். அதன் வெளிப்பகட்டு கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்து நிற்கும். எடுத்த எடுப்பில்தானே அதன் ஆபாசமும், அசுத்தமும், விஷமமும் கண்பார்வைக்கு எளிதில் தென்படுவதில்லை. முதற்பார்வைக்கு அந்த ஆபாசம் அழகாகவே காட்சி தரும். தொடக்கத்தில் அது வனப்பு என்னும் மாறுவேடம் தாங்கி வெளிப்படும். விரும்பத்தக்க பொலிவும், ஆசைப்படத்தக்க அழகும், இச்சிக்கத்தக்க இன்பமும், வஞ்சகமாகத் தாங்கிவரும். பார்த்த பார்வைக்கு வெறுக்கத்தக்கதாக அதில் யாதொரு ஆபாசமும் இருக்காது. காமத்தைச் சாத்தான் ஒரு வெறுக்கத்தக்க அவலட்சண தேவதையாக அல்ல, யாவரும் விரும்பத்தக்க வனப்புத் தேவதையாக, அன்புத் தேவதையாக, இன்பத் தேவதையாக அழகுபடுத்தி யாவர் கண் முன்னும் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறான். அந்தக் காம தேவதையின் புறத்தோற்றம் பெரும் வீரர்களையும்கூட வஞ்சித்திருக்கிறது. என்ன இது, ஓர் இயற்கையான உணர்ச்சிதானே என்று பகுத்தறிவாளன் பகர்கிறான். இது கடவுள் கொடுத்த இயற்கை எழுச்சிதானே என்று அறிஞர் அறை கூவுகின்றனர். கொஞ்சம்பொறு. சத்தியவேதாகமம் சாற்றுவதைக் கேள். ஸ்திரீயுடனே விபசாரம் பண்ணுகிறவன் மதிகெட்டவன். அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான். வாதையையும் இலச்சையையும் அடைவான். அவன் நிந்தை ஒழியாது (நீதி.6:32-33).
கடவுள் காமத்தை வெறுக்கிறார். கடவுள் காமம் அற்றவர். அவர் பரிசுத்தர். அவரிடம் அசுத்தம் இல்லை. அவர் அசுத்தத்தை அருவருக்கிறார். நாமும் பரிசுத்தமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறவர். அவர் அசுத்தத்தைப் பார்க்கமுடியாத முற்றிலும் பரிசுத்த கண்ணர். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று என்று சொன்னவர், அசுத்தமானதொன்றும் தம்முடைய பரிசுத்த இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாதென்று பறைசாற்றியுள்ளவர், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்தான் தேவனைத் தரிசிக்க முடியும் என்று முழங்கியுள்ளவர், பரிசுத்த தேவன். தம் மக்களும் பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கவேண்டுமென்று ஆசிக்கிறவர்.
அசுத்தம், காமம், ஆபாசம், விபசாரம், வேசித்தனம் மனிதனைப் பரிசுத்த தேவனிடமிருந்து பிரித்துவிடுகிறது. ஆண்டவர் எவ்வளவுதான் அன்புள்ளவராக இருந்தபோதிலும், அவர் அசுத்தத்தோடே வாழத் தெரியாதவர். அசுத்தம் இருக்கும் இடத்தில் பரிசுத்த தெய்வம் வாழமுடியாது. எனவே, அசுத்தம் மனிதனைத் தேவனிடமிருந்து பிரித்துக்கொன்றுவிடுகிறது. காமம் மனிதனைக் கொல்லும் கொடிய பாவம்.
காம அசுத்தம் மனிதனைப் பாழாக்கும், குடும்பத்தைப் பாழாக்கும், தேசத்தைப் பாழாக்கும். உலகத்தைப் பாழாக்கும். மனுக்குலத்தையே பாழாக்கிவிட்டது. காமத்தால் சீரழிந்த மக்கள் எத்தனைபேர்! மாணவர் எத்தனைபேர்! வாலிபர் எத்தனைபேர்! பெண்கள் எத்தனைபேர்! அரசர்கள் எத்தனைபேர்! வீடுகள் எத்தனையோ! நாடுகள் எத்தனையோ! காமம் கொடிய விஷம். அதால் மாண்டவர் கணக்கற்றவர். காமம் பயங்கர பாவம். அப்பாவத்தின் சம்பளம் மரணம்.
மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துக் கொல்ல சாத்தான் பயன்படுத்தும் பயங்கர விஷ ஆயுதம் காமமே. காமச் சிற்றின்பத்தால் பேசின்பம் இழந்தோர் பலர். காமம் மனிதனை அசுத்த மிருகமாக்கிவிடும். சாத்தான் ஓர் அசுத்த மிருகமாக பரிசுத்த வேதாகமத்தில் காட்டப்பட்டுள்ளான். அந்த அசுத்த மிருகத்தால் ஆட்கொள்ளப்படுகிறவர்களும் தங்களை அறியாமலே அசுத்த மிருகமாகிவிடுகிறார்கள். அசுத்தமானதை நடப்பிக்கிறார்கள். அசுத்தமானதைச் சிந்திக்கிறார்கள், அசுத்தமானதைப் பேசுகிறார்கள். அசுத்தமானதை வெளியிடுகிறார்கள். அசுத்த ஆபாச படங்கள் எத்தனை! ஆபாசப் புத்தகங்கள் எத்தனை! ஆபாசக்கதைகள் எத்தனை! ஆபாசச்செயல்கள் எத்தனை! ஆபாசச் சுவரோட்டிகள் எத்தனை! ஆபாசப்பாட்டுகள் எத்தனை! ஆபாசக் காட்சிகள் எத்தனை!
இம்மண்ணுலகமாகிய மாயாபுரிச் சந்தையில் மக்களை மயக்கி சாத்தான் விற்பனை செய்வதற்குப் பகட்டாக அழகாய் அடுக்கி வைத்திருக்கும் சாமான் சிற்றின்பமே. கண்ணைக்கவரும் இந்த வெளிப்பகட்டுச் சிற்றின்பச் சாமான்களை எல்லாரும் வாங்கத்தக்கதாக சாத்தானும் அவனுடைய தூதரும் விநோதம் விநோதமான விளம்பரங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இம்மாயாபுரிச் சந்தையில் இந்தச் சரக்கு அதிகமாய் விற்பனையாகிறது. இந்தச் சரக்கை வாங்கும்போது இன்பமாகக் காட்சியளிக்கிறது. ஆனால் அனுபவித்த பின்னரோ பெரும் நரகத் துன்பத்தை அனுபவிக்கவேண்டியிருக்கிறது. பின்னால் வரும் பெருந்துன்பம் முன்னால் தெரிவதில்லை. சாத்தான் அதனை வஞ்சகமாக மறைத்துவிடுகிறான். இந்தச் சரக்கை வாங்குவோரின் இருதயம் பாழ்படுவதையும் அன்னாரின் வீடும் நாடும் பாழ்படுவதையும் பற்றிச் சாத்தான் அவர்களுக்கு முன்னரே தெரிவிப்பதில்லை. தொடக்கத்தில் பேரின்பமாகத்தென்படும் இதே சிற்றின்பம் பின்னர் கொடிய வேதனையாக மாறிவிடும். அதனை அனுபவிக்கும் சரீரமும், ஆத்துமாவும் பெரும் அழிவுக்குட்படும்.
அசுத்த வாழ்வில் ஆழ்ந்திருக்கும் ஆட்களைக் கேட்டுப் பாருங்கள். தங்கள் மானத்தை விலைக்கு விற்பனை செய்யும் விலைமாதரை வேண்டுமானால் விசாரித்துப் பாருங்கள். அடிக்கடி விவாகரத்து செய்துவிட்டு வெவ்வேறு கணவர்களை மணந்து கொள்ளும் பெண்களை வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள். சிற்றின்பம் உண்மையான பேரின்ப வாழ்வு தரமுடியுமா என்று, இத்தகையோரை விசாரித்துப் பாருங்கள். அவர்கள் தாங்கள் அனுபவிக்கும் நரக வேதனையைப்பற்றி தங்கள் அனுபவச்சாட்சியைப் பகருவார்கள். அவர்கள் சமாதானம் இழந்து, சாந்தி இழந்து, மனஅமைதி இழந்து, உடல் நலம் இழந்து, ஆன்ம மகிழ்ச்சி இழந்து, பேரின்னம் இழந்து, கடவுளையும் இழந்து தத்தளிப்பதைக் கண்ணுறலாம். மருத்துவ மனைகளிலும், சிகிச்சை சாலைகளிலும் தாங்கமுடியாத நோயுற்று, தீர்க்கமுடியாத பிணியுற்று அவதிப்படும் ஆட்களை ஆராய்ந்து பாருங்கள். அதன் காரணம் யாதென்று அவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ஏழாம் கற்பனையை மீறினதால்தான் அவர்கள் இந்தப்பாடுபடவேண்டியதிருக்கிறதென்று உங்களுக்குச் சொல்லுவார்கள். அவர்கள் ஏகோபித்து: பாவத்தின் சம்பளம் மரணம் (ரோ.6:23) என்று கூறுவார்கள்.
நரகத்தின் பூதகணம் இம்மண்ணுலக மக்களின் ஆத்துமாக்களை அழிப்பதற்கு அதிகமாகப் பயன்படுத்தும் கருவி காம இச்சையே. இவ்வுலகம் படைக்கப்பட்டதிலிருந்து இதுகாறும் சாத்தான் அதிக வெற்றியோடு பயன்படுத்திவரும் ஆயுதம் இதுதான். இந்த ஆயுதம் ஆரம்பத்தில் மனிதரை வஞ்சிக்கத்தக்கதாக அதிக வனப்புடன் தோன்றும். இறுதியிலோ, நிச்சயமாய் அழிவையே தந்து நிற்கும். அதன் அழகைவிட அதன் அழிவு பெரிது. அதன் அழகைக் காட்டிலும் அதன் அழிவு இதிக நிச்சயம். அது செல்லுமிடமெல்லாம் அழகு அழிந்துவிடும். அழிவு பெருகிவிடும்.
தற்காலத்தில் தலைதூக்கி நிற்கும் கொடிய பாவம் காமமாகும். தற்கால ஆண்களையும் பெண்களையும் அரிபிளவைப்போல் அரித்து நிற்கும் பயங்கர தீமை காம இச்சையே. பார்க்குமிடமெல்லாம் இப்பாவம் நல்லபாம்புபோல் படமெடுத்து ஆடி நிற்கிறது. அதன் விஷத்துக்குத் தப்பின ஆண்களையோ பெண்களையோ காண்பதரிது. நமது வாலிபப் பெண்களும் ஆண்களும் பெரும்பாலும் இந்த விஷப் பாம்பால் தீண்டப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். உலகம் முழுவதும் இந்த விஷக்காற்றால் நிறைந்திருக்கிறது. தற்கால உலகம் பத்துக் கற்பனைகளைப் பார்த்து பகடி பண்ணுகிறது. கடவுளைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது. தூய்மையைப் பார்த்து செய்கிறது. கற்பைப் பார்த்து காரி உமிழ்கிறது. பேரின்பத்தைப் பார்த்து நகைக்கிறது. புனித ஒழுக்கத்தை அலட்சியம் செய்கிறது. அசுத்தத்தையோ அதிகம் கவுரவப்படுத்துகிறது. காமத்தையோ கனப்படுத்துகிறது. மாம்ச இச்சையையோ மதித்து மாலையிடுகிறது. சிற்றின்பத்தையோ வரவேற்கிறது. விபசாரத்தையோ மகிமைப்படுத்துகிறது. காம இச்சையையோ இயற்கையென்கிறது. இதெல்லாம் கடைசி அழிவு காலத்தின் அறிகுறிகள். மனிதன் ஒரு மிருகமே எனத் தற்காலத்தவர் கருதுகின்றனர். தாங்கள் மிருக இச்சைகளுக்கு இடம் கொடுப்பதில் தவறொன்றுமில்லையென்று தவறாய்ப் போதிக்கப்படுகின்றனர். கற்புடன் தூய வாழ்க்கையாற்ற விரும்புகிறவர்கள் எள்ளி நகையாடப்படுகின்றனர். பரிசுத்தம் பரியாசம் பண்ணப்படுகிறது. கற்புக்கு இக்காசினியில் இடமில்லை போலும்! அந்தோ பரிதாபம்! இப்பாழ் உலகம் அசுத்த மிருக வாழ்வில் உழன்று சிக்கித் திக்குமுக்காடிச் செத்துக் கிடக்கிறதன்றோ!
காம இச்சையான அசுத்தததைப்பற்றி மூன்று காரியங்களைக் கவனிப்போம். முதலாவது, அசுத்தம் எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடத்தில் அது இருப்பதைப் பற்றிய அடையாளமும் வெளியரங்கமாய்த் தென்படுகிறது. அடிமை வியாபாரம் இருந்த காலத்தில், ஒவ்வொரு எஜமானும் தன்னுடைய அடிமைகளுக்கு ஒவ்வொரு வகை அடையாயாளக் குறியிட்டுக் கொள்வது வழக்கம். அந்த வெளிப்படை அடையாளக் குறியைக் கண்டவுடனே இந்த அடிமை இந்த எஜமானுக்குரியவன் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அதுபோலவே பாவத்துக்கு அடிமைப்பட்டிருக்கிறவர்களையும் நாம் வெகு எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அதுபோலவே பாவத்துக்கு அடிமைப்பட்டிருக்கிறவர்களையும் நாம் வெகு எளிதில் கண்டுபிடித்துவிடலாம். புகை பிடிப்போரை அவர்களுடைய உதடும் பல்லும் காட்டிவிடும். குடிகாரரை அவர்களுடைய கண்ணும், சொல்லும் காட்டிவிடும். பெருமைக்காரரை அவர்களுடைய அகந்தையான விழியும், ஆணவமான தோற்றமும் காட்டிவிடும். காம சிந்தை கொண்டோரை அவர்களுடைய அசுத்தப் பார்வையே காட்டிவிடும். அவர்களுடைய முகத்தில் ஒரு ஜோதியும் மிளிராது. ஓர் அருளும் நிலவாது. ஒரு புனித ஒளியும் வீசாது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகத்தில் தூய்மையாயிருந்தால் அது தானாய் முகத்தில் பொங்கி வழியுமன்றோ!
காமம் அது குடியிருக்கும் இதயத்தைக் கறைப்படுத்திவிடும், சிந்தையை மாசுபடுத்திவிடும், சொல்லை அசுத்தப்படுத்திவிடும், செயலை மிருகத்தனமாக்கிவிடும், ஆளைக்கெடுத்துவிடும், ஆத்துமாவை அழித்துவிடும், சரீரத்தையும் சிதைத்துவிடும். அசுத்தமானதெதுவும் தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளவே முடியாது என்பதைப் பரிசுத்த வேதாகமம் அழுத்தம் திருத்தமாக அறைகூவியுள்ளது. வஞ்சிக்கப்படாதிருங்கள். வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண் புணர்ச்சிக்காரரும்… தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை (1.கொரி.6:9-10). விபசாரம் செய்யாதிருப்பாயாக, என்ற ஏழாம் கற்பனைக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கொடுத்துள்ள சரியான விளக்கத்தைக் கேளுங்கள். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று. (மத்.5:28). செய்கையில் மட்டுமல்ல, சொல்லிலும், சிந்தையிலுங்கூட ஒரு மனிதன் விபசாரம் செய்யக்கூடும் என்பதை ஆண்டவர் அறிவுறுத்துகிறார். தற்காலத்தில் எண்ணிறைந்த பேர் தங்கள் மனோவாக்குச் செயலில் அசுத்தராகி காம இச்சைக்குட்பட்டு, ஆண்டவரைவிட்டு வழிவிலகி போயுள்ளார்கள். காமம் மனிதனைக் கடவுளிடமிருந்து கத்தரித்துவிடுகிறது.
இரண்டாவதாக, காமம் மனிதனை வஞ்சித்துப் பாழாக்கிவிடுகிறது. எல்லாவற்றைப் பார்க்கிலும் மாம்ச இச்சையே மனிதனை அதிகமாய் வஞ்சித்துக் கொல்லும் தன்மையுடையதாயிருக்கிறது. முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழி தப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களுமாய் இருந்தோம். நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல் தமது இரக்கத்தின்படியே நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். இந்த வார்த்தை உண்மையுள்ளது. தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக் குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன். இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள் (தீத்து 3:3-8).
சிற்றின்பப் பாவத்தோடு விளையாடாதே. நீ துணிந்து விளையாடினால் உன் மானம் போய்விடும். பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் (எசேக்.18:20). சிம்சோன் விபசாரத்தோடு விளையாடினான். அந்த விபசார பாவமே அவனை அழித்துவிட்டது. தாவீது இப்பயங்கர பாவத்தோடு விளையாடினான். அது அவனை அவமானப்படுத்தி, அழிவுக்குட்படுத்தி, அழுகையும் கண்ணீருமாக்கிவிட்டது. அவர் பின்னர் அதற்காக மனம் வருந்தி, குழந்தையைப்போல், விம்மி விம்மி அழுதான். அவன் உள்ளம் உடைந்தது. மனம் நொறுங்கியது. நொறுங்குண்ட நருங்குண்ட இருதயத்தோடும், பாவ மனஸ்தாபக் கண்ணீரோடும் பாவமன்னிப்புக்காக கடவுளிடம் கதறிக் கதறி அழுதான். தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன். என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்தேன். நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன் (சங்.51:1-4) என்று தாவீது மனங்கசந்து அழுது தன் பாவத்தை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, தேவனே என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். உமது சமூகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலுமிரும். உமது இரட்சண்யத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். தேவனே சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என்னுள்ளத்திலே புதுப்பியும் என்று தாவீது மன்றாடினான். ஆண்டவர் அவனுக்கு இரங்கி, அவன் பாவத்தையெல்லாம் கிருபையாய் மன்னித்தார். தாவீது பாவமன்னிப்பின் நிச்சயம் அடைந்தவனாய் நன்றி பொங்கக் கர்த்தரைப் போற்றித் துதிக்கிறான். என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி. என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னை கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடி சூட்டுகிறார். பூமிக்கும் வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
மூன்றாவது அசுத்தம் அசுத்தர்களை அடிமைப்படுத்திவிடுகிறது. மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்கும் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகாளயிருக்கிறீர்களென்று அறியீர்களா? (ரோ.6:16).
இலண்டன் மாநகரில் பண்டிதர் பில்லி கிரகாம் அவர்களால் நடத்தப்பட்ட எழுப்புதல் கூட்டத்தில் இலண்டனிலுள்ள ஒரு மருத்துவர் மனந்திரும்பி, தன்னை முழுவதுமாகக் கிறிஸ்துவிடம் ஒப்புவித்தார். அவருடைய மனந்திரும்புதலுக்கு முன்னர் அவர் காம இச்சைகளுக்கு அடிமைப்பட்டவராய் சிற்றின்ப சேற்றில் ஆழ்ந்து கிடந்தவர். அவருடைய அறை முழுவதும் ஆபாசப் படங்ள் நிறைந்திருந்தன. அவருடைய படிப்பகம் முழுவதும் காமத்தைத் தூண்டும் அசுத்த நூல்கள் குவிந்திருந்தன. சிற்றின்பக்காட்சிகள் நிறைந்த சினிமாப் படங்களைப் பார்ப்பதில் அவர் பேரின்பம் கொள்வார். அவருடைய நெஞ்சமெல்லாம் காமத்தால் கறைபட்டு இருளடைந்து கிடந்தது. அவருடைய அகமுழுவதும் காம அசுத்த உணர்ச்சிகளால் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்தது. அவருடைய நினைவெல்லாம் அசுத்தம், கனவெல்லாம் அசுத்தம், செயலெல்லாம் அசுத்தம், வாழ்வெல்லாம் அசுத்தம். அத்தகைய அழுகிப் புழு புழுத்து நாறிப்போன வாழ்வு நடத்திய வைத்தியர் மனந்திரும்பினார். மனங்கசந்து அழுதார். தன் பாவத்தை அறிக்கையிட்டார். கிறிஸ்துவிடம் பாவ மன்னிப்புக்காக கெஞ்சி மன்றாடினார். தன்னிடத்தில் வருகிற ஒருவனையும் புறம்பே தள்ளாத இயேசு கிறிஸ்;து இந்த மருத்துவரையும் புறம்பே தள்ளவில்லை. அந்த வைத்தியர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டார். பரிசுத்தாவியானவர் அவரை ஆட்கொண்டார். அவர் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியானார். பழையவைகளெல்லாம் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின. அவர் ஒரு புது மனிதரானார், தன்னுடைய வீட்டிலுள்ள எல்லா அசுத்த புத்தகங்களையும், பத்திரிகைகளையும், ஆபாசப்படங்களையும், ஒன்றாகத் திரட்டி எடுத்துக்கொண்டு தேமஸ் ஆற்றில் வீசி எறிந்தார். அந்த அசுத்த நூல்களும் படங்களும் வெள்ளத்தில் அடிபட்டுப்போனபோது அவர் அவற்றைப் பார்த்து: அதோ என்னுடைய பழைய அசுத்த ஜீவியமெல்லாம் கொல்கொதா இரத்த வெள்ளத்தில் அடிபட்டுப் போகிறது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை இரத்த புண்ணியத்தால் இப்போது நான் கிறிஸ்துவுக்குள் புரு சிருஷ்டியாகிவிட்டேன். கிறிஸ்துவுக்குத் தோத்திரம்! எனக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருக்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக ஆமென் என்றார். இப்பொழுது அந்த வைத்தியரின் இதயத்தில் இயேசு கிறிஸ்து தங்கி அவருடைய வாழ்வில் பரிசுத்தமாய் பொங்கி வழிகிறார். அவர் கிறிஸ்துவுக்குள் பரிசுத்த வெற்றி வாழ்க்கை நடத்துகிறார்.
ஆயிரக்கணக்கான மக்கள் பாவ அசுத்தத்திற்கு அடிமைகளாக இருக்கிறார்கள். பாவம் அவர்களை ஆட்கொண்டு, மேற்கொண்டு அவர்களை ஆட்டி அசைத்து ஆட்சிபுரிகிறது. காம இச்சைகளுக்கும் சிற்றின்ப ஆசைகளுக்கும் கீழ்ப்படிந்து அசுத்த ஆவி சொல்லுகிறபடியெல்லாம் நடந்து மாம்ச இச்சைகளுக்குத் தங்களை விற்றுப்போட்டவர்கள், பாவத்திற்கு அடிமைகளாகிவிடுகிறார்கள். பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் (யோ.8:34). சிற்றின்ப ஆபாசத்தில் ஈடுபட்டவர்கள், தாங்கள் செய்வது தவறு என்று தெளிவாய்த் தெரிந்தும், அப்பாவ வாழ்க்கையை விட்டுவிடச் சத்தியற்றவர்களாய் இருக்கிறார்கள். பாவம் அவர்களுக்கு எஜமானாகிவிடுகிறது. அசுத்த ஆவி அவர்களுக்கு எஜமானாகி விடுகிறது. அசுத்த ஆவி அவர்களைக் கைப்பொம்மைகளாக ஆட்டிப் படைக்கிறது. நிர்ப்பந்தமான மனிதன் நான் என்று அலற ஓலமிடுகிறார்கள்.
இவ்வாறு காம இச்சைகளுக்கும், விபசார வேசித்தனங்களுக்கும், அசுத்த சிற்றின்பங்களுக்கும் ஆளாகி இருக்கிறவர்களுக்கு விமோசனமே இல்லையோ? அவர்களுக்கு விடுதலையே இல்லையா? விடுதலை உண்டு. அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அந்த ஒரே வழி இறைவனாகிய இயேசு இரட்சகர்தான். இயேசு கிறிஸ்து நம்மை விடுதலையாக்கினால் நாம் மெய்யாகவே விடுதலையாவோம். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோ.8:36). எண்ணிறந்த பேர் இயேசு கிறிஸ்துவால் பாவத்தினின்று விடுதலை பெற்றுள்ளார்கள். அசுத்த வாழ்வில் ஆழ்த்திருந்த மகதலேனா மரியாளைக் கேட்டுப்பாருங்கள். யாக்கோபின் கிணற்றருகே வந்த சமாரிய விபசார ஸ்திரீயை விசாரித்துப்பாருங்கள். விபசாரத்தில் கையும் மெய்யுமாகக் கண்டுபிடிக்கப்பட்ட, பட்டணம் அறிந்த படுபாவியான ஸ்திரீயைக் கேட்டுப்பாருங்கள். அவர்களைப்போல் கோடா கோடி மக்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் சகல பாவங்களுமற கழுவிச் சுத்திகரிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டிகளாக மாறி, பேரின்பத்தால், பரிசுத்தத்தால் நன்றியால் பொங்கிவிடும் பாட்டைச் செவிமடுத்து கேளுங்கள்.
இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே
எப்பாவத் தீங்கும் அதனால்
நிவிர்த்தி யாகுமே
விபசாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் வரலாற்றை விவரமாய்க் கவனியுங்கள். விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தி போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும்மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்கிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றம் சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு, அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையில் எழுதினார். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக்கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார். அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங்காணாமல் ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை, ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார் (யோ.8:3-11).
இந்த விபசார ஸ்திரீயைப்போல் எல்லா மனிதர்களும் பாவிகளே. எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாகி விட்டோம் (ரோ.3:23). இயேசு கிறிஸ்து ஒருவரே நம்மைப் பாவத்திலிருந்து இரட்சிக்க வல்லவர். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். இயேசு கிறிஸ்து ஒருவரே உலகத்தின் பாவத்தைத் சுமந்து தீர்த்துவிட்டார். நமது மரணத்தைச் சுமந்து தீர்த்துவிட்டார். நமது நரக ஆக்கினையைச் சுமந்துவிட்டார். அவரை விசுவாசிக்கிறன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான். விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியால், அவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் (யோ.3:17-18).
முதலாவது, நீ ஓர் அசுத்த பாவி என்பதை ஒத்துக்கொள். இரண்டாவது, உன் பாவத்தை இயேசு கிறிஸ்துவிடம் மனத்தாழ்மையோடும் உண்மையான உத்தம மனஸ்தாபத்தோடும் அறிக்கையிடு. மூன்றாவது, இயேசு கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராக உன் இதயத்தில் ஏற்றுக்கொள். அப்பொழுது இயேசு கிறிஸ்து தமது பரிசுத்த இரத்தத்தால் உன் சகல பாவங்களுமற உன்னைக் கழுவிச் சுத்திகரித்து, பரிசுத்த ஆவியானவர் மூலமாய் உன்னை ஆட்கொள்ளுவார். பழைய அசுத்த ஜீவியம் ஒழிந்து போகும். எல்லாம் புதிதாகும். கிறிஸ்துவே உன் பரிசுத்தம் ஆவார். அவரே உனக்குப் பரிசுத்தமாக உன் இதயத்திலிருந்து பொங்கிவழிவார். கிறிஸ்துவையல்லாமல் உன்னால் ஒன்றும் செய்யமுடியாது. கிறிஸ்து உன்னிலும், நீ கிறிஸ்துவிலும் நிலைத்திருந்தால், நீ பரிசுத்தாவியானவர் மூலமாய்ப் பரிசுத்த கனிகளைக் கொடுப்பாய். பரிசுத்த வெற்றி வாழ்க்கை ஆற்றுவாய். கிறிஸ்துவையல்லாமல் நீ ஒன்றும் செய்யவே முடியாது. கிறிஸ்துவே பரிசுத்தம்.











