பர்த்தலேமேயு சீகன்பால்க்

பர்த்தலேமேயு சீகன்பால்க் 1683ம் ஆண்டு ஜுன் மாதம் 23ம் தேதி ஜெர்மனி நாட்டில் ஓபர்லௌசிட்ஸ் என்ற மாவட்டத்தில் புல்ஸ்னிஸ்ட் என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தையின் பெயரான பர்த்தலேமேயு சீகன்பால்க் என்ற பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. ஆனால் இவர் சின்ன சீகன்பால்க் என்றழைக்கப்பட்டார்.
இவருக்கு மூன்று மூத்த சகோதரிகள் உண்டு. இவர் பெற்றோருக்கு ஒரே பையனானதால் செல்லமாக வளர்க்கப்பட்டார். தாய் தெய்வபக்தி மிகுந்த மாது. பெயர் காதரைன். தாயும் தந்தையும் நோய்கொண்ட உடலுடையவர்களாயிருந்ததால் இருவரும் சரீர பெலவீனமுடையவராயிருந்தார்கள்.
தாயின் நோய் அதிகரித்ததால் படுக்கையிலானார். தாயின் மரண நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. பிள்ளைகளும் கணவரும் காதரைனின் கட்டிலைச் சுற்றி நின்று கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தனர். அப்போது காதரைன் அம்மையார் கட்டிலைச் சுற்றி நின்ற பிள்ளைகளைப் பார்த்து, என் பிள்ளைகளே, நீங்கள் அழவேண்டாம். நான் உங்களுக்குப் பெரிய திரவியம் ஒன்று வைத்திருக்கிறேன். அதனை எனது வேதப்புத்தகத்தில் தேடுங்கள், காண்பீர்கள். என் வேதபுத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் படித்து கண்ணீரோடு தேவனிடம் கெஞ்சியிருக்கிறேன் என்று கூறி இவ்வுலக ஓட்டத்தை முடித்தார். இக்காட்சியினையும் அன்னையின் சொற்களையும் பிள்ளைகள் ஒருபோதும் மறக்கவேயில்லை.
காதரைனின் மரணத்திற்குச் சில நாட்களுக்குப் பின் தந்தை சீகன்பால்க் கடும் நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையிலானார். சீக்கிரம் மரணம் சம்பவிக்கும் என்று அவர் அறிந்திருந்ததாலும், பிள்ளைகள் சிறுவர்களாயிருந்தமையாலும், மரணத்திற்குப் பின் சவப்பெட்டி வாங்க அல்லலுறுவர் என எண்ணி, ஒருவரது உதவியால் சவப்பெட்டி ஒன்றினை வாங்கி வீட்டில் வைத்தார். துன்பம் தொடர்ந்துவரும் என்பதற்கிணங்க இந்நிலையில் ஒருநாள் அவரது வீடு தீப்பிடித்துக்கொண்டது. தீயை அணைக்க அக்கம்பக்கத்தார் ஓடோடி வந்தனர். படுக்கையிலிருந்த தந்தை சீகன்பால்க்கை விரைவில் வெளியே எடுத்துச் செல்ல முயற்சித்தனர். படுக்கையோடு சேர்த்துச் சுமந்து செல்வது கடினமாயிருந்தமையால் வேறேதாவது கிடைக்குமாவென்று தேடினர். ஒரு சவப்பெட்டி அவர்கள் கண்களில் தென்பட்டது. அதனுள்ளே அவரை வைத்து வேகவேகமாக வெளியே கொண்டுவந்தனர். இவ்விதமாய் தந்தை சீகன்பால்க் தீயினின்று தப்புவிக்கப்பட்டார். அவரைக் காப்பாற்றியவர்கள் மகிழ்ச்சியோடு சவப்பெட்டியை உற்று நோக்கினர். அந்தோ! பரிதாபம்! அதில் பர்த்தலோமேயுவின் சடலம் மட்டுமேயிருந்தது. உயிர் இல்லை.
குடும்பத்தில் ஏற்பட்ட இவ்விதமான துர்ப்பாக்கிய சம்பவங்கள் சின்ன பர்த்லோமேயுவின் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிந்துவிட்டன. எனவே அவா தெய்வத்தையன்றி வேறெந்த துணையையும் சாதகமானதில்லை என்பதனை நன்குணர்ந்தவராய் தேவனையே சார்ந்து வாழலானார்.
முதலில் சீகன்பால்க் சொந்த ஊரில் விவசாயியாய் இருந்தாh. சிலநாட்கள் ஆசிரியராய்ப் பணி புரிந்தார். பின்னர் 1703ம் ஆண்டு கல்லேயில் இறையில் கற்றார். இறையியல் கற்றபின் பல இடங்களுக்குச் சென்று பிரசங்கம் செய்தார். தேவனைப்பற்றி அதிகமாய் சிந்திப்பதிலும் தேவ ஊழியர்களளோடு அதிகமாய்த் தொடர்பு கொள்ளுவதிலும் ஈடுபட்டார். இதனால் அதிக உற்சாகமும் புத்துணர்ச்சியுமுடையவரானார்.
கல்லேயில் படிக்கும்போது ஒருநாள் ஆபட் பிரைய்த்தொப்ட் என்பவரின் பிரசங்கம் இவரை வெகுவாய் அசைத்தது. ஐரோப்பாவில் நூறு ஆத்துமாக்களைக் கிறிஸ்துவண்டை வழிநடத்துவதைவிட பின்தங்கிய நாட்டில் ஓர் ஆத்துமாவைக் கிறிஸ்துவண்டை வழிநடத்துவதே மிகச் சிறப்பானதாகும் என்ற ஆபட்பிரைய்த் தௌப்டின் வார்த்தைகள் சீகன்பால்க்கின் உள்ளத்தில் பதிந்து கிரியை செய்ய ஆரம்பித்தன. சீகன்பால்க்கின் மிஷனறி வாஞ்சை வளர்ந்தது. இவரது நண்பர் புளுச்சோவும் இவரைப் போன்று ஊழிய வாஞ்சையுள்ளவராயிருந்தார்.
இச் சமயத்தில்தான் டென்மார்க் மன்னர் பிரடெரிக் தனது அரசவைப் போதகர் டாக்டர் லட்க்கன்சிடம் சில ஊழியர்களை அனுப்பித்தருமாறு கேட்டிருந்தார். டென்மார்க்கில் ஊழியர் பஞ்சம் நிலவிதால் அவர் nஐர்மனி நாட்டு சீகன் பால்க்கிடமும் புளுச்சோவிடமும் எழுதிக் கேட்டார். அவர்கள் இருவரும் சம்மதம் தெரிவித்து எழுதினர்.
எனவே இவர்களது சம்மதம் அங்கீகரிக்கப்பட்டது. எனினும் அயல்நாட்டு மிஷனறிகளாய்ச் செல்லுவோர் சில பரீட்சைகளில் தேறிடவேண்டியிருந்தது. இதற்கிணங்க இருவரும் வரவழைக்கப்பட்டு பரீட்சிக்கப்பட்டனர். இவர்களைப் பரீட்சித்தவர் புனிதர் இயக்கத்தை வெறுப்பவர். சீகன்பால்க்கும் புளுச்சோவும் புனிதர் இயக்கத்தில் அதிக நாட்டமுடையவர். ஆகையால் முதல் பரீட்சையில் இவர்கள் இந்தியாவிற்குச் செல்லத் தகுதியற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். தலைமையிடத்து உத்தரவுப்படி மீண்டும் ஒரு பரீட்சை நடத்தப்பட்டது. தலைமையிடம் இவர்களுக்குச் சாதகமாயிருப்பதையறிந்த பரீட்சை மேற்பார்வையாளர் இவர்கள் தகுதியுள்ளவர்கள்தான் என்று தீர்ப்பளித்தார்.
சீகன்பால்க்கும் புளுச்சோவும் இந்தியாவிற்கு வரவிருப்பதை அறிந்த டேனிஷ் கம்பெனியார் தங்களது சுதந்திரம் (மனம்போல் நடத்தல்) பாதிக்கப்படும் என்றெண்ணி அவர்களது வரவிற்கு முட்டுக்கட்டையிட முயற்சித்தனர்.
சீகன்பால்க் இந்தியாவிற்கு வருதலும் பணியின் ஆரம்பமும்
சீகன்பால்க்கைவிட புளுச்சே ஆறுவயதிற்கு மூத்தவர். இருப்பினும் இருவரும் ஒருமித்த கருத்துடையவர்கள், உற்ற நண்பர்கள். இருவரும் 1706ம் ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி சோபி கெட்விக் என்னும் கப்பலில் தரங்கம் பாடிக்கு வந்தனர்.
தரங்கம்பாடியருகில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலிலிருந்து அனைவரும் கரைக்கும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இவ்விருவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இவர்களை ஏற்றுக்கொள்ளவோ உபசரிக்கவோ ஒருவருமில்லை. இவர்களைக் கரைக்குக் கொண்டு செல்ல ஒருவரும் படகு அனுப்பவுமில்லை. சில நாட்களுக்குப் பின்னர் ஒருவர் அவர்களுக்கு உதவிட முன்வந்தார். அவர் அவ்விருவரையும் இன்னொரு கப்பலுக்கு மாற்றினார். அதிலிருந்து தங்கக்குணம் படைத்த தமிழர்களின் உதவியால் படகிலேறி கரைசேர்ந்தனர். கரைசேர்ந்தபோது அரசாங்க அலுவலர் ஒருவர் தன் கையில் பிடித்திருந்த கம்பியினால் அடித்து விடுவேன் என்று கூறிப் பயமுறுத்தினார். ஆகவே அவர்கள் அங்கே நிற்கவேண்டியதாயிற்று. அப்போது நேரம் காலை பத்து மணி. அன்று மாலை நான்கு மணி வரையிலும் அவர்கள் தரங்கம்பாடி நகருக்குள் சென்றிட அனுமதிக்கப்படவில்லை. ஆம்! அருந்திடத் தண்ணீர்கூடக் கொடுக்கப்படாத நிலையில் அங்கேயே நின்றனர்.
எவ்வளவு சிறப்பான வரவேற்பு! கிறிஸ்துவைப்பற்றி சுவிசேஷம் கூறவந்த மிஷனறிகளை ஐரோப்பியர் வரவேற்ற விதம் இதுதான்.
இருள் சூழும் நேரத்தில் டேனிஷ் தளபதி ஜே.சி. கேசியஸ் சீகன்பால்க்கைச் சந்திக்க வந்ததர். அதட்டும் தோரணையில் உங்களை இங்கு வரச்சொன்னது யார்? என்று கேட்டார். சீகன்பால்க்கும் புளுச்சோவும் தாங்கள் டேனிஷ் அரசரின் கட்டளைப்படி வந்ததாகக் கூறி, அதற்கான அத்தாட்சிப் பத்திரத்தையும் காட்டினர். எனவே கேசியஸ் அமைதிப்பட்டுத் திரும்பினார். அவர் பின்னால் இவ்விரு ஊழியர்களும் சென்றனர். சந்தைத்திடல் வரை பின்னால் சென்றனர். பின்னர் வேகமாக கேசியஸ் சென்றுவிட்டமையால் இருவரும் செய்வதறியாது திகைத்து நிற்கலாயினர்.
தேவன் தம்மை நம்புகிறவர்களைக் கைவிடுகிறதில்லை என்பது என்றுமே பொய்த்ததில்லை.
ஆம், அங்கு ஒரு ஜெர்மானியர் வந்தார். திகைத்து நின்ற இவர்களைத் தன்னுடனே அழைத்துச் சென்றார். தனது மாமாவின் வீட்டில் கொண்டு சேர்த்தார். பின்னர் இவர்கள் வாடகைக்கு வீடு அமர்த்தி அங்கு வாழலாயினர்.
கேசியஸ், திட்டம் பல தீட்டினார். இம்மிஷனறிகளால் தன் உருட்டும் புரட்டும் இழிச்செயல்களும் சந்தைக்கு வந்துவிடும் என்று பயந்தவராய் இவர்களுக்குத் தொல்லை கொடுத்திட, துயர் பெருக்கிட முழுமூச்சுடன் செயல்ப்படலானார். டேனிஷ் கம்பனியாரும் கேசியசின் திட்டங்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்தனர்.
1707ம் அண்டு வருடப்பிறப்பு தினத்தில் புளுச்சோ கிறிஸ்தவர்களின் பாவங்களைக் குறித்தும் கம்பனியாரின் அவமானச் செயல்களைக் குறித்தும் கண்டித்துப் பேசி அவர்கள் மனந்திரும்பி இயேசு காட்டிய வழியில் நடக்க வேண்டுமென்று போதித்தார். எனவே அன்று மாலையில்தானே சீகன்பால்க்கும் புளுச்சோவும் குற்றம் சாட்டப்பட்டு கவர்னர் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.
சீகன்பால்க்கையும் புளுச்சோவையும் கேசியஸ் அடித்து நொறுக்கி விடுபவர்போல் கோபம் கொண்டார். இந்த நாய்களுக்கு நம்மைப் பற்றி ஏன் இந்த அக்கறை என்று கூறியவாறே கையை மடக்கி சீகன்பால்க்கின் நெஞ்சிலே குத்தினார். இதைக்கண்ட தமிழ்த்தாயின் புதல்வர்கள் கேசியஸ்தான் நாய் என்று உள்ளத்தில் எண்ணினர். கிறிஸ்துவைப் பிரசங்கிப்போர் உண்மையிலேயே வீரர்கள்தான். இவர்களுக்கே இத்தகை வீரம் இருக்கும்போது கிறிஸ்துவிலும் எத்தனையாயிருந்திருக்கும் என்று நினைத்தனர், பெருமூச்சு விட்டனர்.
சீகன்பால்க் மனந்தளராது செய்யவேண்டியவற்றைச் செய்து கொண்டேயிருந்ததார். அநியாயம் செய்யப்பட்டபோதெல்லாம் இயன்றளவு தேவ ஒத்தாசையுடன் எதிர்த்தார்.
ஒருசமயம் ஒரு விதவை கேசியசிடம் நியாயத்திற்காக முறையிட்டாள். கேசியஸ் அதற்குச் செவிசாய்க்கவில்லை. அவளுடைய கணவர் ராயப்பன் தலைமுடி சிங்காரிக்கும் தொழில் புரிந்தவர். இவர் ஞானஸ்நானம் பெற்று நல்லதொரு கிறிஸ்தவராய் வாழ்ந்தார். தீடிரென அவர் மரித்துப் போனார். அவரது சொத்து சம்பந்தமாக விதவைக்கும் குடும்பத்தினர் சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை விசாரித்து நியாயம் வழங்குமாறுதான் அவள் கேசியசிடம் கேட்டது. அவர் இதனை அசட்டை செய்ததால் அவள் அங்கலாய்த்தாள். இதனை அறிந்த சீகன்பால்க், தான் அறிந்த உண்மைகளை எடுத்துக்கூறி அந்த ஏழைக் கிறிஸ்தவளுக்கு நியாயம் வழங்குமாறு ஒரு கடிதம் எழுதினார். இதனால் கேசியஸ் கடுங்கோபமடைந்தார். அரசியலில் தலையிடுகிறார் சீகன்பால்க் என்று குற்றம் சாட்டினார். சீகன்பால்;கை அழைத்து வருமாறு ஓர் அடிமையை அனுப்பினார். பின்னர் சீகன்பால்க் இதனிமித்தம் சிறையிலடைக்கப்பட்டார்.
சீகன்பால்க் நான்கு மாதங்கள் சிறையில் அவதியுற்றார். சிறியதொரு அறையில் சிறை வாழ்க்கை நடத்திய சீகன்பால்க்கை யாரும் பார்த்திட அனுமதிக்கப்படவில்லை. எழுதுவதற்கு காகிதம், பேனா ஆகியனவும் கொடுக்கப்படவில்லை. அனால் கர்த்தர் அவரை எவ்விதக் குறைவுமின்றி போஷித்தார். அன்னாருக்குத் துன்பமளித்து வந்த கேசியஸ் தன் முயற்சிகளனைத்தும் வீணாவதைக் கண்டு, அவரை விடுலை செய்துவிட எண்ணினார். ஆனால் அதற்கு முன் மன்னிப்புக் கடிதம் எழுதுவதானால் உடனடியாக விடுதலை செய்யலாம் என்று புளுச்சோவிடம் கேசியஸ் சொல்லி அனுப்பினார். சீகன்பால்க் அதற்கு இணங்கவில்லை. கேசியஸ் தவறுகளை உணரலானார். கேசியசுக்கு சீகன்பால்க்கை விடுதலை செய்யாமல் நிம்மதி இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஆகையால் தன் மனைவியுடன் ஒருநாள் சீகன்பால்க்கைக் காணச்சென்றார். சீகன்பால்க் கேசியசைத் தன் நெருங்கின நண்பனைப்போல் வரவேற்று அன்புடன் பேசினார். சீகன்பால்க் 1709ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி விடுதலையானார்.
சீகன்பால்க்கும் புளுச்சோவும் கிறிஸ்து நாம மகிமைக்காக அடைந்த வேதனைகளை விவரிப்பின் நம் கண்களில் கண்ணீர் பெருகும், உள்ளத்தின் வேதனை பெருமூச்சாய் வெளிவரும்.
இவ்விரு மிஷனறிகளும் சில காலம் சொந்த நாடு சென்று திரும்பினால் நல்லது என எண்ணினர். ஆனால் அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குச் செல்லாதிருக்க என்னென்ன இடையூறு செய்ய முடியுமோ அத்தனையையும் கம்பனியார் செய்தனர்.
தமிழுக்குத் தொண்டாற்றுதல்
சீகன்பால்க் தமிழ் கற்றல்
சீகன்பால்க் ஐயரை தமிழர்கள் நன்கு நேசித்தனர். தமிழர்கள் பாராட்டிய அன்பு அவரது சரீர பெலவீனத்தில் புதுத் தெம்பை அளித்தது.
புளுச்சோவும் சீகன்பால்கும் தரங்கம்பாடியில் ஒரு சிறு பள்ளிக்கூடம் ஆரம்பித்தனர். இருவரும் தாங்கள் ஆரம்பித்த பிள்ளியிலே சிறு பிள்ளைகளோடு தரையில் உட்கார்ந்து தமிழ் எழுத்துக்களை விரலினால் மணலின் தரையில் எழுதி தமிழ் கற்றனர். அவர்களுக்கு முதலியப்பன் என்ற வயோதிபர் கற்றுக்கொடுத்தார்.
சீகன்பால்க் இரண்டு வருடங்களாக ஜேர்மன் புத்தகமோ லத்தீன் புத்தகமோ படிக்காமல் தமிழையே கற்றார். தினமும் காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை கடந்த நாளில் கற்ற தமிழ்ச் சொற்களை மனப்பாடமாய்ச் சொல்லுவார். பின்னர் எட்டுமணி முதல் ஒரு மணி வரை தமிழ்ச் சுவடிகள் படிப்பார். மாலையில் மூன்று மணி முதல் ஐந்து மணி வரை மீண்டும் தமிழ்ச் சுவடிகள் படிப்பார். இரவு ஏழு மணி முதல் எட்டுமணி வரை யாரையாவது ஒருவரை தமிழ்ப்புத்தகங்களை வாசிக்கச் செய்து கவனித்துக்கொண்டு இருப்பார்.
இவ்விதமாய் இவர் தமிழைப் படித்தமையால் எட்டு மாதங்களில் தமிழில் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார். இதனால் தமிழுக்கு மறுமலர்ச்சிக்காலம் ஆரம்பிக்கலாயிற்று எனலாம். இக்கூற்று சரிதானோவென கேள்வி எழுப்பலாம்.
கம்பனி வர்த்தகர்கள் மத்தியிலும், கம்பனி பட்டாளத்தினர் மத்தியிலும் ஊழியர்கள் அக்காலத்தில் இருந்தபோதிலும் அவர்களிடம் கிறிஸ்தவத் தொண்டாற்றும் வாஞ்சை இல்லை. எனவே இந்நிலையில் பரிசுத்த வேதபுத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தல் இலகுவான காரியமல்ல. கிறிஸ்தவ ஊழியர் ஒருவருடைய உதவியுமின்றி தனித்தே அவர் இப்பணியில் ஈடுபடலானார். இப்பணியினை அவர் ஆரம்பிப்பதற்குமுன் அவர் பல நாட்களாய் ஊக்கமாய் ஜெபித்தார். புது உற்சாகமும் தெய்வ வழி நடத்துதலும் பெற்றார். எனவே 1708ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.
1707ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பல பாட்டுக்களை மொழிபெயர்த்தார். தமிழ் இராகங்களுக்கேற்ற கீர்த்தனைகளை இயற்றினார். இவர் இயற்றிய 48 பாடல்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அச்சிடப்பட்டன.
தமிழ் புதிய ஏற்பாடு மொழிபெயர்ப்பு அச்சிடப்படுமுன் 1713ம் ஆண்டில் தமிழ்நாட்ட தெய்வங்களின் பரம்பரை என்ற நூலை எழுதினார். நீங்கள் இப் புத்தகத்தினைப் படித்தபின் உண்மையை அறிந்துகொள்வீர்கள்.
சீகன்பால்க் முதலில் தமிழில் ஒற்றைத்தாள் பிரதிகளும் பின்னர் பிரசங்கங்களும் எழுதினார். அதன்பின் புத்தகங்கள் எழுதினார். இவை யாவும் கைப்பிரதிகளாயிருந்தன.
மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடுதல்
பரிசுத்த வேதபுத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழர்கள் வேதத்தைப் படித்து தாங்களாகவே அறிந்துகொள்ளும் வழிவகைதனை இதுவரை யாரும் செய்யவில்லை. புரட்டஸ்டான்ட் மிஷன் பிரிவினர் நம் நாட்டில் ஊழியம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கத்தோலிக்கப் பிரிவினர் இந்தியாவில் நிலைகொண்டிருந்தபோதிலும் வேதப்புத்தகத்தைத் தமிழில் திருத்தி அனைவரும் படித்திடும் வகையில் யாரும் கருத்துச் செலுத்தியதில்லை எனலாம்.
இப்புத்தகம் 219 பக்கங்களைக் கொண்டது. நீதிவெண்பா, கொன்றைவேந்தன், உலகநீதி என்னும் தமிழ் நூல்களை ஒன்று சேர்த்து நானாவித நூல்கள் என்ற பெயருடன் ஆக்கிவைத்தார். இதற்குள் அவர் ஒரு முன்னுரையையும் சேர்த்தார். லத்தீன் மொழியில் ஒரு தமிழ் இலக்கண நூல் இயற்றினார். ஜெர்மன் மொழியில் மலபார் நாட்டு மார்க்கத்தைப்பற்றிய முழுவிபரமும் என்ற 322 பக்கங்கள் கொண்டதொரு நூலையும் எழுதினார் (மலபார் என்னும் வார்த்தை தமிழ் நாட்டைக் குறிப்பிடுகிறது)
திரு சீகன்பால்க் பனை ஓலையில் எழுதுவதில் தேர்ச்சி பெற்றார். பனைஓலைச் சுவடியில் எழுதியவற்றை ஜெர்மனியில் தனித்தனித் தமிழ் எழுத்துக்களாக வார்த்தெடுக்க ஒழுங்கு செய்தார்.
இந்தியாவிற்குத் செய்த தொண்டு
முதல் காகிதத் தொழிற்சாலை
ஜெர்மனியில் வார்ப்பிக்கப்பட்ட எழுத்துக்கள் இந்தியாவிற்கு வந்தபின் அவற்றை அச்சிடுவதற்கான காகிதமும் அச்சகமும் இந்தியாவில் இல்லாமையால் மேற்கொண்டு என்னசெய்வதென்று எண்ணிடலானார். இவர் எழுதி வைத்திருந்த பனைஓலைச் சுவடி வடிவிலான நூற்களைப் பலரும் அறிய அச்சிட்டுப் பரப்ப முடியாதிருந்த நிலைமையினை நன்று உணர்ந்திருந்த அட்லோர் துரை என்பவர் இந்தியாவிலேயே காகிதம் செய்யும் முயற்சியிலீடுபட்டார். அவர் தரங்கம்பாடிக்கு அருகிலுள்ள பொறாயார் என்னும் இடத்தில் காகிதம் செய்வதற்கான ஆலையை எற்படுத்தினார். சீகன்பால்க்கின் தூண்டுதலும் ஊக்கமூட்டுதலும் இதற்குக் காரணமாயிருந்தது. இதுதான் இந்தியாவின் முதல் காகிதத் தொழிற்சாலை.
மிஷனறிகள் இந்தியா புதுமைபெற எவ்வளவாய் உழைத்திருக்கிறார்கள் என்பதை இச்செயல் தௌ;ளத் தெளிய எடுத்துரைக்கின்றதல்லவா?
ஊழியத்திற்குத் தேவையான காகிதம் தன் தொழிற்சாiயில் செய்துகொடுத்து உதவினார் அட்லோர்.
இந்தியாவின் முதல் அச்சம்
சீகன்பால்க்கின் நல் ஊழியத்தை அறிந்த இங்கிலாந்து நாட்டு கிறிஸ்து மார்க்க அபிவிருத்திச் சங்கத்தார் ஓர் அச்சு இயந்திரத்தை அவருக்கு அனுப்பி வதை;தனர். அவ்வச்சு இயந்திரத்தை சுமந்துவந்த கப்பல், ஜெர்மனிய நண்பர்கள் கொடுத்த அச்சு எழுத்துக்களையும் சுமந்துவந்தது.
அச்சு இயந்திரத்தைக் கொண்டுவந்த கப்பலை வழியில் பிரஞ்சுக்காரார்கள் பிடித்துக்கொண்டனர். சில நாட்களுக்குப் பின் சென்னை கவர்னர் பணம் செலுத்தி அக்கப்பலை மீட்டார். எனவே மீண்டும் கப்பல் இந்தியா நோக்கிப் பிரயாணம் ஆரம்பித்தது. ஆப்பிரிக்காவின் தென்கோடியில் நன்னம்பிக்கை முனை அருகே கப்பல் வரும்போது அச்சு இயந்திரத்தை இயக்கத் தெரிந்திருந்த நிபுணர் மரித்துப்போனார். அச்சு இயந்திரம் தரங்கம்பாடிக்கு வந்தது. ஆனால் அதனை இயக்கத் தெரிந்த ஒருவரும் இல்லாததால் இயந்திரம் உபயோகிக்க முடியாத நிலையில் வைக்கப்பட்டது.
எனினும் சீகன்பால்க் உற்சாகம் குன்றவில்லை. நம்பிக்கையில் தளர்ச்சியடையவில்லை. இம்மட்டும் நடத்தின தேவன் இன்னமும் நடத்துவார் என்ற நம்பிக்கையுடன் செயலாற்றினார். சில நாட்களில் டேனிஷ் சேனையிலிருந்த போர்வீரர் ஒருவருக்கு அச்சு இயத்திரத்தை இயக்கத் தெரியும் என்பதைக் கேள்விப்பட்டார். தளபதியின் அனுமதி பெற்று அவரை அழைத்து வந்து முதலில் சில பிரசங்கங்களையும் பின்னர் வினா விடை என்ற நூலையும் அச்சிட்டார். இவைதான் இந்தியாவில் அச்சிடப்பட்ட முதல் நூல்கள் (1713). 1713ம் ஆண்டின் இறுதிப் பாகத்தில் புதிய ஏற்பாட்டின் அச்சுப் பதிப்பை ஆரம்பித்தார்.
இந்தியாவில் அச்சு எழுத்துக்கள் வார்ப்பிக்கப்படுதல்
ஜெர்மனியிலிருந்து கொண்டுவரப்பட்ட அச்செழுத்துக்கள் மிகப் பருமனாயிருந்தபடியால் தரங்கம்பாடியில் சிறிய அச்செழுத்துக்கள் வார்க்கப்படுவதற்கான ஒழுங்குகளை இவர் செய்தார். அச்செழுத்துக்கள் இந்தியாவிலேயே செய்யப்பட்டன.
ஆம்! இந்தியாவில் (தமிழ்நாட்டில்) கிறிஸ்தவ ஊழியம் செய்துவந்த சீகன்பால்க் அச்சகம் ஏற்படுத்தியது, அச்செழுத்துக்கள் வார்ப்பித்தது ஆகியன இந்தியாவின் முன்னேற்றத்தின் முதல் கட்டம் என்பதை யார் மறுத்திடக் கூடும், மறைத்திட இயலும்.
இந்தியாவின் அறிவுக்கண்ணைத் திறக்கக் காரணமாயிருந்தோர் கிறிஸ்தவர்கள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியைப்போல் புலப்படுகிறதன்றோ? கிறிஸ்தவர்களை நம் தேசமுன்னேற்றத்திற்கு முன் குறித்திருந்தவர் இயேசு கிறிஸ்துவன்றோ! இதனை இந்தியர் அனைவரும் உணர்ந்து இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் வளமாய் ஆசீர்வாதம் நம் நாட்டில் தங்குமன்றோ!
தரங்கம்பாடியில் அச்சகத்தில் வெளியிடப்பட்ட சீகன்பால்க்குவின் நூற்கள் லூத்தரின் ஞானோபதேசக் குறிப்பு, இரட்சிப்பின் ஒழுங்கு, சோழ மண்டலதர்தாருக்கு ஒரு நிருபம், ஞானப்பாட்டுப் புத்தகம், ஜெபப் புத்தகம் ஆகியனவாகும்.
சுவிசேஷ ஊழியம்
சீகன்பால்க் மொழிபெயர்த்த தமிழ் புதிய ஏற்பாடு படிப்பதற்கு எளியநடையில் அமைந்திருந்ததால் ஏராளமானோர் விரும்பிப் படித்தனர். பலர் அதனைப் படித்து மனந்திரும்பி கர்த்தராகிய இயேசுவே மெய்யான தெய்வம் என்று அறிந்து அவரை ஏற்றுக்கொண்டார்.
ரோமன் கத்தோலிக்க சபையினராயிருந்த ராஜநாயக்கன் என்பவர் சீகன்பால்க் மொழியெர்த்த புதிய ஏற்பாட்டைப் படித்ததால் தரங்கம்பாடி புரட்டஸ்டன்ட் மிஷனறிகளோடு தொடர்பு கொண்டார். பின்னர் புரட்டாஸ்டன்ட் கிறிஸ்தவரானார். இரவது மனமாற்றம் வீரமாமுனிவர் என்ற பெஸ்கிக்கு கடுஞ் சினமுண்டாக்கியது. பெஸ்கி சிறந்த அறிவாளி. பெயர் பெற்ற தமிறிஞர். எனினும் இவர் ராஜநாயக்கனுக்கு இடர் பல செய்ய முயன்றிடலானார்.
ராஜநாயக்கனின் வீட்டை அழித்திட பெஸ்கி ஆட்களை அனுப்பினார். ஊரார் அதனைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரது தூண்டுதலால் சிலர் சென்று ராஜநாயக்கனின் வீட்டை தாக்கினார். ராஜநாயக்கனின் இரு சகோதரர்கள் காயமடைந்தனர். அவரது தந்தை கொல்லப்பட்டார். எனினும் ராஜநாயக்கன் தளரா விசுவாசத்துடன் தன் வேலையை விட்டுவிட்டு சுவிசேஷ ஊழியரானார். அவர் மூலம் சுவிசேஷம் பல இடங்களிலும் பரவியது.
சீகன் பால்க் ஊழியம் செய்வதில் முன்ணணியில் நின்றார். பிற மதத்தவர் மத்தியில் இடைவிடாது ஊழியம் செய்தார். பிற மதத்தவர் இவரை வெறுக்கவில்லை. அன்பு பாராட்டினர். பாசமுடன் நடத்தினர்.
இவர் தரங்கம்பாடியில் தன் வீட்டிற்கு முன்னால் பெரியதொரு பந்தல் அமைத்திருந்தார். இப்பந்தலில் வாரதற்திற்கு மூன்று நாள் சுதேசிகள் வந்து கூடுவர். அவர்களுக்கு கிறிஸ்துவைப்பற்றிக் கூறி சுவிசேஷட பணிபுரிந்தார். அவரைத் தனியாகக் கண்டு பேச விரும்புவோருக்கென சமயம் ஒதுக்கி வைத்திருந்தார். அவ்வேளையில் அங்கு வருவோரை ஒவ்வொருவராய் விசாரித்து அவர்களுக்கு ஆத்மீக உணணைக் கொடுத்ததோடு நல் உபதேசங்களும் கூறி உதவி செய்தார். எனவே அவரைக் கண்டுபேசி கர்த்தரைப்பற்றி அறிந்து களிப்படைய அநேகர் வருவதுண்டு.
இக்காலத்துப் போதகர்மாரில் பெரும்பாலானோர் இம்முறையினைப் பின்பற்றாது உள்ளனர். சில நாட்கள் தொடர்பாய் ஆலயத்திற்கு வராதவர்கள், புதிதாக ஆலயத்திற்கு வருவோர், கண்ணீரும் , கவலையுமாய் வருவோர், ஆகியோரைத் தனியே சந்தித்துப்பேசி, ஆண்டவன் திருவாக்கை அவர்களுக்குக் கூறி, ஆறுதலளிப்பது மிகவும் உசிதமானதொரு செயலாகும்.
தரங்கம்பாடியில் இவர் தங்கிடத் துவக்கிய இரண்டாம் ஆண்டில் போத்துக்கீசிய சிறுவர்களுக்கென ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்தார். அதில் நம் தமிழ் செல்லக் குழந்தைகள் பல வந்து கற்றன. அவர்களுக்கு கிறிஸ்தவக் கல்வி கொடுக்கப்பட்டது. சில நாட்களில் அது சிறியதோர் சபையாக மாறியது. சுதேசிகள் பலர் திருமுழுக்குப் பெற்று சபையின் அங்கமாயினர். கத்தோலிக்கப் பிரிவிலிருந்தும் பலர் வந்து இச்சபையில் சேர்ந்துகொண்டனர். இச்சபையில் 1707ம் ஆண்டு 35 பேரும், 1708ம் ஆண்டு 101 பேரும் 1712ம் அண்டு 202 பேரும் அங்கம் வகித்தனர். இவ்விதமாய் சபை வளரலாயிற்று.
சட்டைக்காரருக்கென்று (யுபெடழ – ஐனெயைn) போர்டிங் பாடசாலை ஒன்று ஸ்தாபித்தார். இவர் மரிக்கும்போது போர்டிங் பாடசாலையில் 280 போ படித்துக்கொண்டிருந்தனர்.
நாட்டில் நிலவிய ஜாதி வித்தியாசம் சபையில் நிலவி விடாதபடி சீகன்பால்க் முயன்றபோதிலும் முடியாது போயிற்று. சீகன்பால்; ஆரம்பித்த சபையில் போர்த்துக்கீசியர், ஐரோப்பிய உடை அணிந்து நாகரீகமாயத் தோற்றமளித்தனர். ஆதி திராவிட இனத்தைச் சேர்த்த புத்திக் கூர்மையுள்ள சிறுவாகளுக்கும் ஐரோப்பிய முறையிலான ஆடை அணிவித்து சட்டைக்காரரோடு சமத்துவமாய் நடத்தப்பட்டனர். இவர்கள் சூத்திரச் சிறுவர்களைவிட உயர்ந்தவர்களாய்க் கருத்தப்பட்டனர். கலப்புத் திருமணம் பல்வேறு ஜாதியினருக்குள் நடைபெற்றது. ஆனால் சூத்திரர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்குமிடையே கலப்புத் திருமணம் நடைபெறவில்லை.
பல ஜாதியினர் சபையில் இருந்தபோதிலும் சீகன்பால்க் மிகத் திறமையாக அனைவரையும் ஒற்றுமையுடன் பரிபாலித்து வந்தது, அவர் உலக இரட்சகர் கிறிஸ்துவிடம் கற்ற பாடமேயன்றி வேறல்ல.
சீகன்பால்க் கட்டிய முதல் ஆலயம்
சீகன்பால்க் இந்தியாவில் (தரங்கம்பாடி) ஊழியம் செய்ததின் பலனாய் சபை ஏற்பட்டதென்று பார்த்தோம். அவர் வந்த பதின்மூன்று மாதங்களில் அழகிய ஆலயம் ஒன்றினைக் கட்டினார். 1707ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ம் தேதி அவ்வாலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று அவர் (சங்.122:6) எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள். உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக! என்ற வசனத்தின்பேரில் தமிழில் அருளுரை ஆற்றினார்.
இதுதான் இந்தியாவில் இந்தியருக்காகக் கட்டப்பட்ட முதல் கிறிஸ்தவ ஆலயம். (1680ம் ஆண்டில் சென்னைப் பட்டணத்தில் இந்தியாவின் முதல் புரட்டஸ்டான்ட் ஆலயம் கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அவ்வாலயம் ஐரோப்பியர்களுக்காகக் கட்டப்பட்டது)
சீகன்பால்க் சுமார் ஆறுமாத காலம் சென்னைப் பட்டணத்தில் சுவிசேஷ ஊழியம் புரிந்துள்ளார். அப்போது அங்கிருந்த புரஸ்டாண்ட் ஆலயத்தில் அருளுரை ஆற்றியிருக்கக் கூடும். அதன் பின்னர் உடனடியாக தரங்கம்பாடியில் தமிழருக்காக ஆலயம் கட்டப்படவேண்டிய தேவையை உணர்ந்து விரைவில் ஆலயத்தைக் கட்டியிருப்பார் என்று நம்பிடலாம்.
தாய்நாடு சென்று வருதல்
கொன்றிட வந்தவர்கள் வெட்கித் திரும்புதல்
1710 ஆம் ஆண்டு சென்னை சென்று நண்பர்களைச் சந்தித்ததோடு இந்துக்கள் மத்தியில் ஊழியம் செய்தார். 1711 ஆம் ஆண்டிலும் சென்னைக்குச் சென்றார். இரண்டாம் தடவை சென்னைக்குச் சென்றபோது முன்னிலும் ஆர்வமாய் கிராமங்களுக்குச் சென்று சுவிசேஷம் கூறினார். தெலுங்கு பிராமணர்கள் இவரை அதிகமாய் எதிர்க்கலாயினர்.
ஒருநாள் கிராமங்களில் சுவிசேஷம் கூறிவிட்டு மாலையில் ஒரு சத்திரத்தில் தங்கினார். சீகன்பால்க்கோடு வேறு தமிழ் நண்பர்கள் இருந்தனர். களைப்பின் மிகுதியால் சீகன்பால்க்கும் நண்பர்களும் தூங்கிவிட்டனர். நள்ளிரவில் அங்கு சிலரது காலடி ஓசையால் தாவீது என்பவர் விழித்துக்கொண்டார். அவர் வழித்துக்கொண்டாரெனினும் எழும்பவில்லை. கண்களை மூடியவாறே படுத்திருந்தார். எனவே அங்கு வந்தோர் தெலுங்கில் பேசிக்கொண்ட வார்த்தைகள் அவரது காதுகளில் விழுங்கன. தாவீது தெலுங்கு மொழி அறிந்தவராகையால் உடனே எழும்பி, சீகன்பால்க்கையும் எழும்பினார். அவர்கள் எழும்பி உட்கார்ந்தார்கள்.
ஆம்! அங்கு வந்தவர்கள் வேறு யாருமல்ல, சில தெலுங்கு பிராமணர்கள்தான். அவர்கள் அவரைக் கொன்றிடக் கங்கணம் கட்டி வந்திருந்தனர். சீகன்பால்க் அவர்களிடம் உரையாடினார், எரிச்சலுடனல்ல, அன்புடன். அவர்கள் வெட்கித் திரும்பி விரைந்தனர். தேவன் அதிசயமாய் சீகன்பால்க்கைக் காப்பாற்றினார்.
தாய்நாடு செல்லுதல்
சீகன்பால்க் நீண்ட நாட்களாய் விரும்பியவாறு 1714ம் ஆண்டு தாய்நாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றார். ஐரோப்பாவிற்குச் செல்லும் பிரயாணத்தின்போதும் அவர் ஓய்வெடுக்கவில்லை. ஐரோப்பாவிற்குச் சென்ற பின்னரும் ஓய்வெடுக்கவில்லை. பணியில் ஈடுபட்டுக்கொண்டேயிருந்தார்.
ஐரோப்பாவிற்குச் செல்லும்போது மலையப்பன் என்ற ஒரு வாலிபபனை அழைத்துச் சென்றிருந்தார். அவ்வாலிபனின் துணையுடன் கப்பல் பிரயாணத்தின்போது பழைய ஏற்பாட்டின் யோசுவாவின் புத்தகம் வரையிலும் தமிழாக்கம் செய்தார்.
ஐரோப்பாவிற்குச் சென்றதும் அங்கு பல இடங்களுக்கும் சென்று இந்தியாவில் நடைபெறும் சுவிசேஷ ஊழியத்தைப்பற்றி எடுத்துரைத்தார். இதனால் அங்குள்ளோர் இந்தியாவில் நடைபெறும் சுவிசேஷ ஊழியம் பற்றி அதிக கரிசனை கொண்டு பேராதரவு புரிந்தனர்.
இங்கிலாந்து சென்று முதலாம் ஐhர்ஜ் மன்னரையும் குடும்பத்தையும் சந்தித்துப் பேசினார். இந்தியாவிற்கு சுவிசேஷ ஊழியம் மிகமிகத் தேவையானது என்பதை அவர்களுக்கு விவரித்துரைத்தார்.
கிறிஸ்து மார்க்க கல்வி அபிவிருத்திச்சங்கத்தாரையும் கண்டு பேசினார். மற்றும் பல தனவந்தர்களையும் ஊழியத்தைத் தாங்கும் மனப்பக்குவமுடைய தேவதாசர்களையும் சந்தித்துப் பேசினார்.
டென்மார்க் அரசரைக் கண்டு பேசி குறை நிவிர்த்திக்க வேண்டினார். எனவே மன்னர், முன்னர் ஊழியத்திற்குக் கொடுத்த பொருளுதவியைவிட கூடுதல் ஒரு மடங்கு (4000 டாலர்) நிதி உதவியளித்தார்.
இந்தியாவில் கேசியஸ் சீகன்பால்க்கிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அறிந்த அரசர் கேசியசை உடனடியாக தாய்நாடு திரும்புமாறு கட்டளை பிறப்பித்தார். அன்னாருக்குப் பதிலாய் கிறிஸ்தவ சீலம் நிறைந்த பிரன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
திருமணம்
1717ம் ஆண்டு சீகன்பால்க் பக்தியில் சிறந்த ஊழிய வாஞ்சை நிறைந்த மேரியா சால்ஸ்மான் என்ற அம்மாளைத் திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பின் அன்னாரில் ஊழிய வாஞ்சை வளர்ந்ததேயன்றி குறைந்திடவில்லை.
சுகவீனம்
தாய்நாட்டில் கல்லேயில் இருக்கும்போது திடீரென நோய்வாய்ப்பட்டு மரணத்தின் தலைவாயில் வரையிலும் சென்றார். ஆனால் கர்த்தரின் ஊழியம் அவர்மூலம் இன்னமும் அதிகமாய் நடைபெற வேண்டியதிருந்தமையால் கர்த்தர் தம் கரத்தை நீட்டி அவரைத் தொட்டு சுகமளித்தார்.
இந்தியாவிற்குத் திரும்புதல்
சீகன்பால்க் புது ஜோடியாய் இந்தியாவிற்குத் திரும்பினார். (1716ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தரங்கம்பாடியில் வந்து சேர்ந்தார்) மக்கள் திரள் கூட்டமாய்ச் சென் குதூகலத்துடன் வரவேற்றனர். கேசியசுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டிருந்த பிரன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றார்.
சீகன்பால்க்கின் திருப்பணிவிடையும் கிறிஸ்துமீது நாட்டம் கொண்ட தமிழர்களும்
எருசலேம் ஆலயம்
தரங்கம்பாடியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வளர்ந்ததால் முன்னர் கட்டிய எருசலேம் ஆலயம்போதுமானதாக இல்லை. எனவே புதியதொரு எருசலேம் ஆலயத்திற்கு 9.2.1717ல் அஸ்திபாரமிட்டார். அன்றைய தினம் அவர், போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவையல்லாமல், வேறே அஸ்திபாரத்தைப்போட ஒருவராலும் கூடாது என்ற 1.கொரி.3:11 வனத்தை ஆதாரமாகக் கொண்டு அருளுரையாற்றினார். இவ்வாலயக் கட்டுமான வேலை முடிந்து 11.10.1718ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்கு புதிய எருசலேம் ஆலயம் என்று பெயர் சூட்டினார். இன்றும் இவ்வாலயம் தரங்கம்பாடி ராஜவீதியில் கம்பீரமாய்த் தோற்றமளிக்கிறது.
முதல் வேதசாஸ்திரப் பாடசாலை
கிறிஸ்து மார்க்கத்தின் நற்செய்தியை ஏராளமானோருக்குக் கூறி அவர்களைக் கிறிஸ்து வண்டையில் கொண்டு வருவதற்கு அநேக ஊழியர்கள் தேவைப்பட்டனர். ஊழியர்களுக்குப் பயிற்சி தேவைப்பட்டது. எனவே ஊழியம் செய்திட முன் வருவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேதசாஸ்திரப்பாடசாலை ஒன்று முதல்முதல் தரங்கம்பாடியில் 23.10.1716ல் ஏற்படுத்தினார். இதற்கு செமினெறி என்று பெயர். இங்கு பயிற்சி பெற்றோர் உபதேசியார்களாகவும் ஆசிரியர்களாகவும் பணி செய்திடலாயினர்.
பள்ளிக்கூடங்கள்
திருக்கடையூர், சீர்காழி, சிதம்பரம், கடலூர் இடங்களில் பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தினார். அவ்வட்டாரத்து மக்கள் இதனால் பெரும் நன்மையடைந்தனர்.
சொக்கநாதன் குடும்பம்
சீகன்பால்க் இந்தியாவிற்கு திரும்பி வந்ததும் ஏழு குடும்பத்தினர் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தனர். இவர்களது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அவர்களை வேத அறிவில் பரீட்சித்து சீகன்பால்க் இவர்கள் அனைவருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார். இதில் கடலூரைச் சேர்ந்த சொக்கநாதனின் குடும்பமும் ஒன்றாகும்.
சிவபெருமாள் செட்டியார்
சீகன்பால்க்கின் ஊழியத்தின்மூலம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவரானார். சிவபெருமாள் செட்டியார். இவரது ஞானஸ்நானப் பெயர் அந்திரேயா. இவர் சீகன்பால்க் மீண்டும் இந்தியாவிற்கு வந்தபோது, அவருக்கு ஊழியத்தில் பெரிதும் உதவியாயிருந்தார்.
மலையப்பன்
சீகன்பால்க்கின் கடற்பிரயாணத்தின்போது புதிய ஏற்பாட்டைத் தமிழாக்கம் செய்ய உதவியாயிருந்தவர் மலையப்பன். இவர் உண்மையுள்ள தொண்டர். விசுவாசத்தில் நிலைத்திருந்தவர் (முன்னர் கூறப்பட்டுள்ளது).
ராயப்பன்
தலைமுடி சிங்காரிக்கும் தொழிலாளி. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவரானார். திடீரென நோய்வாய்ப்பட்டு மரித்துப்போனார் (முன்னர் கூறப்பட்டுள்ளது).
முதலியப்பன்
சீகன்பால்க்கிற்கு முதன் முதல் தமிழ் கற்றுக்கொடுத்த முதுபெரும் தமிழறிஞர். சீகன்பால்க்க்கை தரையில் விரலால் எழுதப் பழக்குவித்த பின்னர் தமிழ்ச் சுவடிகளைப் படித்திடக் கற்றுக்கொடுத்தார். இம்முதியவர் இந்து சமயமே மிகச் சிறந்ததென எண்ணம் கொண்டிருந்தவர். ஆனால், சீகன்பால்க்கோடு ஏற்பட்டத் தொடர்பால் அவ்வெண்ணம் சிறிது சிறிதாக மங்கியது. சீகன்பால்க்கின் பிரசங்கங்களையும் குணசீலங்களையும் ஊன்றிக் கவனித்து வந்த முதலியப்பன், தன் மார்க்கத்தைவிட கிறிஸ்து மார்க்கத்தில் சிறப்பு மிக உள்ளது. கிறிஸ்துவுக்கு ஒப்பானவர் ஒருவருமில்லை என்பதனைக் கண்டுகொண்டார். கிறிஸ்து மார்க்கமே சத்தியமார்க்கம் என்பதனை தெளிவாய்க் கண்டுகொண்டார். எனவே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவரானார்.
அழகப்பன்
அரசு மொழி பெயர்ப்பாளராக இருந்த ஒருவரின் பெயர்தான் அழகப்பன். இவரை அழகப்பன் என்று பிறர் அழைத்தனர். சீகன்பால்க் தமிழ் படித்திட அழகப்பனின் உதவியும் கிடைத்தது. இவர் போர்த்துக்கீசிய மொழி, ஜெர்மன் மொழி, டேனிஷ் மொழி, டச்சு மொழி ஆகியவற்றைக் கற்றிருந்த பேரறிஞர். இருவரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்த வராயினர். பல மொழிகளைப் படித்திருந்த இப்பேரறிஞர் தமிழர் என்பதை அறியும்போது உள்ளம் பேருவகை அடைகிறதல்லவா!
சின்னப்பிள்ளை
ஆறுமுகம் பிள்ளையின் தம்பி கிறிஸ்துவை ஏற்றுக்னெகாண்டு கிறிஸ்துவுக்காக உழைத்திட தன் லௌகீக வேலைகளை உதறி எறிந்தார். உபதேசியாராய் நல்லூழியம் செய்து இவ்வுலக ஓட்டத்தை முடித்தார்.
ஆறுமுகம் பிள்ளை
இவர் சீகன்பால்க்கிடம் ஞானஸ்நானம் பெற்ற சொக்கநாதப்பிள்ளையின் மகன். இவர் ஆரோன் என்று ஞானஸ்நானப் பெயர் பெற்றார். திடகாத்திரமான வாலிபன். ஞானஸ்நானம் பெறும்போது வயது இருபது.
ஆறுமுகம் பிள்ளை மார்க்க விஷயங்களில் ஒரு தீவிரவாதி எனலாம். ஞானஸ்நானம் பெறும் முன்னர் இந்து மார்க்கத்தில் எத்துணை அளவு பற்றள்ளவராயிருந்தாரோ, அதனை விடப் பன்மடங்கு பற்றள்ளவராய் கிறிஸ்துவுக்குத் தொண்டாற்ற ஆர்வமுள்ளவரானார்.
இவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மெய்க்கிறிஸ்தவரானதும் நன்நடக்கையிலும் அறிவிலும் சிறந்து காணப்பட்டார். இவரது ஆர்வமும், செயல் திறனும், பக்தி வாழ்க்கையும் சீகன்பால்க்கின் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்தக்கொண்டன. எனவே இவரைப் போதகராக நியமிக்க விரும்பினார். அதற்காகப் பயிற்சி பெற்றிடச் செய்தார். பின்னர் 1733ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி அவர் போதகாபிஷேகம் செய்யப்பட்டார்.
இவரை அனைவரும் அன்புடன் ஆரோன் நாட்டையர் என்று அழைக்கலாயினர்.
ஆரோன் என்ற ஆறுமுகமமு பிள்ளை முதல் இந்தியப் போதகர். தமிழர்களிலே ஒருவர்தான் இந்தியாவில் முதல் போதகரானார் என்பது தமிழர் இனத்திற்கே பெருமை தருகிற மகிழ்ச்சி கொடுக்கிற ஒரு செய்தியல்லவா?
இறுதிப் பயணம்
ஏற்கெனவே நோய் கொண்ட உடலையுடைய சீகன்பால்க் ஓய்வின்றி உழைத்தமையால் நோயின் கொடுமை அதிகரிக்கலாயிற்று. ஆனால் மனந்தளரவில்லை. நோய் கொண்ட உடலிலும் திடஉறுதியான மனம் இருக்கும். உத்தம உன்னதக் கிறிஸ்து இவ்விதமானோரையும் உபயோகிக்கிறார் என்பதற்கு சீகன்பால்க் ஓர் அத்தாட்சி. பணியினை இவர் தொடர்ந்து செய்துகொண்டேயிருந்தார்.
இவரது பணி மிக விரிவான பணி என்று நிர்வாகக் குழுத்தலைவராய் கோப்பன்கேகன் நகரிலிருந்த குறுகிய நோக்கமுடைய வென்ட் குற்றம் சாட்டினார். சீகன்பால்க்கின் ஊழியம் பரவலாய் நடைபெற்றுப் பயன்தருவதைச் சகித்திட முடியாத உள்ளத்தினராய் வென்ட் இவர்மீது ஒன்றன்பின் ஒன்றாகப் பல குற்றச்சாட்டுக்களைக் கூறிடலானார்.
குற்றச்சாட்டுகள்
டேனிஷ் மிஷனுக்கு (கல்லே மிஷன்) வீடு வாங்கியது குற்றம்.
பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தியது குற்றம்.
அனாதையர் இல்லம் ஆரம்பித்தது குற்றம்.
மிஷனுக்குப் புரையிடம் வாங்கியது குற்றம்.
ஆலயம் அமைத்தது குற்றம்.
வேதபாடசாலை ஏற்படுத்தியது குற்றம்.
காகிதத் தொழிற்சாலை எற்படக் காரணமாயிருந்தது குற்றம்.
அச்சகம் ஏற்படுத்தியது குற்றம்.
புத்தகம் வெளியிட்டது குற்றம்.
தமிழருக்குத் தொண்டு செய்தது குற்றம்.
தமிழருக்குக் கிறிஸ்துவை உபதேசித்தது குற்றம்.
இவையெல்லாம் குற்றம்தானா இல்லையா என நீங்களே தீர்ப்பளியுங்கள்.
சீகன்பால்க் இக்குற்றச் சாட்டுக்களையும் சுமந்து கொண்டு மனந்தளராது பணிபுரிந்தார். எனினும் மனுஷீகத்தில் சற்றுக் கவலைகொண்டார். ஏற்கெனவே அவரிடம் தஞ்சம் புகுந்த நோயின் தொல்லை அதிகரித்தது. அன்னாரின் நிலைமை மோசமாயிற்று. 1718ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தையொட்டி அதிக சுகவீனமடைந்தார். ஆனால் அவரைக் கொண்டு இன்னமும் சில காரியங்களைச் செய்ய வேண்டியிருந்தமையால் கர்த்தர் சுகமளித்தார். உபயோகித்தார். எனவே கிறிஸ்மஸ், புதுவருட ஆராதனைகளில் உற்சாகமாய்ப் பிரசங்கித்தார்.
பின்னர் மறுபடியும் சுகவீனம் அதிகரித்தது. மரணம் சீக்கரமாய் சம்பவிக்கும் என்பதை உணர்ந்த சீகன்பால்க், குருன்ட்லர் ஐயரிடம் எல்லாப் பொறுப்புகளையும் ஒப்படைத்தார்.
சரீர பெலவீனத்தின்போதும் தினமும் காலையிலும் மாலையிலும் குடும்ப ஜெபம் நடத்துவதை நிறுத்தவில்லை. ஆம்! என்றும் போல் அன்று, பெப்ரவரி மாதம் 23ம் தேதி காலையிலலும் (1719) குடும்ப ஜெபம் நடத்தினார். பின் ஒன்பது மணிக்கு மூச்சுத் திணறுவதை உணர்ந்தார். மரணம் நேரிடுவதற்கான அறிகுறி தோன்றியது. சீகன்பால்க்கின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் சூழ இருந்து கண்ணீர் பொழிந்து கொண்டிருந்தனர். குருண்ட்லரும் மனைவியாரும் வந்தனர். உருக்கமாய் ஜெபித்தனர்.
அந்த வேளையில் அவர் தன் கண்களை மூடியவாறே அதோ, அங்கே ஒரு வெளிச்சம் தோன்றுகிறதே! அதென்ன? அவ்வெளிச்சம் என் கண்களுக்கு அழகாகத் தோன்றுகின்றது என்று கூறினார். சற்று நேரம் நிசப்தம் நிவியது. பின்னர் சூழ இருந்தவர்களிடம் என்னை மீட்டுத் தாங்கிய என்ற பாடலைப் பாடுமாறு சொன்னார்.
அவர்கள் பாடினர், பின் என்னை நாற்காலியில் உட்கார வையுங்கள் என்றார். நாற்காலியில் உட்கார வைத்தனர்.
ஆம்! உட்கார்ந்தவாறு பரம எஜமானிடம் சென்று விட்டார். அடுத்த நாள் அவருடைய சடலம் புதிய எருசலேம் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சிலநாட்களுக்குப் பின் குருண்டலர் மரித்தார். இருவரது மரணத்திற்கும் வென்ட் என்பார் காரணமாயிருந்தார் என்று சொல்லப்படுகிறது.













