(BY GOD´S GRACE ALONE)
முன்னுரை
பவுல் அப்போஸ்தலன் மற்றும் ஆதி கிறிஸ்தவர்களின் நற்செய்தி அருளுரைகள் வைதீக யூதர்களால் அடிக்கடி பலமாக எதிர்க்க்கப்பட்டது. இது அவர்களது ஒழுக்கமற்ற வாழ்க்கையினாலா? நிச்சயமாகவே இல்லை! அல்லது அவர்கள் நற்கிரியைகளைப் புரியத் தவறியதாலா? அல்லவே அல்ல. பின் ஏன் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர்? அவர்கள் போதித்த நற்செய்தியாவது அம்மக்களது பெருமைக்கு ஊறுவிளைவித்ததால் அன்றோ?
ஆம், உலகில் மிகச் சிறந்த மனிதனுக்கும் இரட்சிப்பானது கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் வெளிப்பட்ட தேவ கிருபையினாலேயே வர இயலும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இன்று பலரால் நிர்ப்பந்திக்கப்படுகிற கருத்தாகிய இரட்சிப்பிற்கு மனித சித்தத்தின் தீர்மானம் அவசியம் என்பது அவர்கள் அறியாததன்று. ஒருவனை கடவுள் அங்கீகரிக்க அவனது சுயதீர்மானம் அவசியம் என்கிற இன்றைய தவறான கொள்கை அவர்கள் போதனைக்கு மாறானது. இரட்சிப்பிற்கு அவர்கள் ஒரே ஒரு வழியைத் தான் அறிந்திருந்தனர். அது தேவனுடைய கிருபையின் வழியே. தேவ கிருபையைப்பற்றிய இப்போதனையானது அவர்களது பிரசங்கத்தில் சுருக்கமாக அல்ல, அதன் முழுமையிலுமே வியாபித்திருந்தது. அது சுடர்விட்டு மிளிர்ந்தது. ஆட்சி புரிந்தது. வெற்றி சிறந்து இயங்கியது. இதனை மட்டுமே அவர்கள் அறிந்தனர். இரட்சிப்பு மனித தகுதியுடைமை என்கிற எண்ணம் அவர்களுக்கு முற்றிலும் தவறாகவே இருந்தது. மேலும் சீரிய நமது நற்செயல்களும், பெறற்கரும், பண்புகளும் மக்கள் மத்தியிலே நமக்குப் புகழ்தேடி தவருவனவாக இருப்பினும் அவை இரட்சிப்புக்குச் சிறிதும் உதவா. கடவுளின் பார்வையிலே அனைவரும் குற்றமுள்ளவர்களும், ஆக்கினைக்குட்பட்டவர்களும், அழிவிற்குரியவர்களும் என்றே அப்போஸ்தலர் போதித்தனர். எனவே, தேவன் நம்மீது அருள்கூர்ந்து இரக்கம் வைத்தால் மட்டுமே மீட்புக்கு வழி உண்டு.
இன்று இப்போதனை அநேகருக்கு இடறலாகவும் பாதகமாகவும் இருக்கிறது. சன்மார்க்கமும், சமூக மதிப்பும் பெற்றவர்கள் மனித முயற்சியினால் வரும் பரிசுத்தத்திற்கு முக்கியத்துவம் அளித்து கிருபையைப் புறக்கணிக்கின்றனர். இவர்கள் கிருபையின் போதனை மக்களின் ஓழுக்கக்கேட்டை உருவாக்கும் எனப் பொய்யாக குற்றம் சாட்டுகின்றனர்.
மனித தகுதி, இரட்சிப்பிற்கு உதவாது என்று மனித பெருமையைத் தாக்குவதோடு, கடவுள் கிருபையுள்ளவராயிருப்பதே, இரட்சிப்பிற்கு ஒரே வழி என நிலைநாட்டுகிறது. மேலும் இப்போதனையை மறுப்பவர்கள் நித்தியத்தின் சாபத்திற்கு உட்பட்டவர் என்றும் தீர்க்கிறது. ஆகவே இக் கிருபையின் வழியைப் போதிப்பவர் குறுகிய மனப்பான்மையுடையவர் என மற்றவர் பழிக்கின்றனர். இந்நிலையில் மாறுபட்ட கருத்துடையவர்களை அவர்கள் வழிக்கே விட்டுவிடுவது நலமாக தோன்றும். ஆனால் பவுல் அப்போஸ்தலன் ‘நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்;டவனாயிருக்கக்கடவன்” என அழுத்தமாக எடுத்துரைக்கிறார் (கலா.1:8).
ஆதிகிறிஸ்தவர்கள் எடுத்துரைத்த நற்செய்தியானது சடங்காசாரமற்றிருந்தது. அது மனிதனின் சுய தகுதிக்கு மதிப்புக்கொடுக்கவில்லை. தகுதியற்றவர்களுக்கும் அவலமுற்றோருக்குமே உரித்தாயிருந்தது. நம்முடைய ஆன்மீக நிலையைக் குறித்து தன்னில் சுய திருப்தியடையவர்களுக்கு அச்செய்தியானது ஏற்றதாகவில்லை. இதன் காரணமாகத்தான் ஆணவமிக்க மதத் தலைவர்கள் பவுல் அப்போஸ்தலனை அடிக்கடி தாக்கித் துன்புறுத்தினர்.
சீர்திருத்த திருச்சபைகளுக்கும் ரோமன் கத்தோலிக்க கோட்பாட்டிற்கும் உள்ள அடிப்படை வேற்றுமையும் இதுவேதான். தனது சாதனையின் பேரிலான அகந்தை மனிதனின் மனதில் குடிகொண்டிருக்குமளவும் அவன் அப்போஸ்தலர் எடுத்துரைத்த கிருபையின் கோட்பாட்டைப் புரிந்துகொள்ளாமல் அதை எதிர்த்துக்கொண்டேயிருப்பான். ஆனால் கிருபையின் நற்செய்தியைச் சற்று மாற்றி இரட்சிப்புக்கு மனிதனின் நற்கிரியைகளும் பயன்படும் என்று எங்கெல்லாம் நம்பப்படுகிறதோ அங்கெல்லாம் பரிசுத்தத்திற்குப் பதில் இலட்சையே வளருவதே நாம் காண்கிறோம்.
தங்கள் சுய தகுதியைச் சார்ந்துள்ள மக்கள் தேவனுடைய கிருபையினால் மட்டுமே இரட்சிப்பபைப் பெற முடியும் என்ற கோட்பாட்டினை அவமதிக்கும் வேளையில், ஆவியின் எளிமையுள்ளவர்கள் அதனைப் பெரிதும் ஆசிப்பர் அன்றோ? பரிசுத்த ஆவியானவரின் மூலமாக பாவ உணர்ச்சுp பெற்ற ஒருவருக்குக் கிருபையின் நற்செய்தியானது பேருவகையை அளிக்கிறது. இந்த நற்செய்தியை அறியாத மக்கள் அது கவலையீனமான வாழ்க்கையை உண்டுபண்ணும் என மனதில் கற்பனை செய்கின்றனர். ஆனால் உண்மையில் கிருபையே மக்களைப் பரிசுத்ததப்படுத்துகிறது என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்.
கிருபையின் மூலம் இரட்சிப்பு என்ற கோட்பாட்டினைக் கொள்கையளவில் மட்டுமே ஏற்றுக்கொண்டவர்கள் கவலையின்றி வாழ்வது சாத்தியமே. இந்த நற்செய்தியின் இனிமையை அவர்கள் ஒருபோதும் உய்த்துணராதவர். அதன் வல்லமையைத் தமது சித்தத்தில் அறியாதவர். ஆகவேதான் பாவிகளின் இரட்சிப்பில் விளங்கும் சுவிசேஷத்தில் வல்லமையையும், மாட்சிமையையும், மகத்துவத்தையும் ஈண்டு எடுத்துரைக்க நான் விரும்புகிறேன்……… ‘கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது” (ரோமர் 5:21) என்ற பவுல் அப்போஸ்தலனது கூற்றினை விளக்கிக் கூற முயற்சிக்கிறேன். இச்சத்தியத்தை எடுத்தியம்புவதற்கு ஏற்ற தெய்வீக ஞானத்தை எனக்கும் ஆர்வத்தோடு படிக்கும் மனதை உங்களுக்கும் தேவன் தந்தருள மன்றாடுகிறேன்.
பொருளடக்கம்
கிருபையும் பேரின்ப வாழ்வும்
கிருபை என்பது யாது?
கிருபையினால் மட்டுமே இரட்சிப்பு
தெரிந்துகொள்ளுதல்
கிருபையும் அழைப்பும்
கிருபையும் பாவமன்னிப்பும்
கிருபையும் நீதிமான்களாக்கப்படுதலும்
கிருபையும் நமது சுவிகாரமும்
கிருபையும் பரிசுத்தமாக்கப்படுதலும்
பரிசுத்தமும் நற்கிரியைகளும்
கிருபை அருளும் பாதுகாப்பு
கிறிஸ்துவின் தன்மையால் பலிதமாகும் கிருபை
கிறிஸ்துவின் பணியும் கிருபையின் வெற்றியும்











