- கிருபை என்பது யாது?
அப்போஸ்தலனாகிய பவுல், ‘கிருபை” என்ற சொல்லை நற்கிரியை, தகுதியுடைமை என்பதற்கு எதிராகப் பயன்படுத்துகிறார். கிருபையினாலே ‘விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினாலே உண்டானதல்ல” (எபேசி.2:8-9). ஆம், முற்றிலும் அருகதையற்றவர்கள்மேல் பொழியப்படும் அன்பே கிருபையாகும். அது எவ்விதத்திலும் சம்பாதிக்கப்படாத சம்பாதிக்க முடியாத தயவும் பரிவுமாகும். துன்பமும் வேதனையும் அடைந்த ஒருவர்பேரில் காட்டப்படும் அன்பையே நாம் ‘இரக்கம்” என அழைக்கிறோம். அதுபோல் கிருபையும் பெறுகிறவரது அபாத்திர தன்மையை மறைமுகமாக எடுத்துக்காட்டுகிறது. நமது தகுதியற்ற நிலையில் நாம் பெறுவதே கிருபை. நாம் உரிமையுடன் பெற்றுக்கொள்ளும் எதுவுமே கிருபையினால் பெறுவது ஆகாது. ஒரே செயலில் கிருபையையும் தகுதியையும் இணைத்துவைக்க முடியாது. இருளும் ஒளியும்போல் அவை நேர் எதிரானவை. ஆம், ‘அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினால் உண்டாயிராது. அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது. அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே” (ரோமர் 11:6).
ஆனபடியினால்தான் நாம் தேவனுடைய கிருபையைப் பெறவதாகக் கூறுகிறோம். அப்படிக் கூறுமிடத்து நாம் அதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் அதனை நாம் புண்ணியங்களினால் சம்பாதிக்கவில்லை என்றும் உறுதிப்படுத்துகிறோம். புதிய ஏற்பாட்டின்படி கிருபையை பின்வருமாறு விளக்குகிறோம்.
அது கடவுளின் நித்திய மற்றும் முற்றிலும் இலவசமான தயவு. அது தகுதியற்றவருக்கும் குற்றத் தீர்ப்படைந்தவருக்கும் அளிக்கப்படும் நித்திய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினால் வெளிப்படுகிறது (அறியப்படுவது).
பின்வரும் பகுதிகளில் இந்த நித்திய, ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் எவை என்பதைப் பார்ப்போம். ஆனால் இப்போது தேவ கிருபை நித்தியமானது என்பதை நினைவில் நிறுத்துவோம்.
கிருபையானது எவ்விதத்திலும் மனித தகுதியைச் சார்ந்ததல்ல. அது கடவுளின் சித்தத்தையே முழுவதும் சார்ந்தது. ஒருவரும் தனது புண்ணியங்களால் அதனைப் பெறவும் இயலாது. மற்றும் தனது குற்றமிகுதியால் அதனைப் பெறமலோ அல்லது இழந்து போகவோ முடியாது. அது மனிதனின் செல்வாக்கிற்கும் முயற்சிக்கும் அப்பாற்பட்டது. அருளப்பட்ட கிருபையை எதுவுமே மேற்கொள்ளவும் முடியாது. ‘ஆம், அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன். ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” என்றே நமது ஆண்டவர் அமுத வாக்கு அருளியுள்ளாரன்றோ? (எரேமி.31:3) ஆ! நமது இரட்சிப்பின் அடிப்படை எத்துணை மகிமை வாய்ந்தது!
தேவ கிருபையானது அழகிய உடையின் ஓரத்தில் நெய்யப்பட்ட பொற்சரிகையுமல்ல. பலவர்ண அங்கியில் அலங்காரமாகத் தைக்கப்பட்ட சித்திரப் பூ வேலையுமல்ல. ஆனால் ஆசரிப்புக் கூடாரத்தில் உடன்படிக்கை பெட்டியின் மேலுள்ள கிருபாசனத்தைப் போன்று அது முழுமையுமே தூய பசும் பொன்னால் சுடர் ஒளி வீசுவது. எனவே நற்கிரியைகளின் புண்ணியத்தின் மூலமாக தேவ கிருபையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று இறுமாந்திருப்பவர் எத்தனை பெரிய ஏமாற்றமடைவர். தேவ கிருபை தனக்கு உதவியாய் வரும் அனைத்தையும் தள்ளித் தானாகவே செயற்படுகிறது. அதற்கு நற்கிரியையினது உதவி அவசியமே இல்லை. மனிதனுடைய அற்பக் கிரியை சர்வ ஏகாதிபதியமுள்ள இறைவன் தமது கிருபையை அருளுவதற்கு உதவக்கூடுமென்று கூறுவது அவருக்கு எத்துணை இழுக்கு! ஒன்று கிருபை நமது எல்லா மனித முயற்சிக்கும் செல்வாக்கிற்கும் அப்பாற்பட்டதாயிருக்கவேண்டும். இல்லாவிடில் அது கிருபை அல்லவே!
‘இயேசுவே, கிருபாசனபதியே, கெட்ட
இழிஞன் எனை மீட்டருள்
இயேசுவே, கிருபாசனபதியே.”










