- கிருபையினால் மட்டுமே இரட்சிப்பு
‘கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது” (ரோமர் 5:21). கிருபை ஆளுகிறது என பவுல் கூறுகிறார். இவ்வசனத்தில் கிருபை ஓர் அரசனுக்கு ஒப்பிடப்படுகிறது. முந்திய வசனங்களில் பாவமும் அரசனாகக் கூறப்பட்டுள்ளது. அழிவுக்கு ஏதுவான ஆற்றலுடன் பாவம் தோன்றி மரணத்தைப் பிறப்பிப்பது போல மேற்கொள் ளமுடியாத வல்லமையுடன் கிருபை தோன்றி அன்பினால் இரட்சிப்பை அருளுகிறது. ‘பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாயப் பெருகிற்று” (ரோமர் 5:20). எனவே கிருபையானது பாவத்தையும் அடக்கி ஆள்கிறது. கடவுள் தமது தயவுள்ள சித்தத்தால் இரட்சிக்கிற அனைவரும் நிச்சயமாகவே பூரணமாக இரட்சிக்கப்படுகின்றனர். தேவன் கிருபையாக மக்களைப் பாவத்தின் பிடியிலிருந்து மீட்டு அவர்களுக்கு ஆவிக்குரிய ஆற்றலை அருளிய பின்னர் அவர்களே தங்களைப் பரிசுத்தம் ஆக்கிக்கொண்டு பரலோகம் வந்து சேரும்படி விட்டுவிடுகிறதில்லை. கடவுளின் அருட்பணி இவ்விதம் அரைகுறையாக இருக்குமானால், மீட்பின் முடிவு சந்தேகத்திற்குரியதாகிவிடும். கிருபை முற்றிலும் ஆளுகிறதாய் இருக்க முடியாது. அதே வேளையில் தம்மைத்தாமே பரிசுத்தமாக்கிக்கொள்ள முற்படுவோர் அப்படி வெற்றி பெறுவதாக வைத்துக்கொண்டால் அதிக மனமேட்டிமை கொள்வர். அது கிருபைக்கு நேர் முரணானது.
கிருபை ஆட்சி செலுத்த வேண்டுமானால் அது இரட்சிப்பின் முழு ஆதாரமும் ஆற்றுலுமாயிருத்தல் வேண்டும். கடவுள் தமது தயவுள்ள சித்தத்தினால் ஒரு பாவியின் மீட்பைத் துவக்குவதுமட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து முற்றுப் பெறவும் செய்யவேண்டுமன்றோ? அப்பொழுது மெய்யாகவே ‘கிருபை ஆட்சி செலுத்துகிறதாக கூறலாம். இந்த அதிசயமான மீட்பின் நிச்சயம் தேவனை மகிமைப்படுத்துகிறதன்றோ?”.
மற்றெல்லாவற்றையும் விட நமது நிர்ப்பந்த நிலைக்குக் கிருபையே உகந்ததாய் இருக்கிறது. பாவம் நம்மீது கொடுங்கோலாட்சி புரிந்து நம்மை நித்திய மரணத்திற்குக் கொண்டு போவதால், நமது சுயமுயற்சியால் இரட்சிப்பை அடைவோம் என்பதற்கு என்ன நம்பிக்கை உண்டு. வெட்கத்திற்குரிய பல தோல்விகளால் நமது மனட்சாட்சி நம்மைக் குற்றப்படுத்தி அச்சுறுத்தும்போது நாம் மனமுறிந்து போவதில்லையே? கவனியுங்கள்! இரட்சிப்பு தேவ கிருபையினால் மட்டுமே என்பதை மறந்துவிடாதீர். பிதாவின் சித்தத்திற்கு கிறிஸ்துவின் பரிபூரண கீழ்ப்படிதலையே தேவ கிருபை ஆதாரமாக கொண்டுள்ளது. அவரது கீழ்படிதலின் ஒப்பற்ற மேன்மையை பாவம் ஒருபோதும் அழிக்க முடியாது. ஆகையினால் எல்லா அபாத்திரத்தையும் மேற்கொண்டு கிருபை மக்கள்மீது ஆட்சி செலுத்துகிறது. தகுதியற்றவர்களின் பொருட்டே கிருபை அபரிமிதமாய்ப் பொழியப்படுகிறது. ஒருவன் எத்தனை இழிந்த கொடுர பாவியானாலும் மாட்சிமையான கிருபையின் ஆட்சியில் அவனுக்கு இரட்சிப்பின் நம்பிக்கையுண்டு. இது ஓரு மாபெரும் அதிசயம் அன்றோ! ஆ! இது எத்தனை இன்பமானது!
இதுவரையிலும் மனித இரட்சிப்பின் கிருபையின் பொதுவான ஆளுகையை எடுத்துக்காட்ட முயற்சித்துள்ளேன். ஆயினும், தெரிந்துகொள்ளுதல், அழைப்பு, மன்னிப்பு, நீதிமானாக்கப்படுதல், மகவேற்பு, பரிசுத்தமாக்கப்படுதல் மற்றும் விடா பாதுகாப்பு ஆகியவற்றில் தனித்தனியாக கிருபை எவ்விதம் ஆளுகிறது என்பதையே தொடர்ந்து காண்போம்.
‘கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்.”










